சட்ட ஆலோசனை
ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு தேசியமொழி. ஒவ்வொரு நாடும் கிறிஸ்தவ நாடு, முஸ்லிம் நாடு என வரையறுக்கப்பட்டு செயல்படுகிறது. இந்திய நாடு மத சார்பற்ற நாடு என்று 1947க்கு பிறகு முடிவு செய்யப்பட்டு செயல்படுகிறது. இது சீக்கியருக்கோ, சமணர்களுக்கோ, பார்சிக்கோ, முஸ்லிம்களுக்கோ, கிறிஸ்தவர்களுக்கோ சொந்தமானதல்ல. இதன் அடிப்படையில் கீழ்க்கண்ட தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தின் பாலசமுத்திரம் கிராமத்தில் ஒரு பொது வழியில் முஸ்லிம்கள் தங்களது பிணத்தை எடுத்துச் செல்வதை இந்துக்கள் தடுத்தனர். பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். அவ்வழக்கின் தீர்ப்பை தலைமை நீதிபதி மார்கண்டேய கட்சி நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச் அளித்துள்ளது.
இந்தியா ஒரு ஜனநாயக, மதச்சார்பற்ற நாடு, அனைத்து மதங்களும், ஜாதிகளும் சமமானவை. அவரவர் விருப்பப்படி மதத்தைப் பின்பற்ற அவர்களுக்கு உரிமை உள்ளது. இந்துக்களுக்கு மட்டுமே இந்தியா சொந்தமல்ல. முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள், சமணர்கள், பார்சி சீக்கியர்கள் போன்ற அனைத்து மதத்தவர்களும் சட்டத்தின் முன் சமம். இந்துக்கள் மட்டுமே இந்த நாட்டில் முதல் தர குடிமக்களாக வாழவேண்டும் என்றும், மற்றவர்கள் இரண்டாம் தர குடிமகன்தான் என்பதும் சரியல்ல. நமது நாட்டில் வாழும் அனைவரும் முதல் தர குடிமகன்கள்தான்.
நமது நாடு சுதந்திரம் அடையும்போது இந்தியத் துணை கண்டத்தில் மதப் பிரச்சனை இருந்தது. நமது முன்னோர்கள் நமது நாட்டை இந்து நாடாக அறிவிக்கக்கூடாது என்றும், மதச்சார்பற்ற நாடாகத்தான் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அப்போது இதை செய்வதற்கு மிகவும் கஷ்டமான காரியம். பாகிஸ்தானை முஸ்லிம் நாடாக அறிவித்த நிலையில் இந்தியாவையும் இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்று நமது முன்னோர்களுக்கு கடுமையான நிர்பந்தம் இருந்திருக்க வேண்டும்.
ஆனால் அவர்கள் அந்த நிபந்தனைகளை எல்லாம் தடுத்துவிட்டனர்.
இந்தியாவில் பல மதங்கள், ஜாதிகள், மொழிகள், இனங்கள் உள்ளன. இருந்தாலும் நம்மை எல்லாம் ஒன்றுபடுத்தி வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்வது என்னவென்றால் மதச்சார்பற்ற கொள்கைதான். அனைவரையும் சமமாக மதிக்கும் தன்மையும் உள்ளது. இல்லையயன்றால் நமது நாடு நிலைத்து நிற்க முடியாது. சீனாவில் 125 கோடி பேர் உள்ளனர். இவர்களில் 96 கதவிகிதம் பேர் ஒரே குரூப்பைச் சேர்ந்தவர்கள். ஆனால் இந்தியாவில் 105 கோடி பேர் உள்ளனர். இங்கு பல மதங்கள், ஜாதிகள் பண்பாடு குரூப்கள் உள்ளன. இருந்தாலும் நம்மை எல்லாம் ஒன்றுபடுத்தி முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வது மதச்சார்பற்ற கொள்கையும் அனைவரையும் மதிக்கும் தன்மையும்தான். இந்தப் பாதையை தான் அசோகர், அக்பர் போன்ற பேரரசர்கள் காட்டினர்.
இந்த கிராமத்தில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக உள்ளனர். இந்தியாவில் எந்த பகுதியில் இருந்தாலும் சிறுபான்மை மக்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை பெரும்பான்மையினருக்கு உள்ளது. சிறுபான்மை மக்கள் தாங்கள் பாதுகாப்பாக மரியாதையுடன் வாழ்வதாக உணரவேண்டும். அவர்களை துன்புறுத்தக் கூடாது. சிறுபான்மையினரை மதிப்பது என்பது நாகரீக சமூகத்தின் அடையாளம் ஆகும் என்று அத்தீர்ப்பு கூறுகிறது.
No comments:
Post a Comment