பொதுக்காலம் 23 ஆம் ஞாயிறு
10 - 09 - 2017
எசே 33: 7-9; உரோ 13: 8-10; மத் 18: 15-20
உறவில் வாழ வேண்டியவர் மனிதர். உறவில்தான் மனிதர் நிறைவைக் காண்கின்றார். மன ஒன்றிப்பில் வருவதுதான் உறவு. ஆனால் மன ஒன்றிப்பு பல நேரங்களில் உடைகிறது. சிதைக்கிறது. பொருள்கள், வீண்பெருமைகள் அடிப்படையில்தான் இந்த உறவு உடைகிறது. இறைவன் தந்தை, மகன், தூய ஆவியார் என்ற உறவின் கூட்டில் வாழ்கிறார் என்று இயேசு தன் வாழ்வின் இரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதே உறவின் தாக்கம்தான் மனிதரில் புதைந்திருக்கிறது. மனிதரின் ஒற்றுமையில்தான் இருப்பதாகவும் இயேசு கூறியுள்ளார் (மத் 18:20)
உடைந்தப் பானையை ஒட்ட வைப்பது அரிது. கரந்தப் பாலை மீண்டும் மடியில் ஏற்றுவதும் இயலாதது. ஆனால் அறுந்த உறவு மீண்டும் இணைந்திட முடியும். உறவில் ஏற்படும் முடிச்சுக்களை எப்படி அவிழ்க்க முடியும் என்று இயேசு வழி சொல்கிறார். மூன்று வழிகள்: முதலில் தனியாக சென்று, உறவு பிறழ்ந்தவருடன் உரையாடுங்கள். இதில் உறவு சீரடைந்தால், நீங்கள் உங்கள் சகோதரை மீண்டும் பெற்றுக் கொண்டுவிட்டீர்கள். அவரை மனமாற்றி விட்டீர்கள். சாட்சிகாரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழலாம். ஒரு நீதிபதி, குற்றவாளியைக் கேட்டாராம். உண்மையாகவே அவரை கொலை செய்தாயா? என்றாராம். அதற்கு குற்றவாளி, சற்று இருங்கள் சார். என் சாட்சியைக் கேட்டு சொல்கிறேன் என்றாராம். தனித்து சென்று சமாதானம் செய்யும் முயற்சியில் வெற்றி பெறா விட்டால், இரண்டு அல்லது மூன்று பேருடன் சென்று உறவுக்கு அழைப்புக் கொடுங்கள். நம் நாட்டில் கட்டை பஞ்சாயத்துக்கள் உண்டு. சிலருக்கு போலீஸ் ஸ்டேசன், கோர்ட் இவற்றிற்கு சென்று பணத்தை இரைத்த பிறகுதான் புத்தி வரும். இதற்கும் இணக்கம் இல்லையயனில் திருச்சபையிடம் கூறுங்கள். அதாவது நம்பிக்கையாளர் களின் திருக்கூட்டம். அங்கும் உறவுக்கு வழி ஏற்படவில்லையயனில் விட்டுவிடுங்கள். இனி அவர் தன்னையே தனித்துக் கொண்டார் என்று விளக்கம் அளிக்கிறார் இயேசு. ஆனால் இறுதியில் பெரிய உண்மையை இயேசு நினைவுப்படுத்துகிறார். எங்கு ஒற்றுமை உண்டோ அங்கு என் உறவு உண்டு என்கிறார்.
நமது நாட்டில் 2 கோடியே 81 லட்சம் கேஸ்கள் நீதிமன்றத்தில் தீர்க்கப்படாமல் உள்ளன என்கிறது ஒரு கணக்கெடுப்பு. விவாகரத்துகள் அதிகரித்து வருகின்றன. அமெரிக்காவில் 48 சதவிகித திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன என்கிறது ஒரு கணக்கெடுப்பு. ஆனால் இந்தியாவில் அத்தகைய பாதாளநிலை இல்லை யயன்றாலும், மேல் நாட்டு நாகரீக மோகம் வேகமாக நம் நாட்டில் படையயடுத்து வருகிறது.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் எல்லை தகராறு முற்றி வருகிறது. அண்மையில் நியூலீடர் என்ற பத்திரிக்கையில் மோனம்பரம்பில் என்ற பேராயர், இந்த போர் மூட்டத்தை சுட்டிகாட்டி, முதல் இரண்டு உலக போர்கள். எப்படி முரட்டுத்தனமான தலைவர்களால் ஏற்பட்டன என்று சுட்டிகாட்டியுள்ளார். வளர்ந்துவரும் இந்தியாவில் தலையில் மண்ணை வாரி கொட்டிக் கொள்ளவே தலைவர்களாகிய வீராப்பு பேச்சுக்கள் மிதந்து வருகின்றன என்கிறார்.
ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப்படும். (குறள் 214).
No comments:
Post a Comment