நான் எழுத்தாளன் ஆனேன்...
- லெயோ ஜோசப், திருச்சி
Fr. சார்லஸ் ஒவ்வொரு பாடலுக்கும் பல்லவி எப்படி இருக்க வேண்டும்; அனுபல்லவி எப்படி இருக்க வேண்டும்; சரணம் எப்படி இருக்க வேண்டும் என்று விளக்கமாகச் சொன்னார். அவர் சொன்னத்தில் ஒரு கருத்து எனக்குப் பிடித்திருந்தது.
சீமோனைக் கட்டாயப்படுத்தித்தானே இயேசுவுக்கு உதவி செய்ய வைத்தார்கள்? ‘அவன் வேண்டா வெறுப்பாகச் சிலுவையைத் தொட்டான், இயேசு அவனைத் தொட்டார்’ என்று அவர் சொன்னார். நான் இப்படி எழுதினேன்;
சிலுவையை சீமோன் மெல்லத் தொட்டான்
இறைவா அவனை நீர் தொட்டீர்
உதவிட மனமின்றி முன் வந்தான்
பிரிந்திட இயலா பேறு பெற்றான் !
பாடல்களுக்கு இசையமைத்தவர் சென்னை வில்லியம்ஸ். அவருக்கு ட்ராக் பாட வந்தவர், திருச்சி லோகநாதன் மகன் தியாகராஜன். ஏற்கனவே இரண்டு மகன்கள் திரை இசைப்பாட, மூன்றாவது மகன் ட்ராக் பாட வந்தார். ட்ராக் என்பது, இசையமைத்தவுடன் ஒருவரை வைத்துப் பாட வைப்பது. பின்னர் பின்னணிப் பாடகரை வைத்து பாட வைத்து, அதே ட்ராக்கில் ஏற்றுவது.
‘ஒரு பாட்டுப்பாட வாய்ப்புக் குடுங்க ஃபாதர்’ என்று கேட்டார் தியாகராஜன் ‘நீ ட்ராக் பாடு. நல்லா இருந்தா அதையே வச்சுக்கிறேன்’ என்றார் Fr.ஜார்ஜ், அப்படி இடம்பிடித்த பாடல்தான்,
கருணை வள்ளலே இறைமகனே - நீர்
காட்டிய கருணைக்கு அளவேது
கல்வாரிப் பயணம் முடிகின்றவரையில் - நீர்
காட்டிய பொறுமைக்கு ஈடேது !
கல்வாரி மலைமீது செல்கின்ற ஊர்வலம்
காண்கின்ற முகங்களிலே கண்ணீரின் தோரணம் ! என்றொரு பாடல்.
அதற்கு திருச்சி, வானொலி நிலையத்தில் பணியாற்றும் S.N. இராமசந்திரன் இசையமைத்தார். அதை பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் பாடினார். சென்னையில் ஒரு ஸ்டுடியோவில் ஒலிப்பதிவு நடந்தது. வாணி ஜெயராம் மிக உருக்கத்தோடு அந்தப் பாடலைப் பாடினாராம். பாடல் முடிந்தபின், ‘ரொம்ப நல்லாப் பாடினாங்கன்னு போய்ச் சொல்லு’ என்று உடன் வந்திருந்த வித்யாவிடம் Fr.ஜார்ஜ் கூறியிருக்கிறார். வித்யா போனபோது, வாணி ஜெயராம் அழுதுக் கொண்டு உட்கார்ந்திருந்தாராம். ‘ஏன் அழுகிறீர்கள்?’ என்று வித்யா கேட்டபோது ‘இல்ல, வார்த்தைகள் எல்லாம் ரொம்ப உருக்கமா இருந்தது. அழுகைய அடக்க முடியல’ என்றாராம் அவர்.
ஆடியோ கேசட்டின் பெயர் ‘சுகமாக்கும் சிலுவை’. இதில் விசேம் என்னவென்றால், திருச்சி மறைமாவட்டத்திலுள்ள பெரும்பாலான கோவில்களில் புனித வாரத்தில் பாதம் கழுவும் சடங்கின் போது,
பாதங்களைக் கழுவினார் ‡ இயேசு
பாதங்களைக் கழுவினார் என்ற பாடலைத்தான் பாடற்குழுவினர் பாடுகிறார்கள் என்பதே !
எனக்கு வயது 85 ஆகிறது. கிறிஸ்தவ எழுத்தாளர்கள் பலர் தங்கள் பேனாவை வைத்து விட்டார்கள். நான் வைக்கவில்லை.
இதுவரை 43 தொடர்கதைகள் எழுதியிருக்கிறேன். இதில் 6 கதைகள் நூல் வடிவம் பெற்றிருக்கிறது. 6 விருதுகள் பெற்றிருக்கிறேன். சாந்தோம் விருது, கலைக்காவிரி விருது, நம்வாழ்வு விருது, மதுரை, கத்தோலிக்க கிறிஸ்தவ கலை இலக்கிய மன்றம் விருது, திரு இருதய தூதன் 125 ‡ வது ஆண்டு விருது, ஜோய் ஆலுக்காஸ் விருது ஆகியன ஆகும்.
(எமது வேண்டுகோளிற்கு இணங்க, தன் வாழ்க்கை அனுபவத்தை உருகத்துடன் நம் வாசகர்களுடன் பகிர்ந்து கொண்ட உயர்திரு லெயோ ஜோசப் அவர்களுக்கு அன்னையின் அருட்சுடர் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. வாழ்க்கை ஓட்டத்தின் மேடுபள்ளங்களி லெல்லாம் உறுதியாக நின்று பயணித்திருக்கிறார் லெயோ ஜோசப். இளம் உள்ளங்களுக்கு இவரின் வாழ்க்கை அனுபவம் சிறந்த முன்னோட்ட பாதையாகும். இந்த கட்டுரை அச்சாகும் நேரத்தில் இவரின் இறப்பு செய்தி இடியைப்போல் வந்து சேர்ந்தது. அவருடைய மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் எங்களின் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்)
No comments:
Post a Comment