துக்காராம்
(சுதந்திர தினத்திற்கான சிறப்பு சிறுகதை)
- கேத்தரீன் ஆரோக்கியசாமி, திருச்சி
துக்காராம் .... எங்கள் தெருவில் எல்லோருக்கும் பரிட்சையமான ஒரு ஆன்மா. இவன் யார்? இவன் எங்கிருந்து வந்தான்? இவன் பேசும் மொழி என்ன? இவன் பேர் என்ன? எதுவுமே இங்குள்ள யாருக்கும் தெரியாது. எப்படி இந்த தெருவுக்குள் வந்தான் என்றும் யாருக்கும் தெரியாது.
ஒருநாள் பிச்சைக்காரனைப் போல், தெருக்கோடியிலுள்ள டீக்கடையில் புரியாத மொழியில் அவனது வயிற்றுப்பசியை வெளிப்படுத்தியபோது, கடைசி வீட்டு பங்குஜதம்மா மாமியார் லெஷ்மி பாட்டிதான் ஏதோ எல்லா மொழியும் தெரிந்தவர் போல், அவன் பசிக்கு சாப்பாடு கேட்கிறான் என்பதை உணர்ந்து, அவனை வீட்டுக்கு அழைத்து வந்தார்கள்.
லெஷ்மி பாட்டி அம்மாவாசை அன்று காக்கைக்கு சோறு வெச்சி கூப்பிட்டும் வராததால், தன் கணவரே இவன் உருவில் வந்து சாப்பாடு கேட்கிறார் என்று சந்தோத்தோடு அழைத்து வந்து இலைபோட்டு வடை பாயாசத்தோடு, சாப்பாடு போட்டார். அவனுக்கு துக்காராம் என்ற நாமத்தை சூட்டியதும் பாட்டிதான்.
பசியின் உக்கிரம் மொழிகளுக்கு அப்பாற்பட்டது. அதை புரிந்து கொள்ள கருணை உள்ளம் போதும். லெஷ்மி பாட்டி அவர் வீட்டுக்கு அழைத்து வந்ததிலிருந்து, அவன் இந்த தெருவுக்கு சொந்தக்காரனாகிவிட்டான். பாட்டி வழியாக எல்லோருக்குமே அவன் துக்காராமாகிவிட்டான்.
தினமும் லெஷ்மி பாட்டி துக்காராமை வீட்டுக்கு அழைத்து வந்து சாப்பிட ஏதாவது கொடுப்பதும், பாட்டிலில் தண்ணீர் கொடுப்பதும் வழக்கமாகிவிட்டது. ஐயர் மாமி வீட்டு காம்பவுண்டு மூலையில் வேப்பமர நிழல்தான் அவனது இருப்பிடம். அழுக்காக அவன் போட்டிருந்த வெள்ளை ஜிப்பாவும், சட்டையும் அவன் வட நாட்டுக்காரன் என்பதை உறுதிபடுத்தினாலும், அவன் பேசும் மொழி இந்தியோ, குஜராத்தியோ, மராத்தியோ இல்லை. புரியாத மொழி ஒரியாவாக இருக்கவேண்டும் என்பது ஐயர் மாமாவோட கணிப்பு. முதலில் துக்காராம், தன் வீட்டு காம்பவுண்டு ஓரத்தில் படுக்கக்கூடாது என்று சொன்னவர், என்ன நினைத்தாரோ பழைய பாய் ஒன்றை அவனுக்கு கொடுத்து படுக்க உதவினார்.
இப்போது, லெஷ்மி பாட்டி ஒரு பழைய எவர்சில்வர் தட்டை கொடுத்து சாப்பிட வெச்சிக்கோ என்று சொல்ல, அதை புரிந்தவனாக, அவன் சொன்ன பதில் பாட்டிக்கு மட்டும் புரியும். தினமும் மருமகளுடன் மல்லுக்கு நிக்கும் பாட்டி, இவனிடம் மட்டும் அதிகமான பாசத்தை காட்டுவது புரியாத புதிர்.
டீக்கடை நாயர், இவனுக்கு தினமும் பேப்பர் கப்பில் ஒரு டீ குடுத்துவிடுவார். பதிலுக்கு அவன் சொல்லும் நன்றி புரியாவிட்டாலும், புன்னகையை பதிலாக்கி தன் வேலையில் மூழ்கிவிடுவார்.
மேரி டீச்சரும் தன் பங்குக்கு, வீட்டில் மிச்சமாகும் டிபன், சாப்பாட்டை கொடுக்க தவறுவதில்லை. கிறிஸ்மஸ் வந்தபோது மேரியும், அவள் கணவர் தியோடரும், அவனுக்கு புது ஜிப்பாவும், சட்டையும் வாங்கி கொடுத்து போட சொன்னபோது, அவனுக்கு பிடித்த உடை இதுதான் போல. ஒருவேளை இவன் சேட்டாக இருப்பானோ என்று டீச்சர் சொன்னபோது எல்லோருக்கும் ஒருமித்த கருத்து இருந்தது உண்மை. இவன் ஒரு கிறிஸ்துவனா இருக்கக்கூடாதா என்று மேரி டீச்சருக்கு மனசுக்குள் ஒரு ஆசை.
அவன் யாராக இருப்பான் என்ற ஆவல் எல்லோர் மனதிலும் இருந்தது. ஜங்னில் டிபன் கடை நடத்திவரும் ஜெய்ப்பூர் இந்திக்காரர்களுக்கும் துக்காராம் என்ன மொழி பேசுறாருன்னு புரியலன்னு சொல்லிட்டாங்க.
காலையில் கோலமாவு வித்துக்கிட்டுப் போகும் கந்தன், துக்காராமோட நண்பன். அவன் கொடுக்கும் கோலப்பொடியில் துக்காராம் வட்ட, வட்டமா போடும் கோலம் ரங்கோலியா? என்ற ஆராய்ச்சியே உண்டு. கோலம் போட்டுவிட்டு லெஷ்மி பாட்டியிடம் காட்டி அவன் சொல்லும் விளக்கம், அவர்களுக்கு மட்டுமே புரியும்.
தள்ளு வண்டியில் வாழைப்பழம் விக்கும் கணேசனுக்கு துக்காராம் மீது ஒரு பரிவு. தினமும் அவனுக்கு பழம் கொடுக்காமல் போவதே இல்லை. லெஷ்மி பாட்டி அழுக்கு மூட்டையாகத் திரியும் துக்காராம் குளிக்க தன் வீட்டுக்கேணியிலிருந்து தண்ணீர் இறைத்து குளிக்க சொன்னதால் பாட்டிக்கும், பேரன் ரவிக்கும் சண்டை. எல்லோரையும் வீட்டில் குளிக்க அனுமதிக்க முடியாது என்பது அவன் வாதம். ஆனால், பாட்டி பிடிவாதமாக இது என் வீடு. என் இஷ்டப்படிதான் எல்லாம் நடக்கனும். வேற ஒருத்தருக்கும் உரிமையில்லைன்னு சொல்லி அடக்கிட்டாங்க. துக்காராம் குளிச்சவுடன் விபூதி, குங்குமம் கொடுத்து அவன் ஒரு இந்துவாக மாற்றி பிள்ளையார் கோவிலுக்கு கூட்டிக்கொண்டு போய் சாமி கும்பிட வைத்தார்.
ரம்ஜான் நோன்பு ஆரம்பம் முதல் துக்காராமுக்கு நோம்பு கஞ்சியும், சமோசாவும் கொடுத்து உபசரித்தார் ரஹீம்பாய். ரம்ஜான் அன்று ஒரு குல்லா, கைலி, சட்டை குடுத்து போடச்செய்து மசூதிக்கு அழைத்துச் சென்றார் ரஹீம்பாய். முஸ்லீம் போன்ற தோற்றத்தில் துள்ளி குதித்து ஓடிக்கொண்டிருந்தான் துக்காராம். அவனை ஒரு முஸ்லீமாக மாற்றுவதில், ரஹீம்பாய் முயன்று கொண்டிருந்தார்.
எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பவன்தான் உலகில் வாழ்கிறான். சிரிக்க நல்ல உள்ளம் தேவை. எப்போதும் சிரித்துக் கொண்டும், உற்சாகத்துடனும் காணப்படும் துக்காராம், ஒரு மகிழ்ச்சியான மனிதன். நிறைவுள்ள குறையில்லா மனிதன். அவன் எதற்கும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. அவனது கடந்த காலம் அவனுக்கு தெரியுமா? எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தெரியுமா? ஆனால், நிகழ்காலத்தில் நிறைவுள்ள முழு மனிதனாக வாழ்கிறான். தெருக்கோடியில் வாழ்ந்தாலும், ராஜபோக வாழ்க்கை அது. இந்த தெருவுக்கே அவன் ஒரு காவலாளி.
இன்று என்ன ஆச்சி? துக்காராமுக்கு தலையில் சின்ன கதர் குல்லா. கதர்சட்டை, கதர்வேஷ்டி. அவன் சட்டையில் தேசிய கொடியை குத்தியிருக்கிறான். ஓ! இன்று சுதந்திர தினம். தெருவில் உள்ள எல்லோருக்கும் சல்யூட் அடித்துவிட்டு ஜெய்ஹிந்த் என்று தெளிவாக சொல்கிறானே, இவன் யார்? இந்துவா? லெஷ்மி பாட்டிக்கு சொந்தக்காரனா? முஸ்லீமா? ரஹீம் பாயோட உறவா? கிறிஸ்டீனா? மேரி டீச்சரோடு பந்தமா?
துக்காராம் ஒரு இந்தியன்! சுதந்திர இந்தியாவின் குடிமகன். ஜாதி, மத, மொழி, இனத்திற்கு அப்பாற்பட்டவன். சுதந்திர இந்திய நாட்டின் குடிமகன்! எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பதை உணர்த்தும் பாரத தேவியின் புதல்வன். அதில் தான் அவனுக்கு பெருமிதம்.
நான் யார்? என்பதை சொல்லாமல், சொல்லும் அவனது மொழி புதுவிதம், வேற்றுமையில் ஒற்றுமை பாராட்டும் பாரத தேவியின் தலைமகன் நான் என்பதை அவனது மிடுக்கான நடையும், சுதந்திர இந்திய கொடியை பெருமையுடன் பார்த்துக் கொண்டு, அவன் எல்லோருக்கும் அடிக்கும் சல்யூட், அவன் யார் என்பதை புரியவைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
முன்னோர்களுக்கு கடுமையான நிர்பந்தம் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அந்த நிபந்தனைகளை எல்லாம் தடுத்துவிட்டனர்.
இந்தியாவில் பல மதங்கள், ஜாதிகள், மொழிகள், இனங்கள் உள்ளன. இருந்தாலும் நம்மை எல்லாம் ஒன்றுபடுத்தி வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்வது என்னவென்றால் மதச்சார்பற்ற கொள்கைதான். அனைவரையும் சமமாக மதிக்கும் தன்மையும் உள்ளது. இல்லையயன்றால் நமது நாடு நிலைத்து நிற்க முடியாது. சீனாவில் 125 கோடி பேர் உள்ளனர். இவர்களில் 96 கதவிகிதம் பேர் ஒரே குரூப்பைச் சேர்ந்தவர்கள். ஆனால் இந்தியாவில் 105 கோடி பேர் உள்ளனர். இங்கு பல மதங்கள், ஜாதிகள் பண்பாடு குரூப்கள் உள்ளன. இருந்தாலும் நம்மை எல்லாம் ஒன்றுபடுத்தி முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வது மதச்சார்பற்ற கொள்கையும் அனைவரையும் மதிக்கும் தன்மையும்தான். இந்தப் பாதையை தான் அசோகர், அக்பர் போன்ற பேரரசர்கள் காட்டினர்.
இந்த கிராமத்தில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக உள்ளனர். இந்தியாவில் எந்த பகுதியில் இருந்தாலும் சிறுபான்மை மக்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை பெரும்பான்மையினருக்கு உள்ளது. சிறுபான்மை மக்கள் தாங்கள் பாதுகாப்பாக மரியாதையுடன் வாழ்வதாக உணரவேண்டும். அவர்களை துன்புறுத்தக் கூடாது. சிறுபான்மையினரை மதிப்பது என்பது நாகரீக சமூகத்தின் அடையாளம் ஆகும் என்று அத்தீர்ப்பு கூறுகிறது.
No comments:
Post a Comment