வெற்றி உங்கள் கையில்
- அருட்திரு. எஸ். ஜான் கென்னடி,
“உன்னால் முடியும் தம்பி, தம்பி. உனக்குள் இருக்கும் உன்னை நம்பி” என்ற திரைப்படப்பாடல் வரிகளை கேட்டு ரசித்து இருப்பீர்கள். இவ்வரிகள் நம் சிந்தனையைத் தூண்டி சரித்திரம் படைக்கவும் உதவுகிறது.‘I think I can’ என்ற ஆங்கில சொற்றொடரின் தமிழ் அர்த்தம் “நான் நினைக்கிறேன், என்னால் முடியும்” என்று நான் நினைத்தால் அது நன்றாக முடியும். என்னால் முடியாது என்ற மந்திரச் சொல்லால்தான். திரு.உதயமூர்த்தி அவர்கள் தனது புத்தகத்தில் ‘உன்னால் முடியும்’ என்ற சக்தி வாய்ந்த வார்த்தைகளை மையமாக வைத்து எழுதி இளைஞர்கள் வெற்றிகளை குவிக்க வழிவகுத்தார்.
அன்பு வாசகர்களே ! வரலாற்றில் நடந்த நிகழ்வினை உங்கள் முன் படைக்க விழைகிறேன். உலக அளவில் நடைபெறும் ஒரு மைல் தூர ஓட்டப்பந்தயத்தில் 4 நிமிடங்களுக்குக் குறைவாக யாராலும் ஓடமுடியாது என்ற எண்ணம் அனைத்து வீரர்களின் மத்தியில் இருந்தது. 1945ம் ஆண்டு 4 நிமிடங்களுக்குக் குறைவாக ஒரு மைல் தூரத்தை கடக்க முடியாது என்ற குறியீட்டை (Record) அனைத்து வீரர்களும் நம்பினர். சுவீடன் நாட்டைச் சார்ந்த Guder Hagg என்பவர் 1945 இல் 4 நிமிடங்கள் 1.4 விநாடியில் ஒரு மைல் தூரத்தை கடந்து வெற்றி பெற்ற குறியீடே இறுதியாக இருந்தது. அதை யாரும் முறியடிக்க முடியவில்லை. ஏனென்றால் எல்லோர் மனதிலும் 4 நிமிடங்களுக்கு குறைவாக யாராலும் கடக்க முடியாது என்ற எண்ண ஓட்டம் இருந்தது. இந்த சமயத்தில் தான் 1950 இல் ரோஜர் பெனிஸ்டர் ஒரு மைல் தூரத்தை 4 நிமிடங்கள் ஒரு நொடியில் ஓடி முடிக்கிறார். அதன்பிறகு ரோஜர் 1954 ஆம் ஆண்டு மே 6இல் அந்தத் தூரத்தை 3 நிமிடங்கள் 59.4 விநாடிகளில் ஓடிச்சென்று புதிய சாதனையைப் படைக்கிறார். அவருக்கு அடுத்த நிலையில் வந்த சார்லஸ் லேண்டி என்பவர் 4 நிமிடங்கள் 2 விநாடியில் கடந்து இரண்டாம் இடத்தைப் பெற்றார்.
இதனை சற்று ஆழமாக சிந்தனை செய்வோம். கடந்த பல ஆண்டுகளாக ஒரு மைல் தூரத்தை 4 நிமிடங்களுக்குள் கடக்க முடியாது என்ற Mind set வீரர்களிடையே இருந்தது. ஆனால் ரோஜர் அந்த இறுக்கமான எண்ணத்தை, அபிப்பிராயத்தை உடைத்தெறிந்தார். ‘என்னால் முடியும்’ என்ற மந்திரச்சொல்லால் தகர்ந்தெறிந்தார். புதிய குறியீட்டை (Record) படைத்தார். இன்னும் பல முக்கிய சாதனைகளையும் நீங்க படிக்க போறீங்க. 2ஆம் இடத்தை பிடித்த சார்லஸ் லேண்டி 56 நாட்களுக்குப் பிறகு 3 நிமிடங்கள் 57 விநாடிகளில் அந்தத் தூரத்தைக் கடந்தார். இவருக்கு யார் Special Training கொடுத்தாங்க? இல்லை; யாரும் கொடுக்கவேயில்லை. 4 நிமிடங்களுக்குள் ஓட முடியும் என்ற எண்ணத் தடை ரோஜரால் உடைத்தெறியப்பட்டதால் சார்லஸீக்கு தன்னால் முடியும் என்ற எண்ணம் எழுந்தது; முடியாது என்ற எண்ணத் தடை வீழ்ந்தது; சாதனையும் படைக்கப்பட்டது; வெற்றியும் பெற முடிந்தது. மற்றொரு செய்தியையும் சொல்கிறேன், படியுங்கள். 1957இல் உலகம் முழுவதும் 16 வீரர்கள் 1 மைல் தூரத்தை 4 நிமிடங்களுக்குள் ஓடி சாதனைப்புரிந்தார்கள். இதுவரை 18 முறை ரோஜர் பெனிஸ்டரின் சாதனை முறியடிக்கப்பட்டிருக்கிறது. 1999இல் மொரோக்கோ நாட்டைச் சார்ந்த Hichan el Guerrou என்பவர் 3 நிமிடங்கள் 43:13 விநாடிகளில் ஒரு மைல் தூரத்தை கடந்து புதிய சாதனையையும் படைத்திருக்கிறார். என்னால் முடியும் என்று ரோஜர் பெனிஸ்டர் சாதனைப்புரிந்தவுடன் மற்ற வீரர்களும் அவர்களால் முடியும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொண்டு சாதனை படைத்தார்கள் ! வெற்றியும் கண்டார்கள்.
அன்பர்களே! எது தடை? நம் எண்ணமே நமக்கு தடை. என்னால் முடியாது என்ற எண்ணம் வெற்றிபெற தடையாக இருக்கிறது. மாணவ, மாணவிகள் பலர் “எனக்கு கணிதம், ஆங்கிலம், அறிவியல் பாடங்கள் வராது” என்ற எண்ணத்தில் படிப்பர். அது அவர்களுக்கு வரவே வராது.ஆனால் அந்தப் பாடங்கள் எனக்குப் பிடிக்கும் என்ற எண்ணத்தில் படித்தால் நன்றாக படிக்க முடியும். அது போல இளைஞர்கள், இளம் பெண்கள் கூட என்னால் முடியாது என்ற எண்ணத் தடையை வளர்த்துக்கொண்டு வாழ்வதனால் வெற்றிக்கனி எட்டாக்கனியாக மாறிவிட்டது. ஆகவே அன்பு மாணவச்செல்வங்களே ! இனிமைமிகு இளையோரே ! பெருமைமிகு பெரியோரே ! என்னால் முடியாது என்ற எண்ணத்தடையை எடுத்தெறிந்து, என்னால் முடியும் என்ற எண்ணத்தை விதைத்து வெற்றிகளை அறுவடை செய்யுங்கள்.
உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயேஅறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன. - Goethe
No comments:
Post a Comment