Pages - Menu

Tuesday, 26 July 2016

10. நான் எழுத்தாளன் ஆனேன்

10. நான் எழுத்தாளன் ஆனேன்
- லெயோ ஜோசப்,திருச்சி

   டெலிபிரிண்டர் ஆபரேட்டர் ஆனேன்

நான் ராமகிருஷ்ணா தியேட்டரில் மேலாளராக இருந்தபோது மாலை முரசு நாளிதழில் பிழை திருத்தும் வேலை காலியாக இருப்பதை, அங்கு வேலை பார்க்கும் நண்பன் ஒருவன் மூலம் கேள்விப்பட்டேன். எழுத்துத் தொடர்பான வேலை ஆயிற்றே! விடுவேனா?

மாலை முரசு மேலாளரைப் போய்ப் பார்த்தேன். அவர் என் படிப்பைப் பற்றி கேட்டு விட்டு, மறுநாள் மாலை முரசின் முதலாளி திரு.இராமச்சந்திர ஆதித்தன் வருவதாகவும், அவரிடம் கேட்டு விட்டு சேர்த்துக் கொள்வதாகவும் சொன்னார். மறுநாள் முதலாளி வந்தார். மேலாளர் என்னை அவரிடம் அறிமுகம் செய்தார்.

சினிமா வேலை நல்ல வேலைதானே! அதை ஏன் விடுகிறீர்கள்? என்று கேட்டார் திரு.இராமச்சந்திர ஆதித்தன். அதில் எதிர்காலம் இல்லை ஐயா என்றேன். வேலையில் சேர்த்துக் கொண்டார். நான் பிழை திருத்துபவன்தான் என்றாலும், நிருபர்கள் இல்லாதபோது சில நிகழ்ச்சிகளுக்கு ஆசிரியர் என்னை அனுப்புவார்.

ஒரு சமயம் தஞ்சையில் நடந்த மெடிக்கல் காலேஜ் ஆண்டு விழாவிற்கு ஆசிரியர் என்னை அனுப்பினார். அங்கே துளசிராமன் என்றறொரு நிருபர் இருந்தார். அவரைப் போய் சந்தித்தேன். இருவரும் பேருந்தில் மெடிக்கல் கல்லூரிக்குப் போனோம். விழா முடிய நடுச்சாமம் ஆகிவிட்டது. இருவரும் நடந்தே வந்து தஞ்சை பஸ் நிலையம் அடைந்தோம். நான் திருச்சிக்கு வந்தேன்.

மாலை முரசு அலுவலகத்தில், ஓர் இடத்துக்கு நிருபரை அனுப்பினால் செலவுக்குப் பணம் கொடுப்பார்கள். போய் வந்த பிறகு கணக்குக் கொடுக்க வேண்டும். தஞ்சாவூரில் மெடிக்கல் கல்லூரிக்குப் போகும்போது, துளசிராமனே பேருந்துக்கு டிக்கட் எடுத்தார். ஓட்டலில் உணவு வாங்கிக் கொடுத்தார். ஆக, எனக்கு தஞ்சாவூருக்குப் போக வர பேருந்து செலவுதான்.

அதை ஒரு பேப்பரில் எழுதி ஆசிரியரிடம் காண்பிக்க வேண்டும். அவர் கையயாப்பமிடுவார். அதை நிர்வாகியிடம் காண்பிக்க வேண்டும். அவர் கையயாப்பம் இட்ட பிறகு, காசாளரிடம் கணக்கு கொடுக்க வேண்டும். நான் கணக்கு எழுதி ஆசிரியரிடம் கொண்டு போனேன்.

இரவு சாப்பிடவில்லையா? என்று அவர் கேட்டார். துளசிராமன் வாங்கிக் கொடுத்தார் என்று சொன்னேன். டவுன் பஸ்சுக்கு? என்று கேட்டார். அதையும் அவரே கொடுத்தார் என்று சொன்னேன். நான் கணக்கு எழுதிய தாளில் மேலும் அனுமதிக்கலாம் என்றெழுதி கையயாப்பமிட்டார். நிர்வாகி மேலும் சில ரூபாய்கள் எழுதி கையயாப்பமிட்டார். அதிலிருந்து நிருபர்கள் இருந்தாலும் சில முக்கிய நிகழ்ச்சிகளுக்கு ஆசிரியர் என்னை அனுப்புவார்.

அப்படி, சிவாஜி கணேசன், ஜெயலலிதா, நாகேஷ், ரவிச்சந்திரன், சச்சு, சந்திரகாந்தா, பிரமிளா, பத்மினி, ஜெய்சங்கர், மனோகர் போன்றோரை பேட்டி கண்டு எழுதியிருக்கிறேன். தி.மு.க. மாநாட்டில் எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்திருக்கிறேன். நடிகர்களும் சரி, அரசியல் தலைவர்களும் சரி, பத்திரிக்கை நிருபர்கள் என்றால் காக்க வைக்க மாட்டார்கள். உடனே சந்தித்து விடுவார்கள். கருணாநிதி முதலமைச்சராக இருக்கும்போது பலமுறை சந்தித்திருக்கிறேன்.

உதவி ஆசிரியர் ஒருவர் மாற்றலாகிப் போனார். அவருக்குப் பதிலாக டெலிபிரிண்டர் ஆபரேட்டர் சந்திரசேகரை நியமித்தார்கள். எனக்கு ஃபிங்கரிங் தெரியும் ஆதலால், என்னை டெலிபிரிண்டர் ஆபரேட்டர் ஆக்கினார்கள். டெலிபிரிண்டர் என்பது பத்திரிக்கை அலுவலகங்களில் இருக்கும். டைப்ரைட்டர் போன்று சற்றுப் பெரிதாக இருக்கும். எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்கும். செய்திகளைத் தமிழில் டைப் செய்ய வேண்டும். அதற்கு சில இலக்கணங்கள் உண்டு. ற என்றால் யூய என்று டைப் செய்ய வேண்டும். ண என்றால் ஹிய என்று டைப் செய்ய வேண்டும். சென்னையில் செய்தி அனுப்பினால் அது திருச்சிக்கும், திருநெல்வேலிக்கும் கிடைக்கும். அதே போல் நாங்கள் செய்தி அனுப்பினாலும் எல்லா ஊர்களுக்கும் கிடைக்கும்.

சித்ரா வெளியீட்டின்போது ஃபாதர் ஜார்ஜ் வந்திருந்தார். தன்னை அறிமுகம் செய்துக்கொண்டார். கலைக்காவிரியைத் தோற்றுவித்தவர் இவர்தான். எனக்கு அழைப்பு விடுத்தார். கலைக்காவிரி தனிக் கட்டிடத்தில் செயல்படும் முன், ஆயர் இல்லத்தில் ஓர் அறையில் செயல்பட்டுக் கொண்டிருந்தது. ஹோலிகிராஸ் மடத்தைச் சேர்ந்த அருள்சகோதரி ஒருவரும், செர்வைட் கான்வென்ட்டைச் சேர்ந்த ஓர் அருள்சகோதரியும், முருகேசன் என்றொரு எழுத்தாளரும் அவருடன் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.         (இன்னும் சொல்வேன்)

No comments:

Post a Comment

Ads Inside Post