பணிவு என்னும் இனிய பாதை
4. பணிவின் அடையாளங்கள்
- அருள்பணி. மகுழன்,
பூண்டி மாதா தியான மையம்.
அரசர் ஒருவர் இருந்தார். அவர் மனதில் ஒரு தீராத வருத்தம் இருந்தது. அதாவது அவரின் மனைவியான அரசி நாளுக்கு நாள் உடல் இளைத்துக் கொண்டே வந்தாள். ஆனால் அவருக்குத் தெரிந்த ஒரு மீனவரின் மனைவி நல்ல உடல்வளத்தோடு இருந்தாள். ஒருநாள் அரசர் அந்த மீனவரை அரண்மனைக்கு அழைத்து, “என் மனைவி இளைத்துக் கொண்டு போக, உன் மனைவியோ உடல்வளத்தோடு இருக்கிறாளே, அதற்கு என்னக் காரணம்?” என்று கேட்டார். மீனவரோ, “அது இரகசியம் அரசே; இருந்தாலும் உங்களுக்குச் சொல்கிறேன். நான் தினமும் அவளுக்கு நாவின் கறி கொடுக்கிறேன். நீங்களும் உங்கள் மனைவிக்குக் கொடுங்கள்” என்றார். அரசர் தன் நாட்டில் உள்ள எல்லாக்கறிக்கடைக்காரர்களையும் அழைத்து, நாவின் கறியை தினமும் தவறாமல் அனுப்பி வைக்கும்படி கட்டளையிட்டான். தினமும் நாவின் கறி சமைக்கப்பட்டு அரசிக்குத் தரப்பட்டது. ஆனாலும் அரசியின் உடல்நிலை தொடர்ந்து மோசமானது.
அரசர் மீனவரைத் திரும்பவும் அழைத்து, “என் மனைவியின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை. அதனால் உன் மனைவியை எனக்குக் கொடுத்துவிடு. என் மனைவியை நீ அழைத்துச்செல். இல்லையயனில் உன்னை தூக்கிலிடுவேன்” என்று மிரட்டினார். மீனவரும் வேறுவழியின்றி ஏற்றுக்கொண்டார்.
ஆறுமாதம் கழித்து அரசர் கடைவீதி வழியாகச் சென்றபோது பழைய மனைவியான அரசியை பார்க்க நேர்ந்தது. அரசி இப்போது மாறிப் போயிருந்தாள். சதைப்பிடிப்போடு இருந்தாள். மகிழ்ச்சியாகக் காணப்பட்டாள். அரசர் அவளை அழைத்து, “உன்னிடம் மாற்றம் தெரிகிறது. உன் உடல் முன்னேற்றம் அடைந்ததற்கு காரணம் என்ன?” என்று வினவினார். “எல்லாம் அந்த நாவின் கறியின் மகிமையே” என்றாள் அரசி. மீனவரின் மனைவி தற்போது இளைத்து துரும்பாகி விட்டாள். “நீ திரும்பவும் அரண்மனைக்கு வந்து விடு” என்றார். அரசியோ, “நான் உங்களோடு வரமாட்டேன். என் கணவர் என்னை தங்கமாக வைத்துக் கொள்கிறார். உங்களைப் போல வார்த்தைகளால் கொல்ல மாட்டார்; அன்பாக பேசுவார்; பாராட்டுவார். அதைத்தான் நாங்கள் நாவின் கறி என்று சொல்கிறோம். நீங்களும் அதை கடைபிடியுங்கள். நீங்களும் மகிழ்ச்சியாய் இருப்பீர்கள். உங்கள் மனைவியும் மகிழ்ச்சியாய் இருப்பாள்” என்று சொல்லி அனுப்பினாள்.
என்னிடத்தில் பணிவு அல்லது தாழ்ச்சி உள்ளது என்பதற்கான சில அடையாளங்கள் :
1. பிறரை மனதார பாராட்டுவேன்.
2. பிறர் பாராட்டும்போது மனமுவந்து புன்னகையோடு ஏற்றுக் கொள்வேன்.
3. பிறர் என்னை திருத்தும்போது அதில் இருக்கும் உண்மையை உணர்ந்து நன்றி சொல்வேன்.
4. எனக்கு உதவி தேவைப்படும்போது தயங்காமல் பிறர் உதவியை நாடுவேன்.
5. நல்லவை நடைபெறும்போது அதற்கு நான் மட்டுமே காரணம் என்று சொல்லாமல் பிறரின் பங்கையும் அங்கீகரிப்பேன்.
6. தவறுகள் நடைபெறும்போது அதற்கு பிறர் மட்டுமே காரணம் என்று சொல்லாமல் என் பங்கையும் ஏற்றுக்கொள்வேன்.
7. பொறுமையை கடைபிடிப்பேன்.
8. எளிமையாக இருப்பேன்.
9. என் வாழ்வு ஒரு திறந்த புத்தகமாக இருப்பதற்கு முயற்சி செய்வேன்.
10. மனிதகுல ஏற்றத்தாழ்வுகளை ஏற்றுக்கொள்ள மறுப்பேன்.
11. பிறரை மன்னித்து ஏற்றுக்கொள்வேன்.
12. பிறரிடம் மன்னிப்புக் கேட்பதற்கும் தயங்க மாட்டேன்.
13. சகிப்புத் தன்மையை அதிகரிப்பேன்.
14. புறணி பேசுவதைத் தவிர்ப்பேன்.
15. ஒற்றுமைக்காக முயற்சி செய்வேன்.
16. உரையாடலை தவிர்க்க மாட்டேன்.
17. பிறர்மீது நம்பிக்கை கொள்வேன்.
18. இறைவனைச் சார்ந்து வாழ்வேன்.
No comments:
Post a Comment