17 ஆம் ஞாயிறு (24 - 07 - 2016)
தொ. நூ. 18 : 20 - 32; கொலோ 2 : 12 - 14; லூக் 11 : 1 - 13
செபத்தால் ஜெயமாக்கு
ஐந்து வயது மகன் தனது தந்தையிடம் தனக்கு யானை வேண்டும் என்று அடம்பிடிக்கிறான். தந்தை அவனது பிடிவாத குணத்தை மாற்ற முடியாமல் அவனுக்கு விலையுயர்ந்த பெரிய யானையை வாங்கிக் கொடுத்தார். மகன் மறுபடியும் தனது தந்தையை நோக்கி, தனக்கு ஒரு பானை வேண்டும் என்று வற்புறுத்திக் கேட்கிறான். பானையையும், தந்தை வாங்கிக் கொடுத்தார். அதோடு, விடவில்லை. மகன் தன் தந்தையிடம், அப்பா, இந்த யானையை இந்த பானைக்குள் போடுங்கள் என்றானாம். பெற்றோரிடம் அடம்பிடித்தால் எதையும் வாங்கலாம் என குழந்தை நம்புகிறது.
இன்றைய நற்செய்தி பகுதி, செபத்தின் பண்புகளைப் பற்றி பேசுகிறது. இதில் இயேசு கற்று கொடுத்த செபம் இடம்பெறுகிறது. பிறகு செபத்தில் இறைவன் ‡ அடியார் உறவு, உடன் நண்பர்கள், பெற்றோர் ‡ பிள்ளை போன்ற உறவு என்று விளக்குகிறார் இயேசு. இறைவன் நாம் கேட்பதைத் தருகிறார். சில வேளைகளில் நாம் கேட்கும் முன்பே தருகிறார். சில வேளைகளில் நாம் கேட்கும்பொழுது தருகிறார்; சில வேளைகளில் நாம் கேட்ட பிறகே தருகிறார். வாழ்வை வளமாக்கி, பலவீனத்திலிருந்து பலப்படுத்த, மகிழ்ச்சியில் திளைத்திட, அனைத்திலும் வெற்றி பெற இறைவனது (அருள் ஆற்றல்) அருளாற்றல் மனித குலத்திற்கு அதிகமாகவே தேவைப்படுகிறது. இறை அருளாற்றல்தான் ஜெபத்தின் வழியாக மனிதனுக்கு பொழியப்படுகிறது.
இறைவனது அன்பையும், பரிவையும், இனிமையையும், இரக்கத்தையும், உறவையும், உடனிருப்பையும், மன்னிப்பையும், மாட்சிமையையும் நன்கு உணர்ந்த, அனுபவித்த இயேசுவின் சீடர்கள், தாங்களும் ஜெபிக்க வேண்டும் என்ற ஆசையினால் இயேசுவிடம் கற்றுத்தர சொல்கிறார்கள். எரே 33 : 3 என்னிடம் மன்றாடு உனக்கு நான் செவி சாய்ப்பேன்.
செபிப்பது ஒரு பிரச்சனை அல்ல, விடாமுயற்சியுடன் செபிப்பதுதான் பிரச்சனை. சோதோம் நகரை அதன் பாவங்களுக்காக தண்டிக்க வேண்டும் என்று கடவுள் முடிவு செய்தபோது, ஆபிரகாம் கடவுளிடம் அந்த நகர மக்களை மன்னிக்குமாறு விடாது கெஞ்சினார். பத்து நல்லவர்களாவது அந்நகரத்தில் இருந்தால் (தொ. நூ. 18 : 32) மன்னித்து விடுவதாக கடவுள் ஏற்றுக் கொள்கிறார்.
ஏழைக்கைம்பெண் நம்பிக்கையோடு தொடர்ந்து மன்றாடியபோது நீதிக்கேட்டபோது, கடின இதயம் கொண்ட பொல்லாத நடுவனைக்கூட இரக்கப்பட வைத்தது இக்கைம்பெண்ணின் விடாமுயற்சி. இந்த விடாமுயற்சி என்பது தளரா நம்பிக்கை. இத்தகைய செபம்தான் இறைவனுக்கு உகந்த செபம்.
படைத்த ஆண்டவரைப் போற்றுவது நமது கடமை. படைக்கப்பட்டவைகளின் தேவையை அறிந்து நிறைவேற்றுவது அவரது உரிமை. எனவே நமது ஜெபம் தொடர் ஜெபமாக மாறட்டும்.
மூச்சு நின்றால் மட்டும் மரணமல்ல
முயற்சி நின்றாலும் மரணம்தான்.
No comments:
Post a Comment