ஆலோசனை நேரம்
நல்லை. இ. ஆனந்தன்
1. திண்டுக்கல்லுக்குப் புதிய ஆயர் கிடைத்துவிட்டாரே....
- திருமதி. சுகன்யா, உடுமலைப்பேட்டை.
ஆமாங்க்கா, இருபது மாதங்கள் காத்திருப்புக்குப் பின் இறைவன் தந்த கொடைதான் மேதகு. ஆயர். தாமஸ் பால்சாமி. திண்டுக்கல் பகுதி பங்குகளில் பங்குத்தந்தையாகப் பணியாற்றியவரே அதன் ஆயராக உயர்த்தப்பட்டிருப்பது எத்துணை மேலானது. இருபது மாதங்களும் அப்போஸ்தலிக்கப் பரிபாலகராக மறைமாவட்டத்தை வழிநடத்திய அருட்திரு. கே. எஸ். ஆரோக்கியசாமி அடிகளாரும் பாராட்டுக்குரியவரே. கடவுள் தாமதமாகத் தந்தால் தாராளமாகத் தருவார் போலும்.
2. நான் திருமணம் ஆகாத இளம்பெண். மிக மிக அழகானவள். ஆனால் வெளியே செல்லும்போது பிறரின் பார்வைகளும், பேச்சுக்களும், செயல்களும் என்னை மனவருத்தமடையச் செய்கின்றன. நான் என்ன செய்வது?
- செல்வி. சுந்தரிமேரி, மதுரை.
அன்புத் தங்காய்... உன் வயதில் உள்ள அனைத்துப் பெண்களும் சந்திக்கும், சாதாரண பிரச்சனை இது. அழகை ரசிப்பது உலகின் இயல்பு. ஆனால் பெண்களை கேலி செய்வது. அவர்களிடம் வெறி கொண்டவர் போல் செயல்படுவது, பாலியல் வன்முறையில் ஈடுபடுவது ஆகியவை இந்திய கலாச்சாரத்தின் கோடுகளாக, கேடுகளாக விளங்குகின்றன. இதனை தொலைக்காட்சிகளிலும், திரைப்படங்களிலும் வெளிச்சமிட்டு காட்டி அதற்கு தூண்டுதலைப் போல் அமைந்துள்ளன. ஆனால் உங்களை மிக அழகாகப் படைத்த இறைவனுக்கு நன்றி கூறுங்கள். ஆணவம் தலையில் ஏற அனுமதிக்காதீர்கள். ஏனெனில் அழகு என்பது மிகவும் தற்காலிகமானது, ஆபத்தானது. விபத்து, நோய், முதுமை இவைகள் அழகை சிதைத்துவிடக் கூடும். உங்கள் திருமணத்திற்கு பிறகு எல்லாம் சரியாகிவிடும். எனவே கவலைப்பட வேண்டாம்.
3. உலகில் அதிக ஆலயங்கள் உள்ள புனிதர் யார்?
- திரு. செபாஸ்டின், திருச்சி.
புனிதர் அல்ல, புனிதை. அவர்தான் மரியா. சனவரி முதல் டிசம்பர் வரை அவருக்குத்தான் அதிக விழாக்களை திருச்சபை எடுத்து மகிழ்கிறது. சனவரி முதல் தேதி, மரியா இறைவனின் தாய் ‡ விழா. மே மாதம் அன்னையின் மாதம், ஆகஸ்ட் 15 மரியாவின் விண்ணேற்பு விழா. செப்டம்பர் 8 மரியாவின் பிறப்பு விழா. டிசம்பர் 8 அமல உற்பவி மரியாள் விழா. எனவே ஆண்டு முழுவதுமே அன்னைக்கு விழாக்கள் எடுப்பதில் திருச்சபை பெருமகிழ்ச்சி அடைகிறது. பழங்காலத்தில் மாதாக் கோவில் எங்கே என்றுதான் வழிகேட்டுச் செல்வார்கள்.
4. கானாவூர் திருமணத்தில் எனது நேரம் இன்னும் வரவில்லை என்று இயேசு சொன்னபிற்பாடு மரியா அமைதியாக இருக்க வேண்டியதுதானே? அவர் உங்களுக்குச் சொல்வதை எல்லாம் செய்யுங்கள் என்று பணியாளர்களை அதிகாரம் செய்தது ஏன்?
- திரு. மனோகர், பாளையங்கோட்டை.
ரயில் நிலையத்தில் ரயில் வந்து நிற்கிறது. எல்லாரும் ஏறி அமர்கிறார்கள். ஓர் அம்மா மட்டும் வெளியே நிற்கிறார்கள். பெட்டிக்குள் உள்ள பயணிகள் பதைபதைக்கிறார்கள். அம்மா சீக்கிரம் ஏறி உள்ளே வாருங்கள். வண்டி இரண்டு நிமிடம்தான் நிற்கும். ரயில் கிளம்பிவிட்டால் ஆபத்தாகிவிடும் என்று அனைவருமே எச்சரிக்கிறார்கள். திடீரென்று ஒருவர் வந்து அவரை ஏற்றி உள்ளே அமர வைக்கிறார். அந்த அம்மா, நான் அமர்ந்துவிட்டடேன், நீ போய் வண்டியை எடு என்கிறார். ஏனெனில் அவர்தான் அந்த ரயிலின் டிரைவர். அந்த டிரைவர்தான் அந்த தாயின் ஒரே மகன். எல்லா காலத்திலும் மகனை அதிகாரம் செய்ய அம்மாக்களுக்கு உரிமை உண்டு. தாய்க்குக் கீழ்படிய மகன்களுக்கும் கடமை உண்டு மனோகரண்ணே. ரயில் கதை புரிந்ததா?
5. நான் கல்லூரி இளைஞன். நான் சாமியாராகப் போவதா அல்லது கல்யாணம் முடிப்பதா? எனக்கு எது நல்லது?
- திரு. ரெனால்டு, சென்னை.
இல்லறம், துறவறம் (குருத்துவம்) இரண்டுமே அருட்சாதனங்கள். ஆனால் ஏதாவது ஒன்றைத்தான் திருச்சபையில் பெறமுடியும். கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதலை துறவறத்தார் வார்த்தைப்பாடு கொடுத்து வாழ்ந்து வருகிறார்கள். இல்லறத்திலும் அதேதான். இன்பத்திலும், துன்பத்திலும், உடல்நலத்திலும், நோயிலும் (ஏழ்மை) நான் உனக்குப் பிரமபணிக்கமாயிருந்து (கற்பு), என் வாழ்நாளெல்லாம் உன்னை நேசிக்கவும், மதிக்கவும் (கீழ்ப்படிதல்) வாக்களிக்கிறேன் என மணமக்கள் வார்த்தைப்பாடு கொடுக்கிறார்கள். இரண்டு வாழ்க்கையிலும் வாக்குறுதிகளைக் கடைப்பிடித்தால்தான் வாழ்வு இனிக்கும், செழிக்கும். யோசித்து, செபித்து முடிவெடுக்கவும். வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment