Pages - Menu

Wednesday, 27 July 2016

ஆலோசனை நேரம்

ஆலோசனை நேரம்

வேதியரிடம் கேளுங்கள் - 14
- நல்லை.இ.ஆனந்தன்
 உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் ஓட்டுப்போட பணம் வாங்கினீர்களா? இல்லையா?

-திரு.அண்ணாசெல்வம்,சின்னாளப்பட்டி

அய்யா, கும்பகர்ணன் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரரே, ஓட்டுப்போட்டு, ரிசல்ட் வந்து, ஆட்சி அமைத்து மூன்று மாதம் கழித்து இப்போதுதான் கண் முழிச்சீங்களோ? தமிழக வாக்காளர்கள் ஓட்டுப்போட பணம் கேட்குமளவிற்கு இன்னும் தரம் தாழ்ந்து விடவில்லை. வேட்பாளர்கள்தான் ஓட்டுக்குப் பணம் கொடுக்க அலைந்தார்கள். கண்டெய்னர் லாரியை வைத்துக் கொண்டு பிலிம் காட்டினார்கள். சில இடங்களில் பணம் கொடுத்தும் டெபாசிட் காலியானார்கள். செய்தித்தாள்களில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டது என்று தான் படித்திருப்பீர்கள் (ஒரு தாழ்மையான வேண்டுகோள். ரகசியமாகக் கேட்கவேண்டியதைப் பகிரங்கமாகக் கேட்காதீர்கள். எல்லாருமே மாட்டிக்கொள்வோம்.)

2. ஒரு சிலர் நான் எது பேசினாலும் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். இதனால் வெளியில் ஏதாவது பேசவே பயமாக இருக்கிறது?

- அமலாதேவி, பொள்ளாச்சி

உங்கள் பிரச்சனை இயேசுநாதருக்கே இருந்தது. பலர் அவரது கருத்துக்களைத் தவறாகவே புரிந்து கொண்டார்கள். ஒரு காலம் வரும். அப்போது உண்மையை உணர்ந்துக் கொள்வார்கள். எனவே அதிகம் பயப்பட வேண்டாம். கதை சொல்கிறேன். கவனமாய்க் கேளுங்கள். ஒரு தந்தை சாகும் வேளையில் தனது மகனிடம் சொன்னார். நான் சொல்லும் மூன்று அறிவுரைகளை மட்டும் செயல்படுத்து. வாழ்வில் வெற்றியடைவாய்.

1; பெற்றோர்க்கும், பெரியோர்களுக்கும் சோறு போடாதே. 2. கடன் கொடுத்தவரிடம் சென்று கடனைத் திருப்பிக் கேட்காதே.  3. விவசாய நிலத்தைச் சுற்றி வேலி போடாதே. அப்பாவின் மறைவிற்குப் பின் அவன் தப்பாது அதன்படி நடக்க, ஊராரின் ஏச்சும், பொருளாதாரச் சிக்கலும், விவசாயத்தில் பேரழிவும் நடந்தது. பிறகு முனிவரிடம் சென்று ஆலோசனை கேட்டான். அதற்கு அவர் சொன்னது. பெற்றோருக்கும், பெரியோருக்கும் செரிமான பிரச்சனை இருக்கும். அவர்களாகவே தேவைக்கேற்ப போட்டு சாப்பிடும்படி விட்டுவிட வேண்டுமே தவிர தட்டு நிறைய அள்ளிப் போட்டு நீட்டக்கூடாது. கடன் கொடுக்கும்போது, வாங்கிய கடனை ஒழுங்காகத் திருப்பித் தரும் நல்லவரிடம் மட்டுமே கடன்தரவேண்டும். அயோக்கியனிடம் கொடுத்தால் அலைய வேண்டி வரும். தரமானவர்களுக்கு மட்டுமே கடன் கொடுக்கவும். 3. விவசாயம் செய்யும் போது பக்கத்துத் தோட்டக்காரனிடம் பாசத்தோடு பழகினால் அவன் நமது தோட்டத்தையும் நாம் இல்லாதபோது ஒருகண் பார்த்துக் கொள்வான். வேலி போட அவசியமில்லை. இப்போதுதான் மகளுக்குப்புரிந்தது. அப்பாமேல் தப்பு இல்லை. அவரை தப்பாகப் புரிந்து கொண்டதுதான் தன் தவறு என்பதை உணர்ந்து கொண்டான்.

3. முதுமை ஒரு வரமா அல்லது சாபமா?

- திரு. முத்துச்சாமி, தூத்துக்குடி

வரம். ஏனெனில் பல பேருக்கு அது வாய்ப்பதில்லை. இளமையிலேயே போய் விடுகிறார்கள். சாபமாக மாற்றுவதும், வரமாக ஆக்குவதும் முதியவர்கள் கையில் இருக்கிறது. வயதான காலத்தில் வாழ்க்கையை ஓட்ட வழிவகைகளை திட்டமிட்டுச் செயல்படும் முதியோர்கள் சற்று நிம்மதியுடன் இருக்கிறார்கள். இருப்பது எல்லாவற்றையும் தாரை வார்த்துவிட்டு மற்றவரிடம் அஞ்சுக்கும், பத்துக்கும் கையேந்துகிற ஆசாமிகளும் இருக்கிறார்கள். இன்றைய இளையோர், நாளைய முதியவர்கள். எனவே இளையோரே, உங்கள் எதிர்காலத்தைச் சந்திக்கத் தயாராக இருங்கள். வாழ்க்கை வசப்படும்.

04. விபச்சாரத்தில் பிடிபட்ட பெண் நிகழ்வில் இயேசு குனிந்து தரையில் என்ன எழுதினார்?

- திருமதி. சகாயமேரி, தஞ்சாவூர்.

யோவான் தனது நற்செய்தியில் இயேசு தரையில் குனிந்து எழுதினார் என்று எழுதினாரே தவிர, என்ன  எழுதினார் என்பதுபற்றி குறிப்பு இல்லை. ஒரு யூகம்தான். சொல்கிறேன். பத்துக்கட்டளைகளைத் தரையில் எழுதியிருக்கலாம். கொலை செய்யாதே என்று அந்த மகளுக்கும் எழுதியிருக்கலாம். எப்படியோ... இயேசு அந்த மகளின் தலையயழுத்தை மாற்றி எழுதிவிட்டார். சாவைச் சந்திக்க இருந்த அவள் வாழ்வைப் பெற்றுக்கொண்டாள். மரண தண்டனையை இயேசு மாற்றி எழுதிவிட்டு போனசாக ஓர் அட்வைஸ் செய்தார். இனி பாவம் செய்யாதீர்.

05. தமிழ்ப் பெண்கள் கொலை செய்யப்படுவதையும், தற்கொலை செய்துக் கொள்வதையும் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

- செல்வி. அகிலா, கன்னியாகுமரி.

அணுசக்தி ஆக்கத்திற்கும், அழிவுக்கும் பயன்படும் என்பது அறிவியல் உண்மை. அலைப்பேசியும் அதேபோலதான். அதை ஆக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்தியிருந்தால் இத்தகைய அவலங்கள் நேர்ந்திருக்காது. விஞ்ஞானத்தோடு அதிகமாக விளையாட ஆரம்பித்தால் விளைவுகள் விபரீதமாகும் என்பதை முதலில் பெற்றோர்கள்தான் புரிந்துக்கொள்ள வேண்டும். விலையுயர்ந்த செல்போன் வாங்கித் தரும் போதே.... சில அறிவுரைகளை கண்டிப்புடன் கூற வேண்டியது பெற்றோரின் கடமை. ‘எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே. அது நல்லவராவதும். தீயவராவதும் பெற்றோர் வளர்ப்பிலே’. எனவே வாழ்க்கையை வாழ்வதெப்படி என்று வளரும் சமுதாயத்திற்குப் புரிய வையுங்கள் பெற்றோர்களே! இதுதான் தற்போதைய அவசர, அவசியத் தேவையாகும்.

06. என் குடும்பம் கைராசிக் குடும்பமாகத் திகழ ஆலோசனைகள் கூறவும்?

- வர்றே, வா.... இதைத்தான் எதிர்பார்த்தேன். ஒரு வீட்டில் மனைவி தெய்வமகளாக இருக்கும் பட்சத்தில் அவள் என் கணவன் என் தோழன் என்று வாழ்வாள். அந்த வீடும் தெய்வம் தந்த வீடு ஆக இருக்கும். சண்டை சச்சரவின்றி மெளன ராகம் இசைத்தால் வீட்டில் மகிழ்ச்சி தாண்டவமாடும். உள்ளம் கொள்ளை போகுதே என்று ஒவ்வொரு நிமிடமும் வாழலாம். தேவையான சமயத்தில் தம்பதியர் மனம் விட்டு நெஞ்சம் பேசுதே என்று உரையாடினால், உறவே .... உயிரே என்று வாழ்வீர்கள். இறைவன் மழலைச் செல்வம் அளித்தால் அவை இனிய இருமலர்கள் ஆகத் திகழும். பிறகு உங்கள் குடும்பம் கைராசிக் குடும்பமாகத் திகழும் (தயவுசெய்து தொலைக்காட்சித் தொடர்களில் படங்களை மட்டும் பார்க்கவும். பாடங்களை கற்றுக் கொள்வதில் கவனமாக இருக்கவும். வாழ்த்துக்கள்!).

No comments:

Post a Comment

Ads Inside Post