ஆலோசனை நேரம்.
வேதியரிடம் கேளுங்கள் - 12
- நல்லை.இ. ஆனந்தன்
இயேசு புதுமைகள் எதுவும் செய்யத் தொடங்காத நிலையில், கானாவூர் திருமணத்தில் மரியா எப்படி இயேசு புதுமை செய்வார் என்று நம்பினார்?
ரொம்ப சிம்பிள், கபிரியேல் தூதர் மரியாவுக்கு மங்கள வார்த்தை சொன்னபோதே ‘இயேசு பெரியவராயிருப்பார், கடவுளின் மகன் எனப்படுவார்’ என்று இயேசுவைப் பற்றிய இரகசியங்களைச் சொல்லியிருந்தார். சிமியோன்கூட ’உமது உள்ளத்தை ஒரு வாள் ஊடுருவும்’ என்று எச்சரித்திருந்தார். ஆக, இயேசுவைப் பற்றிய உண்மைகளும் மரியாவுக்குச் சொல்லப்பட்டது. மரியா கேட்டார், கேட்டதை நம்பினார். அதனால்தான் சிலுவையடியில் நின்றபோதும் நம்பிக்கையில் உயர்ந்திருந்தார். அந்த நம்பிக்கைதான் கானாவூரிலும் வெளிப்பட்டது. தண்ணீர் இரசமான மகா அற்புதத்தைப் பெற்றுத்தந்தது. ஏனெனில் இயேசுவின் திரு இருதயமும், மரியாவின் மாசற்ற இதயமும் இரக்கம் என்னும் தீயால் பற்றி எரிந்தது. இப்போது புரிந்ததா மலர்செல்வி அக்கா?
- திரு. சேவியர், ஆசிரியர், மாணாமதுரை
வாத்தியாரய்யா, உலக அறிவைவிட ஒழுக்க அறிவே மேல் என்பதை இபபோதைய கல்வியாளர்கள் வலியுறுத்துகிற அளவுக்கு கல்வித்திட்டம் மாறியுள்ளது. நன்னெறி வகுப்புகள் இல்லையயன்றால், ஆசிரியர்களைக் கொல்லும் மாணவர்களையும், நேர்மையான அதிகாரிகளைக் கொல்லும் ரவுடிகளையும், கோடிகளில் ஊழல் செய்யும் அரசியலார்களையும் கல்வித்திட்டம் உருவாக்கும்நிலை வரக் கூடும் என்று அஞ்சுகின்றனர். நமது கத்தோலிக்க கல்வி நிறுவனங்கள் நன்னெறிக்கும், மறைக்கல்விக்கும் ஆதிமுதல் முக்கியத்துவம் அளிப்பதால், தங்கள் பிள்ளைகளை நமது பள்ளிகளில் சேர்க்க பெற்றோர்கள் பெரிதும் முயற்சிக்கின்றனர்.
3. தம்பி, எனக்கு வயது 63, ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இன்னும் சில காலம் நலமுடன் வாழ ஆலோசனை கூறவும்?
- திரு. ராஜ், கொடைரோடு.
அன்புள்ள ராஜ் அப்பா, சில காலம் அல்ல, பல காலம் நீங்கள் நலமுடன் வாழ, எளிமையான ஒரே வழி, நடைப்பயிற்சி (வாக்கிங்) மேற்கொள்வது தான். காற்றோட்டமான இடத்திலே, காலையோ / மாலையோ 5 மணி முதல் 7 மணி வரை தினமும் நடைப்பயிற்சி செய்யவும். வெறுங்காலோடு ஒருபோதும் நடக்காதீர்கள். காலணி அவசியம். வெறும் வயிற்றில் நடக்காதீர்கள். பாலோ அல்லது பழச்சாறோ ஒரு டம்ளர் அருந்திவிட்டு நடக்கவும், சுவாசிக்க சிரமம், உடலின் சில பகுதிகளில் வலி, அதிக வியர்வை, படபடப்பு ஏற்பட்டால் உங்கள் மருத்துவரிடம் உடனே சென்று ஆலோசனை கேட்கவும். பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.
4. என் மகனுக்கு மூன்று வயதாகிறது. எந்த வயதிலிருந்து அவனுக்கு மறைக்கல்வி ஆரம்பிக்கலாம்?
- திருமதி. ஜெயக்கொடி, தஞ்சாவூர்
என்ன? எந்த வயதிலா? ஏற்கனவே மூன்றுவருடம் லேட்டாக்கி விட்டீர்கள் ஜெயக்கொடியம்மா. தாயின் கருவறையிலே கற்றல் ஆரம்பித்துவிடுகிறது என்கிறார்கள் அறிஞர்கள். மரியா எலிசபெத்தைச் சந்தித்தபோது, “உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததுமே என் வயிற்றுனுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று” என்றார் எலிசபெத்தம்மாள். ஆறு மாதக் கருக்குழந்தை யோவான் துள்ளிக் குதித்தார். மரியா கருத்தரித்த உடனே அவர் பாடிய இறைபுகழ்ச்சிப் பாடல் மிக உயர்ந்தது, உன்னதமானது. எனவே, கருத்தாங்கிய தாயின் பக்தி, செப ஆர்வம், இறைபுகழ்ச்சிப் பாடல்கள் பாடுவது வயிற்றுக் குழந்தைக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை. எனவே, இன்றே, இப்போதே, உடனே, வீட்டிலே அவனுக்கு மறைக்கல்வியை ஆரம்பித்துவிடுங்கள்.
5. பசுமையான மலை, நீர் நிரம்பியோடும் ஆறுகள், பாடும் பறவைகள், மாதம் மூன்று மழை, அதிக விளைச்சல் இதுவெல்லாம் இனி உலகில் எப்போது சாத்தியமாகும் அய்யா?
- திருமதி. தமிழரசி, கன்னியாகுமரி.
கதை சொல்ல வைத்துவிட்டீர்களே தமிழரசியம்மா. ஒரு பக்தர் உங்கள் கேள்வியையே கடவுளிடம் கேட்டுவிட்டு உறங்கச் சென்றார். அவர் கனவில் வந்த கடவுள் பக்தர், ஆசைப்பட்ட மாதிரியான பசுமையான உலகத்தைக் காட்டினார். ஆண்டவரே, இதுவா மோட்சம்? என்றார் பக்தர். அதற்கு கடவுள் சொன்னார், “படைப்பின் தொடக்கத்திலேயே பூமியை இப்படித்தான் உருவாக்கினேன். உங்கள் கையில் அதைக் கொடுத்தேன். நீங்கள்தான் இப்படி ஆக்கிவிட்டீர்கள். வறண்ட ஓடைகள், கடும் வறட்சி, அதிக வெப்பம், குடிநீர் பிரச்சனை, வெள்ளப் பெருக்கு, பனிச் சரிவுகள், சுனாமி அதிர்வுகள், உலகத்தில் ஏற்படுத்தியதுதான் உங்கள் சாதனை” என்றாராம் கடவுள்.
6. இந்த ஆண்டாவது நமக்கு நல்ல மழைபெய்யுமா?
- திரு. செல்வமணி, திருச்சி.
நிச்சயமாக, இறை இரக்க ஆண்டைக் கொண்டாடுகிறோம். அவரின் அளவற்ற இரக்கத்தால் நமக்கு நல்ல மழை உறுதியாகக் கிடைக்கும். கடந்த ஆண்டும் அவர் நமக்கு மழைதான் தந்தார். சென்னையில் பெய்த மழைநீரை மட்டும், நாம் சேமித்து வைத்திருந்தால் தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் சப்ளை செய்திருக்க முடியும் அய்யா. கடவுள் நமக்கு எல்லாவற்றையும் தாராளமாகத்தான் தந்துகொண்டு இருக்கிறார். நாம்தான் அவற்றை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம். இனியாவது விழித்துக் கொள்வோம். அப்போது பிழைத்துக் கொள்வோம்.
No comments:
Post a Comment