Pages - Menu

Saturday 23 September 2017

அலைபேசியும் கொஞ்சம் ஆன்மீகமும்

அலைபேசியும் கொஞ்சம் ஆன்மீகமும்

- நல்லை ஆனந்தன்

அப்பா, எனக்கு ஒரு ஸ்மார்ட் போன் வேணும். எட்டாவதுதான் முடிச்சிருக்க அருண். பத்தாவது  முடிச்சதும் கண்டிப்பாக வாங்கித் தருவன். சுரேஷ், கோபி, சுந்தர், மாலதி, ரோசரி, அமலா எல்லாரும் போன் வச்சிருக்காங்கப்பா...... உங்கப்பாம்மா வாத்தியாருத்தான. நீயும் கேட்டு வாங்குடானு கேவலமாகப் பேசுறாங்கப்பா.

இப்போ உனக்கு அது தேவையில்லை அருண். அதில் படிக்கக் கூடாததைப் படிப்பீங்க. பார்க்ககூடாததைப் பார்ப்பீங்க. அதனால படிக்கிற வேலையை மட்டும் பாரு.  அப்ப..... அம்மாவும் நீங்களும் போன் வச்சீருக்கீக........ அது எதுக்கு?

இதற்குபின் அந்த வீட்டில் நடந்ததை உங்கள் உலகத்திற்கு விட்டுவிடுகிறேன். அடுத்த நாள் மாலை பெற்றோர்கள்  வீடு வந்து பார்த்த போது அவர்களது செல்ல மகன் அருண் பிணமாக தூக்குப் போட்டுக் கொண்டு தொங்கிக் கொண்டிருந்தான். 
இதைப் படிக்கும் உங்களிடம் மூன்று கேள்விகள் கேட்கலாமா?

1.  அருணின் பெற்றோர் செய்தது சரியா? தவறா?
2. அருண் இறந்ததற்கு காரணம் என்ன?
3. ஏன் இந்தக்காலப் பிள்ளைகள் செல்‡வராசுகளாகவும், செல்வராணிகளாகவும் பைத்தியம் பிடித்து அலைகிறார்கள்?

கொடைக்கானலில் மலைவிளிம்பில் நின்று செல்பி எடுத்த இளைஞர் கால் வழுக்கி, பாதாளத்தில் விழுந்து நொறுங்கிப் போனார்.காதில் இயர்போன் மாட்டிக் கொண்டு தண்டவாளத்தைக் கடந்த  மல்லிகா எக்ஸ்பிரஸ் ரயிலில் மோதி சுக்கு நூறானார். இதே போல ஆயிரம் உதாரணங்களை நீங்கள் படித்திருப்பீர்கள். கேட்டிருப்பீர்கள். பார்த்திருப்பீர்கள்.

அலைபேசியால் நன்மைகளும் உண்டு. ஜனவரியில் மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டுப் புரட்சி முழுக்க அலைபேசியின் ஒத்துழைப்பிலே சாத்தியமாயிற்று. மாதா பிதா குரு தெய்வம் என்ற நிலைமாறி மாதா பிதா கூகுள் தெய்வம் என்றாகிவிட்டது. குரு கற்று தராததை, குருவிடம் கற்க முடியாததை, கூகுள் இன்று விரல் தடவலில் கற்றுத் தருகிறது. 

கத்தி கொண்டு காயை வெட்டலாம். கையையும் வெட்டலாம்? எது அறிவுடைமை? காயை வெட்டுவதா? கையை வெட்டுவதா? அருண் விசயத்திற்கு வருவோம். அருணின் பெற்றோர் மகனுக்கு ஸ்மார்ட் போன் வாங்கித் தந்திருக்க வேண்டும். அத்தோடு அதை எப்படி பயன்படுத்தலாம் என்பதையும் கற்றுக் கொடுத்திருக்க வேண்டும். தங்களிடம் போன் இருப்பதை மறந்து, அருணுக்கு மறுத்து, ஒரு பதிமூன்று வயது இளைஞன் வாழ்வை பாழடித்து விட்டார்கள்.

கணினி உலகில் சுந்தர் பிச்சைபற்றி நான் கூறத் தேவையில்லை. உலக அரங்கிலே அருண் என்ற தமிழனும், சுந்தர் பிச்சையாக வந்து உயர்ந்திருக்கலாம். கெடுத்து விட்டார்கள் பாவிகள். தண்ணீர் பற்றியும், தண்ணீர் ஈஈஈ பற்றியும் பலர் பலவிதமாக எழுதலாம். ஆனால் வேதியராக இருப்பவர் தமது கட்டுரையில் கொஞ்சம் ஆன்மீகமும் கண்டிப்பாக எழுத வேண்டும் என்று ஆலோசனை வழங்கிய திருச்சி தமிழரசியின் கருத்துக்கு மதிப்பளித்து ஒரு நாலுவரி ஆன்மீகம். 
அலைபேசியில் யாராவது கூப்பிட்டால் அவர் பெயர் போட்டு  காலிங் என்று காட்டும். நாம் அக்செப்ட் பட்டனை அழுத்திப் பேசலாம். அல்லது கேன்சல் பட்டனை அழுத்தி அழைப்பவரை புறக்கணிக்கலாம்.

ஆண்டவரும் நம்மை அனுதினமும் அழைக்கிறார். மரியா முதல் திருத்தூதர்கள் வரை அக்செப்ட் பட்டனை அழுத்தினார்கள். பணக்கார இளைஞனும், பண ஆசை பிடித்த யூதாசும் கேன்சல் பட்டனை அழுத்தி விட்டார்கள்.

அலைபேசி சிறப்பாகச் செயல்பட அது பேட்டரி சார்ஜ் செய்யப்பட வேண்டும். செல்போன் டவர்க்கு அருகில் இருந்தால் கவரேஜ் சிறப்பாகக் கிடைக்கும்.

திருப்பலியில் நற்கருனை வழியாக நமது ஆன்மா சார்ஜ் ஆகிறது. செல்போன் டவர்போல ஆலய டவருக்கு அருகில் சென்றாலே கவரேஜ் சிறப்பாகக் கிடைக்கும். கடவுளோடு தெளிவாகப் பேச முடியும்.

சில நேரங்களில் நாம் தொடர்பு கொள்ளும்போது இந்த வழித்தடத்தில் உள்ள அனைத்து எண்களும் உபயோகத்தில் உள்ளன. தயவுசெய்து காத்திருக்கவும் என்ற குரல் கேட்கும். சில நேரங்களில் கடவுளிடம் நாம் விண்ணப்பிக்கும் போது, காத்திருந்துதான் அவரோடு பேசமுடியும். அவரிடம் வாங்க முடியும். (என்ன ஏதாவது புரிகிறதா?).

மத்தேயு நற்செய்தியில் இயேசு, உங்கள் வலக்கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள். உங்கள் வலக்கை உங்களை பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டி எறியுங்கள் என்கிறார் (காண்.மத் 5: 27-32) கண்ணையும் காலையும் இழந்தாவது விண்ணகம் செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தவே இப்படிச் சொன்னார். அலைபேசி விசயத்திலும் எனது கருத்தும் அதுவே. கண்ணும் கையும் பாவத்தில் விழச் செய்தால் அதை பிடுங்கி எறியுங்கள் அல்லது வெட்டி எறியுங்கள். அலைபேசியை நிறுத்தி வையுங்கள்.

ஆலயத்திற்குள் வந்தவுடன் அலைபேசியை நிறுத்துங்கள். அடுத்தவர்களோடு அல்ல, ஆண்டவரோடு மட்டுமே ஆலயத்தில் தொடர்பில் இருக்கவும். படைத்தவரோடு தொடர்புகொள்ள ஆலயம் வரும்போது படைப்புகளோடு நமக்குத் தொடர்பு தேவையில்லை. 
வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசாதீர்கள். தோளில் செல்போனை வைத்துக் கொண்டு, தலைசாய்த்து காதை அதில் வைத்து கழுத்து சுளுக்கு வந்தவர்போல வாகனம் ஓட்டுபவர் ஒன்று காயம் படுவர் அல்லது மற்றவரை காயப்படுத்துவர். வாகனம் ஓட்டும்போது அழைப்பு வந்தால் ஓரமாக சென்று வாகனத்தை நிறுத்திவிட்டுப் பேச வேண்டும். சிலநேரங்களில் வண்டி ஓட்டும்போது நமக்கு வரும் அழைப்பு எமனிடமிருந்து வந்ததாகக் கூட இருக்கும்.

அன்புப் பெற்றோரே ! வயலும் வாழ்வும் காலத்திலே இருக்காதீர்கள். உங்கள் பிள்ளைகளின் திறமைகளை குறைவாக மதிப்பிட்டு விடாதீர்கள். அன்பு இளையோரே! உங்கள் பெற்றோர் உங்களை உருவாக்க உழைக்கிறார்கள். அவர்களோடு ஒத்துழையுங்கள். பெற்றோரும் பிள்ளைகளும் மனந்திறந்து உரையாட வேண்டிய அவசரமான அவசியமான நேரம் இது. தவறினால் விபரீத விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும்.

  வாழ்க்கை என்பது இறைவன் கொடுத்த கொடை. அதை அழகுபடுத்தாவிட்டாலும் சரி. அசிங்கப்படுத்திவிடாதீர்கள்  என்று கேட்டுக் கொள்வதன்றி வேறொன்றறியேன் பராபரமே!

முதியோரே... இளையோரே இதைச் செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? 

No comments:

Post a Comment

Ads Inside Post