உயிரளித்துப் பெற்ற உயிரான சுதந்திரம்
- அருள்சகோ. விமலி ,
இதயா கல்லூரி, கும்பகோணம்
விடியலின் தேடலில்
விடை கிடைத்த நாள்
வரலாற்றின் காவியத்தில்
சுதந்திரத் திருவிழா!
எத்தனை முறை திருப்பிப் பார்த்தாலும்
திரும்ப வாரா தியாக தீபங்கள்!
உணர்வுப் போராட்டங்கள்!
திறன்களின் குவியல் பாரதம்!
பண்பாட்டின் அடையாளம் பாரதம்!
இறையுணர்வின் ஆன்மா பாரதம்!
வளர்ச்சியும் வீழ்ச்சியும்
பொருந்தா இணை சக்கரங்களாய்
கொண்டு சுழன்றது பாரதம்
வளங்களின் புதையல் பாரதம்
பிரிவினைகளின் குவியல் பாரதம்!
வணிக மேகமாய் சுரண்ட வந்ததே!
வஞ்சகமாய் தஞ்சமடைந்து
வரியை அவன் விதித்தான்!
வினையை நாம் அறுத்தோம்
வீழ்ந்தோம் வீனரின் வலையிலே
நம் வளங்களில் நரிக் கூட்டம்
நயமாக நஞ்சை விதைத்து
ஏமாற்றினான் எங்கிருந்தோ வந்தவன்
அடிமைகளாய் சொந்த மண்ணிலே!
அவனின் அதிகார ஆதிக்கத்தில்
அடிமை விலங்குகளாய் நடத்தியதில்
கால் நடைகளுக்கும் கண்ணீர்!
கல் நெஞ்சத்தோருக்கு பன்னீர்!
தாமதமாய் தந்திரத்தை உணர்ந்ததில்
உரிமையை உலகறிய பெற்றிட்டோம்
உருவிழந்த சுதந்திரத்தை யாசித்தே.
யுத்தக் களத்தில் குதித்தோம்
இளம் போராளிகள், முதிர் போராளிகள்
பட்டியலிட்டாலும் பக்கங்கள் போதா
வெளிச்சத்தில் தெரிந்தவர் பாதி!
வெளிச்சத்தில் தெரியாதவர் மீதி!
உறக்கம், உறவுகள், உடைமைகள்,
சுகம், குடும்பம், செல்வம் எல்லாம்
சுதந்திர தாகத்தில் கரைந்து விட்டதுவே
.
சுதந்திர வேட்கை தணிக்க தரணியிலே!
யுத்தப் பணி நித்தம் செய்தனரே
வாழ்ந்தாலும் தாய் நாட்டிலே!
வீழ்ந்தாலும் தாய் மண்ணிலே!
தன்னை நினையாது வலியச் சென்று
வலிகள் பெற்று தந்ததுவே வீர சுதந்திரம்
நாம் சுவைக்கும் வேள்வியின் சுதந்திரம்
வசதியான தருணங்களில் கிடைத்ததல்ல
சவாலான சர்ச்சைக்குரிய தருணங்களை
சந்தித்த சாமானியரின் சாதனையே
உரிமையின் சுதந்திரத்தை மெய்ப்பித்து
உயிரைக் கொடுத்து உரமாயினர்
அவ்வெழுச்சியின் காவியத்தின் சுவாசிப்பே
பாரதத்தின் பசுமையான பக்கங்கள்
கடல்கள், நதிகள், நீர்நிலைகள், ஏரிகள்
செழித்து வளர்ந்த தரமான உண்மைகள்
விஞ்ஞான வளர்ச்சி, அறிவியல் ஆராய்ச்சி
நவீன மருத்துவம், மூலிகை மருத்துவம்
ஓலைச்சுவடியில் அர்த்த சாஸ்திரம்
கனிமச் சுரங்கம், நிலக்கரிச் சுரங்கம்,
தங்கச் சுரங்கம், பெட்ரோலியம், தாதுக்கள்
பாரதத்தின் பெருமை எல்லாத் துறைகளிலும்
பட்டொளி வீசி பாரெங்கும் பறந்ததுவே
இனம், நிறம், பால், மொழி, மதம்,
அரசியல், தேசீயம், சமூகம், சொத்து
பாகுபாடுகள் இன்றி உரியச் சுதந்திரத்தை
உவப்புடன் தருவதே மானிடச் சுதந்திரம்.
சுதந்திரம் என்ற சமத்துவ உரிமையானது
வெறும் சடங்கு முறையானதோ
வெறுமையான விளம்புகையோ அல்ல, அது
உறுதியான உழைப்பின் சுதந்திரமாம்
அணுகுமுறை அனுபவங்கள் அகிலத்தின் உறவுகளில்
அனுதின இலட்சியங்களில் சுதந்திரத்தை வாழ்வோம்.
No comments:
Post a Comment