Pages - Menu

Saturday 9 September 2017

நாசரேத்தூர் நல்லாளின் பிறப்பும், நலிந்தோரின் மகிழ்வும்

நாசரேத்தூர் நல்லாளின் பிறப்பும், நலிந்தோரின் மகிழ்வும்.

 அருள்பணி. அ. பிரான்சிஸ், பாபநாசம்

அனைத்து உறவுகளின் தலையாய உறவு தாய் உறவு. தாலிக் கொடி உறவில் உதயமாகும் குடும்ப உறவு தொப்புள் கொடி உறவில் முழுமை காண்கின்றது. எனவே தான் தாய் - சேய் உறவினைப் புனிதமான உறவு என்கிறோம். அம்மா உறவு பற்றிப் பல பாடல்கள் இருந்தாலும் அனைவரின் நெஞ்சைத் தொடும் சமீபத்திய பாடல் இதோ....

நூறு சாமிகள் இருந்தாலும் - அம்மா
உன்னைப் போல் ஆகிடுமா?
கோடி கோடியாய்க் கொடுத்தாலும் -நீ
தந்த அன்பிற் கீடாகுமா?

இரத்தத்தை நான் தந்தாலுமே - உன்
தியாகத்துக் கீடாகுமா? - நான்
  பட்டக் கடன் தீர்ப்பேன் என்றால்
  ஒரு ஜென்மம் போதாதம்மா
நடமாடும் தெய்வம் நீ தானே!...

மழைவெயில் பார்க்காமல் பார்ப்பாள் வேலை
குழந்தைதான் அவளின் கழுத்துக்கு மாலை
மெழுகாக உருகி தருவாளே ஒளியை
குழந்தையின் சிரிப்பில் மறப்பாளே வலியை
நடமாடும் தெய்வம் நீதானே!...

மலர்ந்தும், மலராத மரியா பற்றிய குறிப்பு :

முதல் பெற்றோர் கடவுளின் கட்டளையை மீறிப் பாவம் புரிகின்றனர். இப்பாவம் மனிதருக்குத் தண்டனையினை வருவிக்கின்றது (தொநூ 3:14-19). இதன் விளைவுகளை கீழ்க்கண்டவாறு விவிலியத்தின் முதல் நூல் விவரிக்கின்றது.

அ. பாம்பு பெற்ற சாபம் : 

  1. தரையில் வயிற்றினால் ஊர்ந்து செல்வது. 2. புழுதியைத் தின்பது. 3. பகைமையைச் சந்திப்பது. 4. உனக்கும், பெண்ணுக்கும், உன் வித்துக்கும், அவள் வித்துக்கும் பகைமையை உண்டாக்குவேன். இது பாம்புக்கும் மனிதருக்கும் இடையேயுள்ள எதிரி உணர்வைக் காட்டுகிறது.

ஆ. பெண்ணுக்கு அளித்த தண்டனைகள் :

1. வேதனையோடு பிள்ளை பெறுதல். 2. கணவன் மேல் வேட்கைக் கொள்ளல். 3. கணவன் மனைவியை ஆள்வான்.

இ. உனக்கும், பெண்ணுக்கும்...

உனக்கும், பெண்ணுக்கும் உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப் படுத்துவாய் (தொநூ 3:15). இங்கு நாம் காணும் அவள் என்ற சொல் மரியாவையே சுட்டிக் காட்டுகிறது என்பர் விவிலிய அறிஞர். விவிலியம் தனது வரலாற்றினை மலர்ந்தும் மலராத தொடக்க நிலையிலேயே மரியாவை உருவகமாகக் குறிப்பிடுகிறது. 

மீட்பின் நம்பிக்கை மரியா : 

நடைமுறையில் மனிதனிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள மனிதனும் போராடுகின்றனர். இது நன்மைக்கும் - தீமைக்கும் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே உள்ள போராட்டம். மனுக்குலத்தின் வித்தில் உருவான நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தீமையின் மீது வெற்றி கொண்டு மீட்பினை வழங்கினார்.

இயேசு கிறிஸ்து புதிய ஆதாம் (1கொரி 15:45-49). பழைய ஆதாமினால் பாவமும், புதிய ஆதாமினால் வாழ்வும் வந்தது (உரோ 5:12-15). அன்னை மரியா மீட்பர் இயேசுவிடம் கொண்டிருந்த நெருக்கமான உறவின் காரணமாகவும், மீட்புச் செயலில் அவர் அளித்த முழு ஒத்துழைப்பின் காரணமாகவும் அந்த மரியா பெற்றெடுத்த குழந்தை இயேசு அனைத்துத் தீமைகளையும் அழித்தொழித்து வெற்றி காண்பதனாலும் (தொநூ 3:15)இல் அன்னை மரியா மீட்பின் நம்பிக்கையாக முன்னுரைக்கப்படுகின்றனர்.

திருச்சபையின் வரலாற்றில் நாம் காணும்  மரியா வணக்கம் :

இயேசுவும், திருத்தூதர்களும் அவர்தம் சீடர்களும், இவர்களைப் பின்பற்றி ஆதிக்கிறிஸ்தவர்களும் மரியாவின் பால் அதிகப் பாசமும், பற்றும் கொண்டிருந்தனர். இளந்திருச்சபையின் வளர்ச்சிக்கு மரியாவின் பங்கேற்பு அளப்பரியது. இதன் பின்னணியிலேயே மரியா வணக்கம் தொடங்கி இன்றும் தொடர் கதையாகிக் கொண்டிருக்கின்றது.

திருமுறைப் புறநூல்கள் கூறும் மரியாவின் பிறப்பு, வளர்ப்பு பற்றிய குறிப்புகள்:

தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட மனிதர்கள் கடவுள் அருளியதை உரைத்ததே இறைவாக்கு (2 பேதுரு 1:21). மறைநூல் அனைத்தும் கடவுளின் தூண்டுதல் பெற்றுள்ளது. அது கற்பிப்பதற்கும், சீராக்குவதற்கும் நேர்மையாக வாழப் பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ளது ( 2 திமொ 3:16). இவற்றைத் தவிர்த்து விவிலிய நூல்கள் போன்றே மரியாவுக்குப் புகழ் சேர்க்கும் விதமாகப் பல நூல்கள் எழுதப்பட்டன. அவை விவிலிய அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்படாதவை. இவற்றினையே நாம் திருமுறைப் புறநூல்கள் என்கிறோம்.

அவற்றுள் மரியா வணக்கம், மரியியல் சிந்தனைகள் போன்றவற்றை அதிகம் பாதிப்பவை யாக்கோபுவின் துவக்க நற்செய்தி  (Infancy gospel of James)  போலி மத்தேயுவின் நற்செய்தி  (Gospel of proto Mathew), பிலிப்புவின்   நற்செய்தி  (Gospel of Philip), தோமாவின் துவக்க நற்செய்தி  (Infancy gospel of Thomas),  பிலாத்துவின் பணிகள் (Acts of Pilate), மற்றும் மரியாவின் இறப்பு (Death of Maria)  போன்றவையாகும்.

யாக்கோபுவின் நற்செய்திப்படி மரியாவின் பிறப்பு, வளர்ப்பு:

அன்னா, யோவாக்கிம் ஆகிய இருவரும் முதிர் வயதில் குழந்தைப் பேறடைகின்றனர். அந்தக் குழந்தையே மரியா. பழைய ஏற்பாட்டின் சாமுவேல் போன்று தங்களின் பெண் குழந்தையினை யயருசலேம் ஆலயத்தில் அர்ப்பணித்து ஆலயத்  திருப்பணியில் ஈடுபடுத்துகின்றனர். மரியா என்னும் இவரே தனது 12 ஆம் வயதில் யோசேப்புவைத் தனது கணவராகத்  தேர்ந்து கொள்கின்றார்.

மரியாவின் இறைமைப் பிறப்பு :

அருள் மிகப் பெற்றவரே வாழ்க ! ஆண்டவர் உம்மோடு இருக்கின்றார் (லூக் 1:26) என்ற வாழ்த்தொலி மூலம் மரியா இறைமைப் பிறப்பெய்துகின்றார். உடல் ரீதியினாலான  மரியாவின் பிறப்பு பற்றிய சான்று நமக்குத் தெளிவாகக் கிடைக்காவிட்டாலும் இறைமைக்குள்ளான மரியாவின் பிறப்பிற்கான சான்றாக இது அமைகின்றது.

மரியாவின் காட்சிகளுள் மாறுபட்டு நிற்கும் வேளை நகர் காட்சி:

உலகின் பல்வேறு நாடுகளில் இக்கட்டான காலக் கட்டங்களில் மாதா காட்சிதந்து இறை செய்தியினைத் தந்து கொண்டிருக்கின்றார்கள். தென் அமெரிக்காவின் மெக்சிகோவில் குவாதலூப்பே, பிரான்ஸ் நாட்டில் லாசலேத் மற்றும் லூர்து, போர்த்துக்கல் நாட்டின் பாத்திமா நகர் போன்ற இடங்களில் மாதா காட்சி தந்திருக்கின்றார். இந்தியாவின் தென் தமிழகமாம் வேளை நகரிலும் மாதா காட்சி தந்துள்ளார். மற்ற காட்சிகளுள் இல்லாத ஒரு வேற்றுமை இங்குண்டு. அது என்ன? குழந்தை இயேசுவைக் கரத்தில் தாங்கியிருப்பதுவே. இது அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள் என்று சுட்டிக்காட்டுவது போல் இல்லையா?

மரியா ஓர் அன்னை தெய்வமா ?

கிரேக்க நாட்டு  எடமற்றார், உரோமையில் சிபில், எபேசு நகரத்து டயானா, எகிப்தியரின் ஐசிஸ் போன்றவை பெண் தெய்வங்களாகும். உரோமையரின் அரசு சமயமாக, கிறிஸ்தவம் மலர்ந்ததும் மேற்கூறப்பட்ட பெண் தெய்வ ஆலயங்கள் அனைத்தும் அன்னை மரியாவின் ஆலயங்களாக மாற்றம் பெற்றன. நெஸ்டேரியஸ் என்பவரது போதனையைக் கண்டித்தே இயேசுவின் இறைத்தன்மையும், ஒரே ஆளுமையையும் நிலைநாட்டும் வகையில் எபேசு திருச்சங்கம், மரியா இறைவனின் அன்னை என அறிக்கையிட்டது. எனவே மரியா இறைமகன் இயேசுவின் தாய் என்பதுதான் நமது திருமறைக் கோட்பாடு. மரியா ஒரு பெண் தெய்வம் அல்ல.

தகுதியுடையத் தத்துவக் கோட்பாடு :

18, 19, 20 ஆகிய நூற்றாண்டுகளில் மரியா வணக்கமும், மரியியல் சிந்தனைகளும் மாபெரும் வளர்ச்சி கண்டன.
 இதற்குக் காரணம் கீழ்க்காணும் மூன்று முக்கிய கொள்கைகளாகும். அவை முறையே...

1. தகுதியுடைமை :

இறைவனின் தாய் என்ற முறையில் இறைத் திருவுளத்தினுக்கு முற்றுமாகத் தன்னைக் கையளித்து வாழ்வின் இறுதிவரை வாழ்ந்து மரியா தன்னைத் தகுதியாக்கிக் கொண்டது.

2. தனித்தன்மை :

  மரியா கறைப்பட்ட மனித குலத்தின் தனியயாரு பெருமை, ஊனமுற்ற மக்களினத்தின் ஒப்பற்ற ஒரு முழுமை. பெண்டிருள் பேறுபெற்றவராக வாழ்ந்து தனித்தன்மை மிகுந்து காணப்படுகின்றார் மரியா.

3. இணை ஒப்புமை :

இயேசுவின் பணிகள், பண்புகள், சிறப்புகள், பெருமைகள் ஆகிய அனைத்தும் அன்னை மரியாவுக்கு உரியவையே. எனவே இயேசு மீட்பர் என்றால் மரியா துணை மீட்பர். இயேசு இறைவனுக்கும், மனிதருக்கும் இடைநிலையாளர். இயேசுவுக்கு விண்யேற்றம். மரியாவுக்கு விண்ணேற்பு. இயேசு அரசர் என்றால் மரியா அரசி. ஆக மரியாவின்  தகுதியுடைமை, தனித்தன்மை மற்றும் இணை ஒப்புமை ஆகியவையே தகுதியுடைய தத்துவக் கோட்பாடு எனப்படுகின்றது.

மரியாவின் பிறப்புவிழா, நலிந்தோரின் மகிழ்வு விழா :

சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டு, ஒதுக்கப்பட்டு புறம்பாகி நிற்கும் விளிம்பு நிலை மக்களின் அடையாளமாகத் திகழ்கின்றாள் மரியா. வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா திருவிழா என்றாலே சாதி, சமய, இன வேறுபாடின்றி தங்களின் உடல் உபாதைகளைப் பெரிது படுத்தாமல் பாதயாத்திரை செல்லக் கூடிய ஏழை மக்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு பெருகிக்கொண்டே வருகின்றது. தங்களின் இன்னல்கள், இடுக்கண்கள், துயரங்கள் போன்றவற்றினை நீக்கும்  சக்தி கொண்ட தாயாக மக்கள் மரியாவைப் பார்க்கின்றனர். எனவேதான் இயேசுவிடம் செல்வதை அதிக உரிமையுடனும், உறவு நெருக்கத்துடனும் மாதாவை அண்டிச் சென்று வாழ்வில் மகிழ்கின்றனர். நாசரேத்தூர் நல்லாளின் பிறப்பு விழா நலிந்தோரின் மகிழ்வு விழா என்பது உண்மையே. நலிந்தோர் மகிழட்டும். நானிலம் தழைக்கட்டும்

2 comments:

  1. உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே பகையை உண்டாக்குவோம்; அவள் உன் தலையை நசுக்குவாள்; நீயோ அவளுடைய குதிங்காலைத் தீண்ட முயலுவாய் என்றார்.

    ReplyDelete
  2. இங்கே பெண்ணின் வித்து என்பது இறைமகன் இயேசு கிறிஸ்து. இறைமகன் நினைத்தமாத்திரம் சாத்தானை அளிக்க முடியும். மரியன்னை தான் சாத்தானின் தலையை நசுக்க வேண்டும். சாத்தான் மரியன்னையின் குதிங்காலை தீண்ட முயலுமேயோழிய தீண்ட முடியாது.

    ReplyDelete

Ads Inside Post