Pages - Menu

Saturday, 2 July 2016

இம்மாதத்தின் புனிதர்கள், ஜீலை, 2016

புனிதர்கள் வரலாறு

அருட்சகோதரி G. பவுலின் மேரி,  FSAG,  
கும்பகோணம்.
இம்மாதத்தின் புனிதர்கள்

ஜீலை - 3         புனித தோமையார்

புனித தோமா கலிலேயா நாட்டைச் சேர்ந்தவர். மீன்பிடிக்கும் தொழில் செய்து வந்தவர். படிக்காதவர். கள்ளம், கபடு அற்றவராகவும் இயேசுவை அதிகம் அன்பு செய்பவராகவும் இருந்தார். இயேசு ‘யூதேயாவுக்குப் போவோம் வாருங்கள்’ என்றார். அப்போது தோமையார், ‘நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்’ (லூக் 8 : 22) என்றார். சீடர்கள் ‘ஆண்டவரைக் கண்டோம்’ என்றதற்கு ‘நான் விசுவசிக்க மாட்டேன்’ என்றார். இயேசு தோமைக்கு காட்சி கொடுத்தபோது ‘இங்கே உன் விரலை விடு. விசுவாசம் கொள்’ என்றார். அப்போது தோமா “என் ஆண்டவரே, நீரே என் கடவுள்” (யோவா 20 : 28) என்றார். பல நாடுகளில் நற்செயதி போதித்து, இந்தியாவுக்கு வந்து மைலாப்பூரில் நற்செய்திக்காக கொல்லப்பட்டார். எனவே இந்திய அப்போஸ்தலர் என்று அழைக்கப்படுகிறார். ஜீலை 3ஆம் நாள் சடலம் எடெசாவுக்கு கொண்டு வரப்பட்டதின் நினைவாக கி.பி.6 ஆம் நூற்றாண்டிலிருந்து விழாவை சிறப்பித்து வருகிறோம்.

ஜீலை - 5, புனித அந்தோணி மரிசக்கரியா (1502 - 1539)

வட இத்தாலியில் லம்பார்டிப் பகுதியில் கிரமோனா நகரில் கி. பி. 1502இல் பிறந்தார். பதுவா நகரில் படித்து மருத்துவர் ஆனார். இளம் வயதிலேயே பக்தி நிறைந்தவராயிருந்ததால் குருவாகி மறைப்பணியாளர் பட்டம் பெற்று, புனித பவுலின் பெயரால் துறவறக்குருக்களின் பர்னபாஸ் சபை ஒன்றை நிறுவினார். மெய்யடியார்களின் பழக்க வழக்கங்களை சீர்திருத்தி அமைக்க அச்சபையினர் அரும்பாடுபட்டனர். 1539இல் ஜீலை 5ஆம் நாள் கிரமோனா நகரிலேயே உயிர் நீத்தார்.

ஜீலை - 6                             புனித மரிய கொரற்றி

இத்தாலியில் அன்மோனா என்னுமிடத்தில்   கி. பி. 1890இல் ஓர் ஏழைக்குடும்பத்தில் பிறந்தார். இளமைப் பருவத்தை வறுமையில் கழித்தார். வீட்டு வேலைகளில் தாய்க்கு மிக உதவியாக இருந்தார். இறைவன்மீது அதிகம் பற்றுக் கொண்டுமிருந்தார். இறைவேண்டலில் விடாமுயற்சி உடையவர். காம ஆசையினால் ஒருவன் இவளை கெடுக்க வந்தபோது தம் கன்னிமையைக் காத்துக் கொண்டார். ‘களங்கப்படுவதிலும் சாவது மேல்’ எனத் துணிந்ததால் 14 முறை கத்தியால் குத்தப்பட்டு 1902இல் ஜீலை 6ஆம் நாள் இறந்தார். சாகுமுன் தன்னைக் கொலை செய்தவனுக்கு மன்னிப்பு அளித்தார்.

ஜீலை - 11  புனித ஆசிர்வாதப்பர் (480 - 542)

இத்தாலி நாட்டில் உம்பிரியாப் பகுதியில் நோர்சியா என்னும் இடத்தில் கி. பி. 480இல் பிறந்தார். உரோமையில் கல்வி கற்றார். உலகத்தை துறந்து சுபியாக்கோ என்னும் மலையில் இருந்த ஒரு குகையில் தவம் செய்தும், ஜெபித்தும் வாழ்வு நடத்தினார். இதைக் கண்டு பலர் சீடராயினர். அவர்களுக்கு ஒரு மடத்தை துவங்கி, சட்டங்களையும் இயற்றித்தந்தார். மோந்தேகஸினோ என்னும் இடத்தில் ஒரு மடம் துவங்கினார். அவர் எழுதிய சட்டங்கள் புகழ் பெற்றன. இவர் திவ்விய நன்மை உட்கொண்டு பீடத்தின் முன்னின்று கரங்களை உயர்த்தி ஜெபித்துக் கொண்டே உயிர்விட்டார். 24 திருத்தந்தையர்களையும், ஐயாயிரத்துக்கு மேற்பட்ட புனிதர்களையும் இவரது சபை திருச்சபைக்கு தந்திருக்கிறது.

ஜீலை - 15        புனித பொனவெந்தூர்

இத்தாலியில் தஸ்கனி பகுதியல், பஞ்ஞோரேஜியாவில் கி.பி.1218இல் பிறந்தார். பாரீஸ் நகரில் மெய்யியல், இறையியல் ஆழ்ந்து கற்று, ஆசிரியராக நியமனம் பெற்று, தம்சொந்த சபை சகோதரர்களுக்கு அப்பாடங்களை பயிற்றுவித்து பயனுறச் செய்தார். சபைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பெற்று, சபையை விவேகத்துடனும், நுண்ணறிவுடனும் நடத்தி வந்தார். அல்பானோ நகர் ஆயராகவும், கர்தினாலாகவும் உயர்வு பெற்று சிறப்பாக பணியாற்றினார். பிரான்ஸ் நகரில் 1274இல் ஜீலை 15ஆம் நாள் இறந்தார்.

ஜீலை - 16, புனித கார்மேல் அன்னை

கார்மேல் மலையிலே புனித கன்னிமரியாளின் நினைவாக முதல் ஆலயம் அர்ப்பணிக்கப்பட்டது. 1251இல் கார்மேல் சபையின் பெரிய தலைவரான புனித சீமோன்ஸ்தோக் என்பவருக்கு இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் என்னுமிடத்தில் மரியன்னை காட்சி கொடுத்ததாக பாரம்பரியம். நம் விண்ணக அன்னை உத்தரியத்தைக் காண்பித்தாள். இதை அணிபவர்களுக்கு விண்ணகக் கொடைகளையும், தனது பாதுகாப்பையும் அளிப்பதாக அன்னை உறுதி கூறினாள். ஒரு குரு உத்தரியத்தை மக்களுக்கு அளிக்க வேண்டும். உத்தரியத்தை வெறுமனே அணிந்தால் போதாது. உண்மையான கிறிஸ்தவ வாழ்வு வாழவேண்டும். இன்று கார்மேல் சபையினரின் மிக முக்கியமான விழாவாகும்.

ஜீலை - 22, புனித மதலேன் மரியாள் (- 84)

கலிலேயா நாட்டிலுள்ள மக்தலா என்னும் ஊரைச் சேர்ந்வள். நற்செய்தியில் காணும் பாவியான பெண்ணும், இயேசு சிலுவையின் அடியில் நின்றவளும் இவளே. இயேசு தனக்குச் செய்த உதவிகளுக்கு நன்றியாக, சாகும்வரை அவருக்கு  சேவை செய்து வந்தாள். உயிர்த்த இயேசுவை காணும்வரை அவள் ஓய்வெடுக்கவில்லை. “அவரை எங்கே வைத்திருக்கிறீர்கள்? நான் அவரைத் தூக்கிக் கொண்டு செல்வேன்”. என்ற வார்த்தை அவள் அன்பைக் காட்டுகின்றது. இவளை யூதர்கள் நாடு கடத்தினார்கள். இவள் சில சீடர்களுடன் பிரான்ஸ் நாட்டை அடைந்தாள் என்று பரம்பாயம் கூறுகின்றது.

ஜீலை - 25, புனித யாகப்பர் ( - 63)

கலிலேயாவிலுள்ள பெத்சாயிதா என்ற ஊரில் செபதேயு, சலோமே இவர்களின் மகனாகப் பிறந்தார். யாகப்பரையும் அவரின் தம்பி  யோவான் இருவரையும் இயேசு அழைத்தார். வலைகளையும், தந்தையையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்சென்றார்கள். பேதுருவுக்கு புதுமையாக ஏராளமான மீன்கள் அகப்பட்ட போதும், ஸ்நாபக அருளப்பரின் சீடரான போதும்,பேதுருவின் மாமியாரை குணப்படுத்திய போதும், இன்னும் பல நேரங்களில் இயேசுவின் அருகிலிருந்தார். “இடியின் மக்கள்” என்று ஆண்டவர் இவர்கள் இருவருக்கும் பெயரிட்டிருந்தார். பரிசுத்த ஆவியை பெற்றப்பின் ஸ்பெயின் நாட்டில் வேதம் போதித்து எருசலேமுக்குத்  திரும்பினார். 44இல் ஏரோது அகிரிப்பா மன்னன் இவரின் தலையை வெட்டிக் கொன்றான். வேதசாட்சி முடிபெற்ற முதல் அப்போஸ்தவர் இவரே.

ஜீலை - 26, புனித சுவக்கின் அன்னம்மாள்

   புனித அன்னம்மாள் பெத்லகேமில் பிறந்து, நாசரேத்தில் வாழ்ந்த சுவக்கின் என்பவரை மணந்தாள். இருவரும் தாவீது அரசரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நெடுங்காலமாக குழந்தை இல்லாமல் பின்பு மரியாள் பிறந்தாள். 3 வயது ஆனதும் தேவாலயத்திற்கு செல்லும்படி அவளை கடவுள் அழைத்தார். தியாக குணம் படைத்த பெற்றோர் குழந்தையை அர்ப்பணம் செய்தார்கள். ஆதியிலிருந்தே அன்னம்மாளுக்கு கோவில்கள் கட்டப்பட்டு விசுவசித்து வந்திருக்கிறார்கள். 4ஆம் நூற்றாண்டில் புனித சுவக்கீனுக்குத் நினைவாக எருசலேமில் ஓர் ஆலயம் அமைக்கப்பட்டது. சுவக்கீன் என்றால் ‘ஆண்டவரின் தயாரிப்பு’ என்றும், அன்னா என்றால் ‘இறைவனது அருள்’ என்றும் பொருள்படும்.

No comments:

Post a Comment

Ads Inside Post