புரிதல் தரும் பணிதல்
சிறுகதை
திருமதி. க. சந்தோசம் லியோ, விரகாலுVர்
‘தேவி எழுந்திரும்மா காலேஜ்க்கு நேரமாகி விட்டது. கிளம்பி சாப்பிடவாம்மா’ என்ற படி சமையலறையில் உற்சாகமாக அன்பையும் பாசத்தையும் சேர்த்து சமைத்துக் கொண்டிருந்தாள் அம்மா வேணி.
தூக்கம் தேவியின் கண்கள் திறக்க ஒத்துழைக்கவில்லை. ஒருவழியாய் கஷ்டப்பட்டு எழுந்து வந்தாள். ‘தூங்கும் பொழுது ஏன் கத்திக்கொண்டே இருக்க’ என்று கோபத்தோடு தாய் வேணியை எதிர்த்து பேசினாள்.
வேணிக்கு முழு உலகமும் தன் மகள் தேவிதான். எப்பொழுதும் கடவுளிடம் பிராத்தனை செய்யும் பொழுது மகளுக்கு நல்ல ஞானத்தை கொடு என்றுதான் கேட்பாள்.
ஆனாலும் என் கணவர் இல்லாமல் எவ்வளவு கஷ்டப்பட்டு மகளை படிக்கவைக்கிறேன். என் கஷ்டத்தை உணராமல் பொறுப்பின்றி இருக்கிறாளே என்று வேணியின் மனதுக்குள் ஒரு வருத்தம் இருந்துகொண்டேதான் இருந்தது.
காலம் கடந்து போனது. தேவியின் கல்லூரியின் மூன்றாமாண்டு நிறைவு வந்தது. அப்பொழுது கல்லூரியிலிருந்து சுற்றுலா செல்வதாக தாய் வேணியிடம் தேவி கூறினாள். அதற்கான கட்டணம் ரூ.2,000 எனவும் சொன்னாள். அவ்வளவு பணத்திற்கு என்ன செய்வது தேவி ரூ. 2000 மட்டும் இல்லாம இன்னும் செலவுக்கும் பணம் தேவைப்படும் அல்லவா என்றபடி தனது நிலையை நினைத்து வருந்தினாள் தாய் வேணி. ஆனால் தேவியோ முடியவே முடியாது நான் சுற்றுலா போய்தான் தீருவேன் என்று அடம்பிடித்தாள். வேறு வழியின்றி பக்கத்து வீட்டில் ரூ.3000 கடன் வாங்கி அனுப்பி வைக்கிறாள். தாயின் கஷ்டத்தை உணராமல் தேவி சந்தோமாக சுற்றுலா செல்ல முடிவு செய்து கல்லூரிக்கு சென்று தனது பெயரை பதிவு செய்கிறாள். அப்பொழுது கல்லூரி பேராசிரியர் மாணவிகளைப் பார்த்து...
.
‘மாணவிகளே சுற்றுலாவில் அதிகமாக நாம் காணப்போவது மாதா கோவில்கள்தான். எனவே நாம் செல்வதற்கு முன் மாதாவைப்பற்றிய ஒரு சில வியங்களை உங்களுக்கு சொல்கிறேன்’ என்றபடி பேராசிரியர் ஆரம்பித்தார்...
யோசேப்பும் அன்னை மரியாவும் மண ஒப்பந்தம் ஆனவர்கள். திருமணத்திற்கு முன்பு அன்னை மரியாள் கருவுற்றிருப்பதை தெரிந்து யோசேப்பு மரியாளை ஒதுக்கிவிட நினைத்தார். அப்பொழுது தூதரானவர் தோன்றி
“ யோசேப்பே தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்” (மத்தேயு 1:20) என்று சொன்னார். ஆனால் யோசேப்பு மனைவி மரியாளை முழு மனதோடு ஏற்றுக்கொண்டார். அதுமட்டுமல்ல மாணவிகளே வானதூதர் மரியாளுக்கு தோன்றி “அருள்மிகப் பெற்றவரே வாழ்க ! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார். இதோ கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்” : அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். என்று வானதூதர் கூறியவுடன் “ஆகட்டும்” என்ற ஒரே வார்த்தையில் தமது சம்மதத்தை தெரிவித்தார் அன்னை மரியாள். மாணவிகளே இங்குதான் நீங்கள் சிந்திக்க வேண்டும் ஒரு பெண் பேசும்பொழுதும், செயல்படும்பொழுதும் எவ்வளவு நிதானமாக பதில் பேச வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்தவர்தான் அன்னை மரியாள். திருமணமாகாத ஒரு பெண் கருவுற்றால் அந்த சமுதாயம் அவரை எவ்வளவு ஏளனம் செய்திருக்கும். அப்படியயாரு கஷ்டத்திலும் இறைமகன் இயேசுவை பெற்றெடுத்தார் என்றால், அவர் கடவுளின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்தார் என்பது தான் உண்மை. மாணவிகளே அன்னை மரியாவைப் போல் இதுவரை எந்த ஒரு பெண்ணும் பிறந்ததில்லை, இனி இவ்வுலகில் பிறக்கப்போவதும் இல்லை. எனவேதான் பெண்கள் பணிவுடனும், தன்னம்பிக்கையுடன் வாழ அன்னை மரியாளைப் பின்பற்றுகின்றனர். அவர் வழியாக இறைவனிடம் பிராத்தனை செய்கின்றனர் என்று பேராசிரியர் கூறியவுடன் தேவியின் உள்ளத்தில் ஒரு தெளிவு கிடைத்தது. என் அம்மா, என்னை, அப்பா இல்லாமல் எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறாள். அதை உணராமல் கடன் வாங்கி சுற்றுலா செல்வதற்கு ஆசைப்பட்டுள்ளேனே என்று தன் தவற்றை உணர்ந்தாள். தாய் மரியாளின் பொறுமையும், நிதானமும் எனக்கு இல்லாமல் போய்விட்டதே ! கடவுளுக்கு அவர் கீழ்படிந்ததால் தான் இன்று உலகமே அவரை பின்பற்றி வாழ ஆசைப்படுகிறது. இனி என் தாய்க்கும், பெரியோருக்கும் கீழ்படிந்து பெருமை சேர்ப்பேன். சுற்றுலா சென்று கிடைக்கும் மகிழ்ச்சியைவிட என் தாய்க்கு கீழ்ப்படிந்து அதில் கிடைக்கும் மகிழ்ச்சியே நிலையானது என நினைத்து தாயிடம் செல்கிறாள்.
அம்மா ! என்று ஆசையோடும் பணிவோடும் அழைக்கிறாள். நான் சுற்றுலா செல்லவில்லை. வாங்கிய கடனை திருப்பி கொடுத்து விடுங்கள். நாம் பணம் சேர்த்து வைத்து இருவரும் சேர்ந்து சென்று வரலாம் என்று தன் தாயின் மடியில் தலைசாய்த்து அன்னை மரியாவின் தியாக வாழ்வை தனது தாய் வேணிக்கும் எடுத்துச் சொல்கிறாள். அம்மா அன்னை மரியாவைப் பற்றி சொல்ல வார்த்தையில்லை ! ஆனால் அவளைப் போல் கீழ்படிந்து, பணிவுடன் வாழ்ந்தால் வாழ்வில் வெற்றி நிச்சயம் ! அவளைப் பற்றி இன்னும் சொல்ல வேண்டுமானால் அவள்.......
தாழ்ச்சியின் மணிமகுடம்
தியாகத்தின் உயிர் வடிவம்
கருணையின் பிறப்பிடம்
தூய்மையின் வாழ்விடம்
ஞானத்தின் ஆழ்கடல்
வெற்றியின் சிகரம்
வாழ்க்கைக்கு உதாரணமானவர் !
அனைவருக்கும் தாயானவள் !
நம்மை தாங்கி நடத்தும் இறைவனின் தாயானவள் !
என்று தேவி வருணிக்கும் பொழுதே ! அன்னை மரியாளிடம் வேணி நன்றி கூறினாள் !.
தன் பிள்ளைக்கு கொடுத்த ஞானத்திற்காக !
வளர்வோம் ! வாழ்வோம் ! அன்னையின் வழி தொடர்வோம்.
No comments:
Post a Comment