பொதுக்காலம் 26ஆம் ஞாயிறு
01 - 10 - 2017 ச.இ.அ.
எசே 18: 25-28; பிலி 2: 1 -11; மத் 21: 28 32;
‘நடித்தவன் நாட்டை ஆள்கிறான். படித்தவன் மாடு மேய்க்கிறான்’ என்று நகைச் சுவையாகக் கூறுவதிலும் ஓர் உண்மை இருக்கிறது. உண்மையில்லாததை உண்மையயன்று, அதன் வெளிபகட்டினால் நம்புகிற இயல்பு மனிதரிடத்தில் புதைந்திருக்கிறது. அந்த இயல்பிற்கு உரம்போட்டு பலர் பயன்பெறுகின்றனர். தமிழ்நாட்டில் பெயர் பெற்ற நடிகைக்கு ஒரு படத்திற்கு 4 கோடி ரூபாய் சம்பளம். முன்னணியில் நிற்கும் நடிகருக்கு 100 கோடி ரூபாய் சம்பளம். கனவு உலகத்தை நனவு உலகமென்று குறிப்பாக நம் தமிழக மக்கள் நினைக்கிறார்கள்.
இயேசுவுக்குப் பிடிக்காத மிகவும் கசப்பான ஒன்று, வெளிவேடம் போடுவது. முக்கியமாக, சமய சமுதாயத் தலைவர்கள் தாங்கள் போதிப்பதை வாழாமல் வெளி ஆடம்பரத்தின் வழியாக மக்களின் மதிப்பினைப் பெற்று வாழ்ந்தார்கள். அவர்கள் சமுதாயத்தில் முக்கியமானவர்கள். அதையயல்லாம் பொருட்படுத்தாது துணிந்து, இயேசு அவர்களின் செயல்பாடுகளைக் கண்டித்தார். எனவே பரிசேயர் மறைநூல் அறிஞர், மூப்பர் ஆகியவர்களுக்கும் இயேசுவுக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டது. மணமுறிவு (மத் 19: 3 -9), அரசுக்கு வரிகட்டுதல், பாவ மன்னிப்பு (மத் 9: 3-6), நோன்பு இருத்தல் (மத் 9:14 -17), பாவிகளை வரவேற்றல், ஓய்வுநாளை அனுசரித்தல் (மத் 12:1 -14), உயிர்த்தெழுதல் (மத் 22: 23-33) ஆகியவைகளில் அவர்கள் கருத்து வேறுபட்டு, அவர்மீது குற்றம் காணமுற்பட்டார்கள். அத்தோடு நில்லாமல் இயேசுவை அழிக்கவும் படிப்படியாக திட்டமிட்டனர். பரிசேயரோ வெளியேறி இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராக சூழ்ச்சி செய்தனர் (மத் 12:14; 22:15), (யோவா 5:18; 7: 1 - 19,25,30; 8: 37 - 40; 11: 53).
இன்றைய நற்செய்திப் பகுதியில், ஒருவர் மூத்தமகனிடம், ‘திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்’ என்கிறார். ‘நான் போக விரும்பவில்லை’ என்று முதலில் கூறிவிட்டு பிறகு மனமாறி வேலைக்கு செல்கிறான். அடுத்த மகனிடம் சென்று ‘திராட்சை தோட்டத்திற்கு செல்’ என்கிறார். அவன், ‘வாயினிக்க போகிறேன் ஐயா’ என்கிறான். கிரேக்க மூலத்தில் ஐயா என்பது கூரியே, ஆண்டவரே என்று கூறப்பட்டுள்ளது. மலைப் பொழிவில் இயேசு ஓரிடத்தில் கூறும், ‘ஆண்டவரே, ஆண்டவரே என சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளப்படி செயல்படுபவரே செல்வர்’ (மத் 7:21) என்ற வாக்கியம் இங்கு பொறுத்தமாக நிற்கிறது எனலாம். மனந்திரும்பி தந்தையிடம் திரும்பிய ஊதாரி மகனையும் இங்கு நினைவுபடுத்திக் கொள்ளலாம்.
விலைமாதரும், வரி தண்டுவோரும் பாவிகளாக, கடவுளின் எதிரிகளாகக் கருதப்பட்டவர்கள் மனமாறினார்கள். இறையாட்சியில் இடம் பெற்றார்கள். இயேசுவுக்காக தயார் செய்ய வந்த யோவானின் போதனையைக் கேட்டு விலைமகளிரும் வரிதண்டுவோரும் மனந்திரும்பினர். ஆனால் நீங்கள் மனந்திரும்பவுமில்லை, நம்பவுமில்லை என்கிறார் இயேசு.
வாயினிக்க பேசிய மகன் தந்தையை மகிழ்ச்சிப்படுத்தியதாக நினைத்து கபடு எண்ணத்துடன் நடந்துக் கொண்டான். ஆனால் தந்தையின் இதயத்தில் அவன் இடம் பெறவில்லை. வெளி ஆடம்பரங்களால் மக்களிடம் பெருமையை வாங்கலாம், நாம் கடவுளின் மக்கள் என்று அவர்களை நம்ப வைக்கலாம் என்று எண்ணுகிறார்கள்.
அண்மையில் ஒரு நிகழ்ச்சி வாட்ஸ் அப்பில் வந்தது. அர்னால்டு ஷ்வார்ஸ்நேகர் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர். அவர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் கவர்னராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் பதவியிலிருந்த போது அவர் நினைவாக ஒரு வெங்கலச் சிலையை ஒரு பெரிய ஓட்டல் நிறுவியது. அத்துடன் அவரிடம் உங்களுக்காக ஓர் அறை நிரந்தரமாக ஒதுக்கப்பட்டுள்ளது. எப்போது வேண்டு மானாலும் நீங்கள் இங்கு வந்து தங்கலாம் என்றது. அவரின் பதவிக்காலம் முடிந்து அண்மையில் அங்குசென்று அறை கேட்டபோது, ‘உங்களுக்காக ஒன்றும் தனியாக அறையில்லை. அறைகள் நிரம்பி விட்டன. உங்களுக்கு இடமில்லை’ என்று கூறிவிட்டார்கள். எனவே அர்னால்டு அந்த ஓட்டலின் முன் அமைக்கப்பட்டிருந்த தன் சிலைக்குக் கீழ் படுக்கை விரித்து படுத்துக் கொண்டார்.
பதவி என்பது சோளக் காட்டு பொம்மை போல சில பறவைகள் பார்த்துப் பயப்படும் ‡ மனிதருக்கு அவை வேடிக்கை பொம்மைகள்.
புகழ்ச்சி பைத்தியகாரர்களின் கவர்ச்சி - எல்டன் ஜான்.
வீண்பெருமைகளுக்கு பைத்தியமாக வேண்டாம்
வீண்பெருமைகள் பொய்மையின் கருவிகள்.
No comments:
Post a Comment