16 ஆம் ஞாயிறு (16 - 07 - 2016 )
தொ. நூ. 18 : 1 - 10; கொலோ 1 : 24 - 28; லூக் 10 : 38 - 42
செவி கொடு
23 வயது இளம்பெண் ஒருவரின் கடிதத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது. “‘வாழப் பிடிக்கவில்லை, தற்கொலை செய்து கொள்ள விரும்புகிறேன். எவரையும் காரணமாக குறிப்பிட விரும்பவில்லை. எனக்கென்று யாருமில்லை. என்னில் புதைந்துள்ள எத்தனையோ ஏக்கங்கள், மன அழுத்தங்கள், யாரிடமும் எதையும் பகிர்ந்து கொள்ள முடியாமை... எனக்கு செவிமடுக்க யாருமில்லை. நேரத்தை ஒதுக்க, எனது பிரச்சனைகளுக்கு காது கொடுத்து கேட்க யாருமில்லை. எனவேதான் இந்த தற்கொலை முடிவை எடுக்கிறேன்’
.
இன்று மனித வாழ்வு சிக்கல்கள் நிறைந்ததாக மாறிவிட்டது. மன அழுத்தமும், மன உளைச்சலும் அதிகரிப்பு, பணம் சம்பாதிக்க வேண்டிய கட்டாயம், இடியாப்ப சிக்கலாகி வரும் குடும்ப வாழ்க்கை, சிதைந்து போகின்ற குடும்ப உறவுகள், பெருகி வருகின்ற மண முறிவுகள் இவை அனைத்தையும் உள்ளத்தில் அழுத்தி வைத்துக்கொண்டு வெறுமனே நாட்களை நகர்த்தும் மனிதர்கள் ஏராளம்.
இதற்கு தீர்வு என்ன? ஆற்றுப்படுத்துதல் என்பது இன்று அதிகம் பேசப்படுகிறது. இதன் அடிப்படையில் செவி மடுத்தல், நெறிப்படுத்துதல், வழிகாட்டுதல், ஆலோசனை கூறுதல், அறிவுரை வழங்குதல் - இவைகளையயல்லாம் தாண்டி ஒரு மனிதனுடைய உள்ள குமுறல்களை யாராவது உட்கார்ந்து கேட்டாலே போதுமானது.
நடைமுறை வழியில் ‘என்ன வேண்டும் உனக்கு, சீக்கிரமாக சொல், எனக்கு நேரமில்லை ... நீ சொல்வதையயல்லாம் கேட்க எனக்கு பொறுமை இல்லை, சொல்ல வேண்டியதை சுருக்கமாக சொல்’. இந்த அவசர செய்திகள் தான் மனித பிரச்சனைகளுக்குக் காரணம்.
இன்றைய நற்செய்தியில் சமாரியர்கள் இயேசுவை ஏற்றுக் கொள்ளாத ஒரு சூழ்நிலையில் வரப்போகும் பாடுகளை மனதில் வைத்து எருசலேமுக்கு இயேசு பயணம் செய்கிறார். அப்போது பெத்தானியாவிலுள்ள மார்த்தா ‡ மரியா வீட்டிற்கு செல்கிறார். இருவரும் இயேசுவின் நலனில் அக்கறையுடையவர்கள்.
மார்த்தா விருந்தோம்பலில் கவனம் செலுத்துகிறார். மரியா இயேசுவின் காலடியில் அமர்ந்து, அவர் சொல்வதை கேட்கிறார்.
உணவு உண்பதைக் காட்டிலும், மன உணர்வுகளை பகிர்ந்து கொள்ளவே இயேசு அவ்வீட்டிற்கு செல்கிறார். அவருடைய மன உணர்வுகளை புரிந்து கொண்டு, செவிமடுக்கின்ற பணியை செய்த மரியாவை இயேசு பாராட்டுகிறார். இயேசுவுக்கு ஆலோசனை மற்றும் அறிவுரை கூறுகின்ற அளவுக்கு மரியா பெரிய ஆள் இல்லைதான். ஆனால் உணர்வுகளை புரிந்து கொண்டு, இயேசுவுக்கு செவிமடுத்த மரியா உண்மையிலேயே நல்ல பங்கை தேர்ந்து கொண்டாள்.
மார்த்தா பணியில் மூழ்கி, இறைவார்த்தையைக் கேட்டு மகிழ்ந்திருக்க முன் வரவில்லை. அன்றாட நடைமுறை வாழ்க்கைப் பிரச்சனைகளில் ஒரேயடியாக மூழ்கி, ஆன்மீக காரியங்களை முற்றிலும் மறந்து விடுவது நல்லதல்ல என்றும், உடலைவிட ஆன்ம வாழ்வு முக்கியமானது என்றும் மார்த்தாளுக்கும், நமக்கும் இயேசு உணர்த்துகிறார்.
பரப்பான உலகில் நாம் நேரத்தை ஒதுக்கி, பொறுமையோடும், பரிவோடும் மற்றவர்களின் எண்ணங்களை, ஏக்கங்களை புரிந்துக் கொண்டு, செவிமடுக்க நாம் தயாராக இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment