Pages - Menu

Saturday 23 September 2017

உலகை உயர்த்தும் பெண்மை

உலகை உயர்த்தும் பெண்மை

சகோ. விமலி FIHMஇதயா கல்லுVரி, குடந்தை

பெண்மை வாழ்கென்று
கூத்திடு வோடா !
பெண்மை வெல்கென்று
கூத்திடு வோடா !  
 - மகாகவி பாரதி

உங்களுக்கு எத்தனை குழந்தைகள்? மூன்று, மூன்றும் பொட்டைகள். எனக்கு தூக்கமே வரல. எப்படி இவைகளை கர சேர்க்கிறது? திருமணம், வரதட்சனை. எப்படி சமாளிக்க போகிறேனோ தெரியவில்லை. இது போன்ற சோகக்குரல்கள் நம்மிடையே ஒலித்துக் கொண்டுதான் உள்ளன.  
பெண்கள் ஆண்களோடு சமநிலையில் இருக்கும் இன்றைய காலகட்டத்தில் பெண்களைப் பற்றி தனித்து பேச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  ஆண்-பெண் இருவருமே இவ்வுலகிற்கு இன்றியமையாத வர்கள் ஒருவரிலிருந்து மற்றவர் தனித்து வாழ முடியாது. ஆனால் பெண்கள் நிலைமையானது மிக்க கவலைக்கிடமாக மாறி வருகிறது. ஒரு புறம் ய பண்கள் இன்றைய அறிவியல் சூழலுக்கு ஏற்ப ஆண்களைவிட பெண்கள் முன்னேற்றம் அதிகமாக உள்ளது. ஆனால் மறுபுறம் சமுதாயத்தில் பெண் குழந்தைகள் தன் இருப்புக்காகவும், உயிர்வாழ்வதற்காகவும் மிகவும் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

குடும்ப வன்முறை

குடும்பம் பெண் குழந்தைகளின் யாதார்த்தமான  உலகத்தைக் களவாடிவிடுகிறது. பெண் குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்களின் வளர்ப்பு முறையே அவளை ஓர் ஆணுக்கான பொருளாக தயாரிப்பதாகவே தொடர்கிறது. ஐந்து வயதிலேயே பலவிதமான பண்பாட்டு கட்டுப்பாடுகளை பெண் குழந்தைகள் மேல் சுமத்தப்படுகிறது.  ஏய் நீ விழுந்து கையை காலை உடைச்சுக்கிட்டா பிறகு எவண்டி உன்னைக் கட்ட வருவான்? என்ற இந்தக் குரலை கேட்டு வளராதவர்கள் எத்தனை  பேர்? கால் உடைந்து விடக் கூடாது  என்ற அக்கறை தேவையாகக் கூட இருக்கலாம். ஆனால் உன்னை கட்டிக்கொள்ள ஓர் ஆண் வாரவிட்டால் உன் கதி  என்ன என்ற கேள்வி பெண் குழந்தைகளின் மனதை நிரந்தர ஊனமாக்குகிறது. பால்ய விவாகம் என்ற சடங்கைதான் ஒழித்திருக்கிறோம். அந்தத் தத்துவத்தை இன்னும் வாழவைத்தக் கொண்டே இருக்கின்றோம்.

சமூக வன்முறை

சமூக அறமானது பெண் குழந்தைக்கு ஒன்றாகவும் ஆண் குழந்தைக்கு ஒன்றாகவும் அமைகின்றது. பெண்களைப் பொறுத்தவரை சமுதாயத்தின் அளவுகோல் வேறு. சட்டத்தின் அளவுகோல் வேறு. சமூக வன்முறையும் குடும்ப வன்முறையும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயலாற்றுவதற்கு பாலியல் முரன்பாடுகளே முதன்மையானதாக உள்ளது. சமுதாயத்தில் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் தத்துவ அறிஞர் சிமோன்திபவார் என்பவர் கூறுவது, ஆணாதிக்கம் நிறைந்த உலகில் பெண்களின் ஆளுமையும் மனநிலையும் உடைக்கப்பட்டு, சிதறடிக்கப்பட்டு வருகிறது. ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களே மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்வதை நாளிதழ்களில் அன்றாட செய்தியாக பார்க்கின்றோம். மாணவியை ஆபாச வீடியோ எடுக்கும் அளவிற்கு நம் நாடு சீரழிந்துவிட்டது.

சட்டத்தின் வன்முறை

பெண்களுக்கென்றே பிரத்யேகச் சட்டங்கள் இருக்கின்றனவே என்று கேட்கலாம். ஆனால் இந்தச் சட்டங்கள் இயற்றப்பட்ட பிறகும் ஏன் பெண் குழந்தைகள் மீதான வன்முறைகள் குறையவில்லை? இறைச்சிக்காகப் பசுவைக் கொல்வதைச் தேச விரோத செயலாகக் கருதுகிறார்கள், பெண் குழந்தைகள் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகிச் சிதைக்கப்படுகிறபோது எங்கே போகிறார்கள்? ஏனென்றால் சட்டங்களைவிட அவற்றில் மலிந்திருக்கிற ஓட்டைகள் குற்றவாளிகளுக்குச் சாதகமாகவும், பெண்களுக்குப் பாதகமாகவும் இருப்பதையும் மறுப்பதற்கில்லை.

வலியே வலிமையே தேவை
Feel the pain, Don't suffer என்று சொல்லும்போது,வலி என்பது வேறு, வல்லமை என்பது வேறு. ஒரு மரம் நன்றாக வளர்த்து  செழிப்பாக இருக்கும். ஆனால், வேகமாகக் காற்றடித்தாலும் அதற்கேற்ப வளைந்து கொடுத்துக்கொள்ளும். அதைப்போன்றுதான் பெண்களும் சூழ்நிலைக்கேற்பச் வலியையே வல்லமையாக மாற்றிச் செயல்பட வேண்டிய கட்டத்தில் இருக்கின்றார்கள்.    அதேநேரம் தங்களின் சுயத்தை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும். இந்தச் சமூகத்தில் பெண்குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் சம்பவங்களால், அவர்கள் தாழ்ந்து போவதில்லை. அவர்களின் சுயமரியாதையை மேலும் விரிவடையச் செய்வதற்காக ஆழமாகப் பயணிக்கிறார்கள்.

பெண்கள் யானையைப் போன்றவர்கள். ஒரு யானையை அதற்கான எல்லை எது என்பதை அந்த யானைதான் முடிவு செய்யும். அதுபோல் பெண்களும் தங்களுக்கான எல்லைகளை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஒரு கட்டத்துக்கு மேல் ஒரு வி­யத்தை தாங்கிக்கொள்ள முடியாது என்றால், பெண்கள் துணிந்து அதிலிருந்து வெளிவர வேண்டும். தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவும், தான் கண்டதை, கேட்டதை, நினைத்ததை அச்சமின்றிப் பகிர்ந்து கொள்ளவும், மனத்திண்மையுடன் விவேகமுள்ளவர்களாகச் செயல்பட பெண் குழந்தைகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். இந்தத் தேசத்தின் சுவாசமாக உள்ள பெண் குழந்தைகளின் சுதந்திரத்தை இவ்வுலகின் சுவாசக்காற்றாக மாற்றுவோம். வீட்டிலும் பள்ளியிலும் குழந்தைகளை முக்கியமாகப் பெண் குழந்தைகளை அச்சமற்றவர் களாக, ஆற்றல் மிக்கவர்களாக, உறுதியுள்ளவர்களாக வளர ஊக்கப்படுத்துதல் என்பதுதான் இன்றைய நிதர்சனமான உண்மை.

முடிவாக

  சமுதாயத்தில் நிலவும் பெண் குழந்தைகளின் வன்கொடுமைகளுக்கு காரணமாக அமைவது எது என்று ஆராயும்போது பாலினச் சமத்துவமின்மையே காரணமாக அமைகிறது. எனவே சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பாலினம் தொடர்பான நீதியையும், சமத்துவப் பார்வையின் இன்றியமையாமையும் தெளிவாக விளக்க வேண்டும். பெண்களை வெளிப்படுத்தும் எந்த ஒரு நிகழ்வுகளும் பெண்மையைப் போற்றுவதாக அமைய வேண்டும். பால் அடையாளத்தின் பொருட்டு பெண் குழந்தைகள் இழந்துவிட்ட எண்ணற்றவைகளை அவளுக்கானதாக்க, கை மாற்றும் காலமாக இனி வரும் காலம் உண்டென ஓங்கி உரைத்திடுவோம். பெண்களுக்கு முன்னுரிமைக் கொடுத்த இறைமகன் இயேசுவைப்போன்று, ஆண், பெண் இருவருமே சுகமாக, மகிழ்வாக வாழ்வதுதான் நீதியானது என்பதைத் தற்போது சில நல்லூள்ளங்கள் உணர்ந்து செயல்படத் தொடங்கியுள்ளனர் என்பது வரவேற்கத்தக்கது. அந்த எண்ணிக்கை அதிகரிப்பது நம் ஒவ்வொருவர் கையிலும் இருக்கிறது.

பெண்மையே மனிதரை காக்கும் தெய்வம்
பெண்மையே மனிதரில் வாழும் தெய்வம்
பெண்மையே மனிதரை பேணும் தெய்வம்
பெண்மையே போற்றுவோம் !
        உண்மையை ஏற்ப்போம் !

No comments:

Post a Comment

Ads Inside Post