Pages - Menu

Friday 29 September 2017

அமெரிக்கக் கடிதம், - சவரி - கேரி

அமெரிக்கக் கடிதம் 
- சவரி - கேரி

உங்கள் அனைவருக்கும் அன்னை மரியாவின் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வாரம் உங்களுடன் பெண்கள் சுதந்திரத்தையும், பெண்களின் ஆளுமையைப் பற்றியும் பேச விரும்புகிறேன். சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்து முடிந்த பெண்களுக்கான கிரிக்கெட் உலக கோப்பை போட்டியில், நமது இந்திய பெண்கள் அணியினர் அபாரமாக விளையாடி நம்மையும், உலகத்தினர் அனைவரையும் மூக்கு மேல் விரல் வைக்க வைத்தார்கள். இறுதி ஆட்டத்தில் தோற்றாலும், இறுதி வரை போராடி, பார்ப்பவர்களை இருக்கையின் நுனிக்கு கொண்டு வந்து, அனைவர் பாராட்டுகளையும் பெற்றார்கள். அணியின் தலைவர் மித்தாலி ராஜ் ஆந்திராவில் குடியிருந்தாலும், அவர் ஒரு தமிழ் பெண் என்பது குறிப்பிட தக்கது. பெப்சி நிறுவனத்தின் தலைமை பதவி வகிக்கும் இந்திரா கிருஷ்ணமூர்த்தி ஒரு தமிழ் பெண் என்பதும் குறிப்பிட தக்கது. இவர் சென்னையில் பிறந்து, படித்து உலகில் தலை சிறந்த நிறுவனத்தின் தலைமையை பிடித்து, பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும், வழிக்காட்டியாகவும், நம்பிக்கை நட்சத்திரமாகவும் விளங்குகிறார். ‘அடுப்பூதும் பெண்களுக்கு கல்வி எதற்கு?’ என்ற காலம் மாறி, தங்கள் கைகள் கரண்டியை மட்டும் பிடிக்க அல்ல, கணிணியையும், ராக்கெட்டையும் இயக்க தெரியும், கிரிக்கெட் மட்டையையும் பிடிக்க தெரியும் என்று உலகுக்கு நிரூபித்துள்ளார்கள்.

அமெரிக்காவில் பெண்கள் இல்லாத துறைகளே இல்லை. ஆண்களுக்கு நிகராக எல்லா துறைகளிலும் நுழைந்து  வெற்றி வாகை சூடி வருகிறார்கள். வேலை வாய்ப்புகளில் தகுதியானவர் யாராக இருந்தாலும் ஆண்/ பெண் வேறுபாடின்றி வேலை தரவேண்டும் என்று அமெரிக்க அரசு சட்டம் இயற்றியுள்ளது. இந்த சட்டம் அரசு நிறுவனங்களுக்கு மட்டுடல்லாமல், தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும். இதனால் நல்ல வேலை வாய்ப்பை பெற்று ஆண்களுக்கு நிகராக, பெண்கள் எல்லா துறைகளிலும் தலை சிறந்து விளங்குகிறார்கள். சமீப காலத்தில் ராணுவத்தில் தரையில் இறங்கி சண்டை போடும் கடின பணியிலும், அரசாங்கத்துடன் சண்டையிட்டு அனுமதி வாங்கி விட்டார்கள்.
திறமை உள்ள பெண்களின் திறமைகளை, பெண் என்ற காரணத்தால் புறக்கணிக்காமல், திறமைகளை வளர்த்துக் கொள்ள வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். நம்மிடையே பல இந்திராக்களும், மித்தாலிகளும் உள்ளார்கள். அவர்களை சாதனை படைக்க வழி வகுக்க வேண்டியது நம் கடமை. பெண்கள் இன்னும் பல சாதனைகளை படைத்து உயர வாழ்த்துகிறேன்.

பட்டங்கள் ஆள்வதும் 
சட்டங்கள் செய்வதும்
பாரினிற் பெண்கள் நடத்தவந்தோம்.     
                                         -பாரதியார்.

No comments:

Post a Comment

Ads Inside Post