பணிவு என்னும் இனிய பாதை
15. பயன் தருவோம்
Dear Friends, உங்கள் அறையை சற்று சுற்றிப் பாருங்கள். உங்கள் அறையில் உள்ள சில பொருட்கள் உங்களுக்கு வார்த்தையால் அல்ல வாழ்க்கையால் பணிவை கற்றுத் தந்துக் கொண்டிருக்கின்றன என்பதைக் கவனித்தீர்களா? ஆமாங்க, உங்கள் அறையை நீங்கள் சற்று உற்றுப் பாருங்கள். நீங்கள் அதை உணர்ந்துக் கொள்ளலாம்.
உதாரணமாக, நாம் சாதாரணமாக நினைக்கும் தொடப்பத்தை எடுத்துக் கொள்ளலாம். உங்கள் அறை சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக தேவைப்பட்ட போதெல்லாம் எழுந்து வந்து அறையை சுத்தம் செய்து விட்டு அவ்வாறு சுத்தம் செய்யும் போதெல்லாம் தன்னையே கொஞ்சம் தியாகம் செய்து தேய்ந்து கொண்டு, ஏன் கொஞ்சம் அசுத்தத்தையும் சுமந்து கொண்டு எதுவுமே புரியாதது போல மூலையில் போய் அமர்ந்து கொள்கிறது. அதற்கு பெறுவதில் அல்ல தருவதில் தான் மகிழ்ச்சி.
பேனாவை எடுத்துக்கொள்வோம். நீங்கள் சிந்திப்பதை எழுத்தாக தந்துவிட்டு அதுபோல எழுதப்படும்போது நம்மையே கரைத்துக் கொண்டு எழுதி முடித்த பின் எதுவுமே நடவாதது போல மேஜையில் போய் அமர்ந்து கொள்கிறது. அதற்கு பயன் பெறுவதைவிட பயன் தருவதான் வாழ்க்கை.
இன்னுமொரு உதாரணமாக டார்ச் லைட்டை எடுத்துக் கொள்வோம். மின்சாரம் இல்லை என்றால் உடனே எழுந்து நமக்கு அச்சத்தைப் போக்கி நாம் நடப்பதற்கு, பணிகளை செய்வதற்கு வழிகாட்டி பிறகு கரண்ட் வந்தவுடன் என் பணி முடிந்து விட்டது என சென்று விடுகிறதே அதன் நோக்கம் பயன் பெற வேண்டும் என்பதல்ல, மாறாக பயன் அளிக்க வேண்டும் என்பதே.
நம் தலைவர் இயேசு, மானிட மகன் பணிவிடை பெறுவதற்கு அன்று பணிவிடை புரியவே வந்தேன் என்கிறார். இந்த உலகம் இலாப நோக்கோடு செயல்படுகிறது என்றால் அது மிகையாகாது. இதனை நான் உங்களுக்குச் செய்தால் எனக்கு என்ன இலாபம்? என்றுதான் பல சமயங்களில் நம் மூளை கணக்குப் போடுகிறது. அதனை நாம் வாழ்வில் ஒரு சில நேரங்களில் வேண்டினால் கடைபிடிக்க நேரிடலாம். ஆனால் அதனையே வாழ்க்கையின் கொள்கையாகக் கொண்டால் வாழ்க்கை இனிக்காது. ஏனென்றால் இந்த பிரபஞ்சமே ஒன்றுக்கு ஒன்று துணைபுரியும் வண்ணம்தான் கடவுள் நம்மை படைத்துள்ளார். விலங்குகளின் வேஸ்ட் தாவரத்திற்கு உரம். தாவரங்கள் பல விலங்குகளின் உணவு. நாம் வெளியே விடும் கார்பன் - டை - ஆக்ஸைடு தாவரங்களின் உயிர்காற்று. தாவரங்கள் வெளியே விடும் ஆக்சிஜன் நம் உயிர் காற்று. தருவதும், பெறுவதும் இயற்கை. ஒன்றை மட்டும் கொள்வோம் என்றால் அது செயற்கை.
சரிங்க, நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது. நான் பங்குத்தந்தை, அல்லது நான் ஒரு நிறுவனத்தின் தலைவர். எனக்குக் கீழே பலர் பணிபுரிகின்றனர். அவர்கள் தானே எனக்கு பணிபுரிய வேண்டும், நானா அவர்களுக்கு பணிபுரிய வேண்டும்? பாஸ் என்ற வார்த்தைக்கும் லீடர் என்ற வார்த்தைக்கும் ஒரு சிறிய வித்தியாசம் இருப்பதை பார்த்தீர்களா? பாஸ் என்பவர் ஏசி அறையில் அமர்ந்து கொண்டு கட்டளைகளை பிறப்பிப்பவர். தான் சொன்ன அனைத்தும் செய்யப்பட்டு விட்டனவா என்று அறிந்து அதற்கேற்ப தமக்கு கீழே இருப்பவர்களுடன் நடத்துபவர். ஆனால் லீடர் என்பவர் என்ன செய்ய வேண்டும் என்பதை தமக்குக் கீழே இருப்பவர்களுடன் உரையாடுபவர். அவர்களோடு சேர்ந்து பணிபுரிபவர். பணியாளர்களின் இன்ப, துன்பங்களை அறிந்து அதற்கேற்ப அவர்களை வழிநடத்துபவர். அவ்வப்பொழுது பணியாளருக்குத் தேவையான ஆறுதலையும், அரவணைப்பையும், பாராட்டையும் வழங்குபவர்.
நான் அமெரிக்கா சென்றபோது என்னிடம் லேப்டாப் இல்லை. ஒருநாள் பிடைரிக் என்பவர் என் அறைக்கு வந்தார். என்னிடம் லேப்டாப் இல்லை என்பதை கவனித்து விட்டார். உடனே வீட்டிற்குச் சென்று ஒரு பயன்படுத்திய லேப்டாப்பை கொண்டுவந்து கொடுத்து, பாதர், என்னிடம் இரண்டு லேப்டாப் உள்ளது. எனக்கு பயன்படாத அனைத்தும் தேவைப்படுவோருக்குத் தானே சொந்தம். எனவே என் பரிசாக வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிச் சென்றார். அமெரிக்காவில் தனக்குத் தேவைப்படாத Furniture மற்றும் Electronic Things ஐ வீட்டிற்கு முன்பு வைத்து விடுகிறார்கள். தேவைப்படுவோர் அதனை இலவசமாக எடுத்துச் செல்லலாம்.
அமெரிக்கா மற்றும் சில நாடுகளில் Salvation Army மற்றும் Good Will Store போன்ற சமூகப் பணி செய்யும் நிறுவனங்கள் உள்ளன. அதாவது வீட்டில் உள்ள ஆடைகள், ஆபரணங்கள், Furniture, புராதனப் பொருட்களை இந்த நிறுவனங்களுக்கு இலவசமாக மக்கள் வீட்டை சுத்தம் செய்யும் போது கொடுத்து விடுவார்கள். அதனை குறைந்த விலைக்கு விற்று அந்த வருவாய் மூலம் அவர்கள் சமூகப்பணி செய்கிறார்கள். அமெரிக்காவில் எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் உண்டு. அவர் பெயர் ரொன்ல்ட். அவர் ஒரு கம்பெனியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். கம்பெனிக்கு செல்லும்போது கோட், சூட், போட்டுக்கொண்டு செல்வது வழக்கம். அவர் ஓய்வு பெற்றுவிட்டதால் Salvation Army நிறுவனத்திற்கு எல்லா கோட், சூட்டையும் கொடுத்துவிட்டார். பிறகு 2 மாதம் கழித்து அவர் ஒரு சுபநிகழ்ச்சிக்குப் போக வேண்டியிருந்தது. ஆகவே Salvation Army கடைக்குச் சென்று 50 டாலர் கொடுத்து ஒரு கோட், சூட் வாங்கி வந்தார். இரண்டு நாட்கள் கழித்துதான் அவர் உணர்ந்து கொண்டார் அந்த கோட், சூட் அவர் நன்கொடையாகக் கொடுத்தவைகளில் ஒன்று.
நாம் வாழும் பூமி (குறிப்பாக இந்திய அரசியல்வாதிகள், இந்திய அரசுப் பணியாளர்கள்) எனக்கு என்னப் பயன் என்றுதான் எல்லா செயல்பாடுகளுக்கும் கேட்கிறார்கள். ஆனால் நான் வாழும் ஒவ்வொரு நாளும் என்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு,ஏழைகளுக்கும், தேவைப்படுவோருக்கும் என்னால் இயன்ற பயனைத் தருவேன் என்று வித்தியாசமான வாழ்க்கையை நாம் வாழ்ந்து காட்டலாம் வாருங்கள்.
- (தொடரும்...)
No comments:
Post a Comment