இதுக்கென்ன சொல்றது ?
- ச. இ . அருள்சாமி
இப்படியும் மனிதர் இருப்பாங்களா?
என்ற எண்ணம் அந்நிகழ்ச்சியில் எனக்குப் பளிச்சிட்டது. மற்றவர்களுக்கு உதவி செய்வதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்ற ஒரு பாடம் எனக்குக் கிடைத்தது. குடந்தையிலிருந்து கோவைக்கு நேரடியான பேருந்துகள் ஒரு சிலவே இருந்தன. ஒரு சில பேருந்துகள் வசதியான நேரத்தில் செல்பவை. உதாரணமாக, இரவு 8 மணிக்கு குடந்தையில் புறப்பட்டால் காலை 6 மணிக்கு கோவைக்கு அப்பேருந்து செல்லும். எனவே இரவில் பயணம் செய்து, பகலில் வழக்கமான வேலைகளை செய்யலாம். எனவே அந்த பேருந்துக்கு நிறையபேர் காத்திருப்பர். அப்பேருந்திற்கு முன் பதிவு செய்யலாம். நான் குடந்தையிலிருந்து கோவைக்கு முன் பதிவு செய்தேன். ஜன்னல் ஓரமான ஒரு இருக்கையை கேட்டு பதிவு செய்திருந்தேன். ஒருவர் 30,40 வயதுடையவர் என்னை அணுகி, எனக்கு உடல்நிலை சரியில்லை. அடிக்கடி வாந்திவரும். எனவே உங்கள் இடத்தைக் கொடுங்கள். எனக்கு உதவியாக இருக்கும் என்றார். நானும், இரக்கப்பட்டு நான் கேட்டு வாங்கியிருந்த இடத்தை அவருக்குக் கொடுத்தது விட்டு, அவரின் இடத்தில் அமர்ந்தேன். விடியற்காலையில் 3 மணிக்கு காங்கேயத்திற்கு வண்டிவந்து சேர்ந்தது. தேநீர் அருந்த பயணிகள் கீழே இறங்கினர். நானும் இறங்கி தேனீர் அருந்தி பேருந்திற்குள் வந்தேன். அப்போது நான் இடம் கொடுத்த அந்த பயணி, அவரின் இடத்தில் அமர்ந்திருந்தார். நான் கொடுத்த இடத்தை விட்டு அவரிடத்திற்கு சென்று விட்டார். ஜன்னல் ஓரமான அந்த இடம் குளிராக இருப்பதாகவும், அதனால் தன் சொந்த இடத்திற்கு வந்து விட்டதாகவும் கூறினார். நான் கூறினேன், நீங்கள் கேட்டுக்கொண்டதால்தான் என் இடத்தை உங்களுக்குக் கொடுத்தேன். இப்போது திடீரென்று இப்படி பல்டி அடிக்கிறீர்கள் என்றேன். ‘சார், உங்க நம்பர் என்ன? அதில் போய் உட்காருங்கள். அதிகமாய் பேசாதீர்கள்’ என்றார். பேய் அடித்தது போல் என் இடத்தில் அமர்ந்தேன். நல்லது செய்பவர்களுக்குக் கிடைக்கும் பரிசு இதுதான். ‘இப்படியும் மனிதர்கள் உண்டு’ என்று புரிந்துக் கொண்டேன்.
அரசு பேருந்துகளில் இருக்கைகள் சிறுவர்களுக்குரியதை போல் அமைந்திருக்கின்றன. நாளுக்குநாள் மக்கள் குண்டாகிறார்கள். ஆனால் இருக்ககைகளை குறுகியதாக செய்கிறார்கள். நான் சற்று ‘குண்டு’ வகையை சேர்ந்தவன். 75 கிலோ. எனவே பேருந்துகளில் பயணம் செய்வது எனக்கு சற்று சவாலான காரியம். என்னைப் போன்று ‘குண்டு’ மனிதர்கள் என் வரிசையில் அமர்ந்து விட்டால், அன்று அறவை இயந்திரத்தில் அகப்பட்டு போனது போலதான். எனவே நான் சில தந்திரங்களை விளையாடுவேன். எனக்கு இருக்கைக் கிடைத்ததும், ஒல்லியானவர் யாராவது வருகிறார்களா? என்று பார்த்து அவரை நானே கூப்பிட்டு அருகில் அமர செய்வேன். இதனால் குண்டு உருவமும், மெலிந்த உருவமும் இணைந்து சகிப்புத் தன்மையுடன் செல்லும். அந்த முறை திருச்சியிலிருந்து கோவை வரையில் செல்லும் பேருந்தில் ஏறியிருந்தேன். வழக்கம் போல மெலிந்த உருவம் உடையவரை கண்டுபிடித்து அருகில் அமர வைத்துக்கொண்டேன். வந்தவர் ஜெயங்கொண்டம் பக்கத்தைச் சேர்ந்தவர் என்று நினைக்கிறேன். கிராமத்து மனோநிலையோடு பேசி பழகினார். மனந்திறந்து பேசினார். பயணம் அழகாய் சென்றுக் கொண்டிருந்தது. பேருந்து கோவையை நெருங்கி விட்டது. அப்போது அவர் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். ‘என்ன சார்? உங்களை சமாளிக்கவே முடியல சார்?’ என்றார். எனக்கு ஒன்றுமே புரியல. ‘என்ன சார் சொல்லிறிங்க?’ என்றேன். ‘சார் திருச்சியிலிருந்து இங்கு வரவரயிலும், நீங்க தூங்கி தூங்கி என்மீது விழுந்திங்க. எவ்வளவோ தள்ளி பார்த்தேன், முடியல. உங்களோடு போராடுனதே என் பயணம் ஆச்சு’ என்றார். அப்போது, தான் நான் செய்த திருவிளையாடல் புரிந்தது. ‘மன்னிச்சுங்க சார்’. தவறா நடந்திடுச்சு சார். மனசில எதும் வைச்சிக்காதிங்க சார். வாங்க சார், காப்பி சாப்பிட்டு போகலாம் என்று காப்பி வாங்கிக் கொடுத்து சமாதானப்படுத்தினேன். ‘ஏழையர் உள்ளத்தோர்’ எப்படி சகிப்புத்தன்மைப்புடன் நடந்து கொள்கின்றனர் என்று புரிந்துக் கொண்டேன்.
No comments:
Post a Comment