18 ஆம் ஞாயிறு 31 - 07 - 2016
ச உ 1 : 2; 2 : 21 - 23; கொலோ 3 : 1 - 5, 9 - 11; லூக் 12 : 13 - 21
ஆசையே துன்பத்திற்கு காரணம்
வந்தவர் : வாழைப்பழம் எவ்வளவுங்க?
கடைக்காரர் : ஒரு ரூபாய் தாங்க.
வந்தவர் : ஐம்பது பைசாவுக்கு தர்றீங்களா?
கடைக்காரர் : ஐம்பது பைசாவுக்கு தோல் மட்டும்தான் கிடைக்கும்.
வந்தவர் : அப்ப இந்தாங்க, 50 பைசா. தோலை உரிச்சுகிட்டு பழத்தை மட்டும் தாங்க.
மண்ணே மனித உடலை திண்ண போகுது, மனித உடலை காக்க என்னென்ன வழிமுறைகள் கிடைக்கும் என மனிதன் அங்கலாய்க்கிறான். ஆசைகள் இருந்தால்தான் முயற்சியும், உழைப்பும் இருக்கும். அதே வேளையில் உழைக்காமல் உண்ணும் ஆசை அபத்தமானது. இந்த ஆசைகள் சுயநலத்தோடு ஒட்டிக்கொண்டால் மற்றவர்களின் நலனைப் பற்றியோ, பிறருடைய வளர்ச்சிப் பற்றியோ சிந்திக்காமல் தீமையே பிரதானம் என மனிதர் வாழ ஆரம்பித்துவிடுகிறார்.
பிற்கால வாழ்வின் பயனை அடைய நாம் பொதுவாக முன்னேற்பாடுகளை செய்து கொள்வது வழக்கம். பணம், பொருள், பதவி, வசதிகள் தேவைதான். ஆனால், அவைகளை பேராசையுடன் தேடிச் சேகரித்து வைக்கவேண்டாம் என்பதை இயேசு நமக்கு போதிக்கிறார். உலகப் பொருட்கள் நமக்கு உண்மையான மனநிறைவும், மகிழ்ச்சியும் தரப்போவதில்லை. அவைகள் சிறிது காலத்திற்குத்தான் நம்முடையதாக இருக்கும். இறந்தப் பிறகு நமக்குக் கிடைப்பது 5 அல்லது 6 அடி நிலம். அது கூட நமக்கு நிரந்தரமானதல்ல. ஆகவேதான் இன்றைய நற்செய்தியில், ‘முட்டாளே இன்று உனது ஆன்மாவை இழப்பாயே’ என்று செல்வந்தனிடம் இறைவன் எச்சரித்தாக சொல்லப்படுகிறது.
உலக செல்வம் நமது ஆன்மாவை அடிமையாக்க முடியும். இத்தகைய அடிமை கடவுளையும், அயலாரையும் நேசிக்க முடியாதபடி மாபெரும் தடையாக மாறிவிடும். நாம் விரும்புகின்ற சுதந்திர வாழ்வை பறித்துவிடும். நாம் இறக்கும்போது நமக்கு பயன்படப் போவது, நாம் இவ்வுலகில் சேர்த்து திரட்டி வைத்திருக்கும் ஆன்மீகச் செல்வங்கள்தான். இச்செல்வம்தான் நமக்கு முழு விடுதலையைத் தரும்.
“மண்ணுலகில் செல்வம் சேகரிக்க வேண்டாம். மாறாக விண்ணுலகில் உங்கள் செல்வத்தை சேமித்து வையுங்கள். அது நிலையானது” (மத் 6 : 19 ‡ 24). இருப்பதைக் கொண்டு நிறைவுடன் வாழவும், இருக்கும் செல்வத்தை தகுந்த முறையில் பயன்படுத்தவும், பிறரோடு பகிர்ந்து வாழவும் ஆசைப்படவேண்டும்.
தன்னதுசாயை தனக்கு உதவாது கண்டு
என்னதுமாடு என்று இருப்பர்கள் ஏழைகள்
உன்னுயிர் போமுடல் ஒக்கப் பிறந்தது
கண்ணது காணொலி கண்டு கொளீரே (திருமந்திரம்)
“உயிரோடு உடன் பிறந்த உடலே பிணமாய் ஒழிகிறது. இதனை நேரே கண்டும் புறமான பொருளை என்னுடையது என்று மடையர்கள் எண்ணி களிக்கின்றனர்” என்கிறார் திருமூலர்.
No comments:
Post a Comment