Pages - Menu

Friday, 1 July 2016

திருப்பலி விளக்கம், 6. தொடக்கச் சடங்கு

திருப்பலி விளக்கம்

- அருள்பணி. எஸ். அருள்சாமி,
பெத்தானி இல்லம், கும்பகோணம்

        6. தொடக்கச் சடங்கு

முன்னுரை :

திருப்பலி இருபெரும் பகுதிகளால் அமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது வார்த்தை வழிபாடு, நற்கருணை வழிபாடு ஆகிய ஆக்க கூறுகளாலானது திருப்பலி. இன்னும் சற்று விரிவாக பார்த்தோமானால் திருப்பலி தொடக்க வழிபாடு, வார்த்தை வழிபாடு, நற்கருணை வழிபாடு, முடிவு வழிபாடு ஆகியவற்றைக் கொண்டிருப்பது எனலாம்.
இருபெரும் பகுதிகளை எடுத்துக் கொள்வோமானால் அவை ஒவ்வொன்றுக்கும் தயாரிப்பும், முடிவும் உண்டு என்றும் சொல்லலாம்.
இதுவரை திருப்பலிப் பற்றிய அடிப்படை கோட்பாடுகளுக்கு விளக்கம் கொடுத்தோம். (பிப்ரவரி ‡ ஜீன்). இனித் திருப்பலியில் இடம்பெறும் ஒவ்வொரு செயல், செபம் போன்றவைகளுக்கு விளக்கம் கொடுக்க முற்படுவோம்.
தொடக்கச் சடங்கு :
தொடக்கச் சடங்கு திருப்பலி முழுவதிற்கும் நுழைவாயிலைப் போன்று அமைந்திருக்கிறது. இந்த தொடக்கச் சடங்கு, வருகைப் பவனியில் தொடங்கி திருக்குழும மன்றாட்டோடு முடிவடைகிறது. திருப்பலியில் நமது பங்கேற்பு முழுமையாக அமையவும், அதன் விளைவாகப் பலன்களை நாம் நிறைவாகப் பெறவும், இச்சடங்கு நம்மைத் தயாரிக்கிறது. திருப்பலியின் இறுதி பயனாகிய இறை ‡ மனித உறவின் சிகரத்திற்கு அச்சாரமாகவும், அடித்தளமாகவும் அமைந்திருக்கிறது இத்தொடக்கச் சடங்கு. எனவே இத்தொடக்கச் சடங்கில் இடம்பெறும் ஒவ்வொரு செபமும், செயலும் இத்தயாரிப்புக்கு எப்படி உறுதுணையாக விளங்குகிறது என இங்கு பார்ப்போம்.

வருகைப் பவனி :

பொதுவாகத் திருப்பலி கொண்டாட்டம் வருகைப் பவனியுடன் தொடங்கும். பீடப்பணியாளர்கள் முன்செல்ல (பாடல் திருப்பலியாக இருந்தால் சிலுவை, தூபத்துடன்) திருப்பலி நிறைவேற்றும் அருள்பணியாளர் திருவுடை அணிந்து பின்செல்கிறார். இந்தப் பவனி கோவிலின் முன் நடுவாயிலிருந்து தொடங்கும். இப்பவனி கொண்டாடப்படும் விழாவில் தரத்திற்கேற்ப நீண்டதாகவோ, சுருங்கிய அளவுடையதாகவோ இருக்கலாம். பீடப்பணியாளர்களைத் தவிர்த்து, திருத்தொண்டர், வாசகர், விளக்கவுரையாளர் இப்பவனியில் இடம் பெறலாம். திருத்தொண்டரோ அல்லது வாசகரோ, வாச நூலைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு அருள்பணியாளர் முன்செல்வர்.

வருகைப்பாடல் :

“கொண்டாட்டத்தைத் தொடங்கவும், திருக்கூட்டத்தின் ஒன்றிப்பை வளர்க்கவும், வழிபாட்டுக் காலத்தின் அல்லது திருநாளின் மறையுண்மையைப் பற்றிய அவர்களுடைய சிந்தனையைத் தூண்டவும், அருள்பணியாளரும் பிற பணியாளர்களும் வரும் பவனி இணைந்திருப்பதும் இவ்வருகைப் பாடலின் நோக்கமாகும்”  (பொது படிப்பினை எண் 47). 
ஒவ்வொரு நாளின் கொண்டாட்டத்தின் உணர்வுகளில் நுழைய இந்த வருகைப்பாடல் நம்பிக்கையாளர்கள், அருள்பணியாளர் மற்ற பணியாளர்களின் மனதைத் திறக்கிறது.  அன்றையத் திருப்பலியின் வருகைப் பல்லவியை அதற்கேற்ற திருப்பாடலுடன் பாடுவது அன்றைய கொண்டாட்டத்தின் மையக்கருத்தையும், உணர்வையும் பிரதிபலிக்கும்.
ஒவ்வொரு மாநிலத்தின் ஆயர் பேரவையால் அங்கீகரிக்கப்பட்ட பாடலை பாடலாம் என்று திருப்பலி நூலின் பொது படிப்பினையில் (எண் 48) குறிப்பிட்டிருந்தாலும் இன்று பாடப்படுகின்ற பாடல்கள் எல்லாம் இத்தகைய தகுதியைப் பெற்றிருக்கின்றனவா என்பது கேள்விக்குறியாகிறது. மேலும் உரோமை படிக்கீத நூலில் அல்லது சாதாரணப் படிக்கீத நூலில் கொடுக்கப்பட்டிருக்கும் வருகை பல்லவியையும், திருப்பாடலையும் பாடுவதுதான் சாலச்சிறந்தது என்று சொல்லிவிட்டு, ஆயர் பேரவையால் அங்கீகரிக்கப்பட்ட இதற்கிணையான பாடலையும் பாடலாம் எனச் சொல்லப்படுகிறது. ஆனால் பிந்திய அனுமதியே வழக்கமாக மாறியிருப்பது விந்தையாகவுள்ளது. இதைச் சமநிலைக்குக் கொண்டுவர ஒவ்வொரு மறைமாவட்ட திருவழிபாட்டு பணிகுழுவும், ஆயரும் பெரும் முயற்சி எடுக்க வேண்டும். இது நடைபெறுமா?
வருகைப்பாடலைப் பாடவில்லை என்றால், நம்பிக்கையாளர் அனைவரும் அல்லது அவர்களுள் ஒருசிலர் திருப்பலி நூலில் கண்டுள்ள வருகைப் பல்லவியை வாசிப்பார்; இல்லையயனில் அருள்பணியாளரே அதைத் தொடக்க அறிவுரை போன்று தழுவி அமைப்பார் (பொது பாடம் எண் : 48). இதை அவர் நம்பிக்கையாளர்களுக்கு வாழ்த்துக் கூறியபின் வாசிப்பார் (பொது பாடம் எண் : 48)

பீடவணக்கமும், குழுமியுள்ள மக்களுக்கு வாழ்த்தும்:

பலிபீடம் கிறிஸ்துவுக்கு அடையாளம்; நற்கருணை குழுமத்திற்கு மையம். இதைச் சுற்றிதான் கிறிஸ்தவ குடும்பம் நற்கருணை பலி உணவு கொண்டாட்டத்திற்கு ஒன்று சேர்கிறது.
திருப்பலி பீடத்தை அனுகியதும், அருள்பணியாளரும், திருத்தொண்டர் மற்றும் கூட்டுபலி அருள்பணியாளர்கள் இருந்தால், அவர்களும் பீடத்துக்கு முன் பணிந்து வணக்கம் செலுத்துவர். அதன்பின் இவ்வணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் பீடத்தை முத்தமிடுவர் அல்லது இந்திய முறைப்படி பீடத்தை இருகைகளாலும் தொட்டு நெற்றியில் வைத்து மரியாதையை வெளிப்படுத்துவர். பின் பீடத்திற்கும், சிலுவைக்கும் தூபம் காட்டுவார்.
பீடத்தை முத்தமிடுவதும், அதற்குத் தூபம் காட்டுவதும் அதன்பால் நாம் கொண்டிருக்கும் மதிப்பு, மரியாதையை வெளிப்படுத்துகிறது. இச்செயல் குழுமியிருக்கும் நம்பிக்கையாளர்களுக்கு செப சூழ்நிலையைத் தோற்றுவிக்கும்.
பீடத்திற்கு வணக்கம் செலுத்தியபின், அருள்பணியாளர் தமது இருக்கைக்குச் செல்கிறார். வருகைப்பாடல் முடிந்ததும் தலைமை ஏற்கும் அருள்பணியாளர் தம்மீது சிலுவையடையாளம் வரைந்து, “தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே” என்று சொல்லுவார். குழுமி இருக்கும் நம்பிக்கையாளர்களும் தங்கள் மீது சிலுவை அடையாளம் வரைந்து “ஆமென்” என்று பதில் கூறுவர். இந்த சிலுவை அடையாளம் நமது மீட்பின் உன்னத சின்னம். மூவொரு கடவுளின் மூவா மறைபொருள். கிறிஸ்தவ சமயத்தின் தனியயாரு முத்திரை. நாம் எதிர்பார்த்திருக்கும் பேரின்ப காட்சியின் முன் சுவை.
அதன்பின் ஆண்டவரின் உடனிருப்பை வாழ்த்துரை வழியாகத் திருக்குழுமத்திற்கு உணர்த்துவார். மக்கள் கூடிவரும்போது ஒருவர் ஒருவரை வாழ்த்துவது பொதுவான ஒரு பழக்கம். திருப்பலி கொண்டாட்டத்திற்குக் கூடிவரும் மக்களுக்கு வாழ்த்துக்கூறுவது முறையானதாகும். தொடக்கச் சடங்கில் இது ஒரு முக்கிய செயலாகும். இந்த வாழ்த்துரை வழியாக அருள்பணியாளருக்கும், நம்பிக்கையாளர்களுக்கும் இடையே உறவு உருவாக்கப்படுகிறது.
திருப்பலி நூலில் மூன்று வாய்ப்பாடுகள் இந்த வாழ்த்துதலுக்குக் கொடுக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம்:

1. ‘நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் அருளும், கடவுளின் அன்பும், தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக’  (2 கொரி 13 : 13).

2. ‘நம் தந்தையாகிய கடவுளிடமிருந்தும், ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவிடமிருந்தும், அருளும், சமாதானமும் உங்களோடு இருப்பதாக ‘ (உரோ 1 : 7).

3.  ‘ஆண்டவர் உங்களோடு இருப்பாராக’ (லூக் 1 : 28
மறை ஆயர் பலியில் : அமைதி உங்களோடு இருப்பதாக  (லூக் 24 : 36)

இந்த மூன்று வாழ்த்துக்களிலும் வார்த்தைகள் பலவாறாயினும் கருத்துப் பொருத்தம் கொண்டிருப்பதைக் காணலாம்.

“நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் அருள்:

அருள்” என்பது இறைவனுடைய அன்பிலிருந்து புறப்படுவது. அருளும், அன்பும் இறைவனையே குறிக்கும். இந்த அன்பும், அருளும் இயேசுகிறிஸ்துவில் ஆள் உருபெற்றன. “மாந்தர் அனைவருக்கும் மீட்பளிக்கும் கடவுளின் அருள் பிரசன்னமானார்” (தீத்து 2 : 11) என்று பவுல் குறிப்பிடுகிறார். எனவே ஆண்டவரை அணுகுவது அருளைப் பெறுவதற்குச் சமம். இவராலன்றி நாம் அருளைப் பெறமுடியாது. அருளோடிப்பவர்கள்தாம் இந்தத் திருப்பலியில் கலந்து கொள்ள தகுதி பெற்றவர்கள். எனவேதான் அருள்பணியாளர் இவ்வாறு வாழ்த்துகிறார்.

கடவுளின் அன்பும்:

இறைவன் அன்பு மயமானவர். “கடவுள் அன்பாய் இருக்கிறார்” (1 யோவா 4 : 16) என்று யோவான் குறிப்பிடுகிறார். அன்பில் நிலைத்திருக்கிறவர், கடவுளோடு இணைந்திருக்கிறார். கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார். கடவுளுடைய இந்த அன்பை வழிபாட்டில் உணரமுடிகிறது.

தூய ஆவியாரின் நட்பும்:

நட்புறவு என்பது புதிய ஏற்பாட்டில் ஒப்புரவைக் குறிக்கும். இந்த சொல் ஆழ்ந்த பொருளுடையது. இது இருவரிடையே உண்டாகும் ஒன்றிப்பையும், அவர்கள் தங்களுக்குப் பொதுவான செல்வத்தை பகிரும் செயலையும் குறிக்கும்.

இறைவார்த்தையைக் கேட்டு அதை ஏற்றுக் கொள்பவர்கள் ஒரு இனமாக்கப்படுகின்றார்கள். இவர்களிடையே இருக்கும் ஒற்றுமை உயர்வானது. இத்தகைய ஒன்றிப்பை இன்று செயலாக்கி காத்து வருகின்றவர் தூய ஆவியார் ஆவார். எனவே தூய ஆவியாருக்கும் நட்புறவுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அந்த நட்புறவானது வேண்டுமென்று அருள்பணியாளர் வாழ்த்துகிறார்.

முதல் வாழ்த்து வாய்ப்பாட்டில் சிலர் ‘நட்புறவும்’ என்பதற்ககுப் பதிலாக ‘தோழமையும்’ என்பதைப் பயன்படுத்துகிறார்கள்.  கிரேக்கத்தில் இருக்கும்  ‘கோயினோனியா’ என்ற சொல் ‘நட்புறவு’ என்றுதான் 2கொரி 13:13 இல் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.  இதை மாற்றுவது ஏற்புடையதல்ல.

இவ்வாறாக, இயேசுகிறிஸ்துவின் அருளைப் பெற்று, இறைதந்தையின் அன்புக்கு இலக்காகி, மூவொரு கடவுளின் திருசமூகத்தோடு உறவுகொண்டு வாழ்கிறவர்கள்தான் கிறிஸ்தவ திருசமூகம். இத்திருப்பலியில் பங்குபெற வந்திருக்கும் கிறிஸ்தவ திருசமூகத்திற்கு இந்த வாழ்த்துதல் வழியாக இவ்வுண்மை நினைவூட்டப்படுகிறது.

சகோதர அன்புறவுக்கும், சமாதானத்திற்கும் காரணர் இயேசுகிறிஸ்து. அவரில்தான் ஒப்புரவு உருவாகிறது. அவரே நம் சமாதானம். அவர் நம்மோடிருந்தால் அருளும். சமாதானமும் நம்மோடிருக்கும் என்பது திண்ணம். “அருள் மிகப் பெற்றவரே” என்று வாழ்த்திய வானதூதர் அதற்குக் காரணம் காட்டுவது போல் “ஆண்டவர் உம்மோடிருக்கிறார்” என்கிறார்.

இறை அருளின் ஆள் உருவாகிய ஆண்டவர் உங்களோடு இருந்து இறையன்பை உருவாக்கி வளர்த்து, இது பிறர் அன்பாகவும், சமாதானமான நட்புறவாகவும் மலர செய்வார் என்று திருச்சமூகம் இரண்டாவது வாய்ப்பாட்டில் வாழ்த்தப் பெறுகிறது.

முதல் இரண்டு வாழ்த்துரை பாடங்கள் கீழ்த்திருச்சபையில் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. இப்பொழுது இலத்தின் திருஅவை இவற்றை வாழ்த்துரைக்குப் பயன்படுத்துகிறது.
வரவேற்பிற்குப் பொருத்தமான வேறு வாழ்த்துரைகள் புனித பவுலின் மடல்களில் நிறைய உள்ளன (காண் உரோ 16 : 20; கலா 6 : 18;1 கொரி 16 : 23; எபே 6 : 23, 24). இவற்றில் ஏதாவது ஒன்றை மூன்றாவது வாழ்த்து பாடமாகப் பயன்படுத்தலாம்.

இந்த வாழ்த்துரைகளின் ஆழ்ந்த கருத்துகளை அடிக்கடி சிந்திப்போம். மேலே கொடுக்கப்பட்ட விளக்கவுரை இதற்குத் துணையாக இருக்கும் என்று நம்புகிறோம்.                                           (தொடரும்)

No comments:

Post a Comment

Ads Inside Post