Pages - Menu

Wednesday, 11 November 2015

இரட்சணிய யாத்திரிகம் மகாவித்துவான் ஹென்றி ஆல்பிரெட் கிருட்டிணன்

1868 ஏப்ரல் 18ஆம் நாளில் மைலாப்புரில் உள்ள தேவாலயத்தில் ஹென்றி ஆல்பிரெட் என்னும் பெயரைச் சூட்டி ஞானதீட்சை (ஞானஸ்நானம்) பெற்ற மகாவித்துவான் யஹச். ஏ.கிருட்டிணன் வரலாற்றினை ஈண்டுக் காண்போம்.
    நீர்வள நிலங்கள் ஓங்கிய திருநெல்வேலி மாவட்டத்தில், பாளையங்கோட்டைக்கு அருகில் இரட்டியாப்பட்டி என்னும் கிராமத்திலே சங்கரநாராயணன்-தெய்வநாயகியம்மாள் இணையாளருக்கு மகனாக 1827ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் நாள் திங்கள் கிழமையன்று பிறந்தார். தாய், தந்தையரின்  மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. பசும்பொன் போன்ற சிவந்த மேனியுடைய இக்குழந்தைக்கு கிருட்டிணன் என்னும் பெயரைச் சூட்டினர். இவருக்கு மூன்று வருடங்களுக்கு பின் பிறந்த பெண்பிள்ளை ஒரு வருடத்தில் இறந்துவிட்டது. கிருட்டிணன் பிறந்த ஏழு வருடத்திற்குப் பிறகு இன்னொரு சற்புத்திரன் தோன்றினான். இக்குழந்தைக்கு முத்தையா என்று பெயரிட்டனர்.
    இவ்விரு குழந்தைகளையும் தந்தையார் பண்டிதர் சங்கரநாராயணன் வைணவ முறைப்படி வளர்த்து வந்தார். இவ்விருவருக்கும் தாமே ஆசிரியராக இருந்து தமிழ்மொழியைக் கற்பித்து வந்தார். வைணவ நூல்களாகிய கலம்பகம், திருவாய்மொழி, சடகோபரந்தாதி முதலிய நூல்களை இவர்கள் சிறுவர்களாயிருக்கும்போதே பாராயணம் (மனப்பாடம்) பண்ணி வந்தார்கள். கிருட்டிணன் பதினான்கு வயதில் கம்பராமயணத்திலுள்ள கவிகளை மனப்பாடம் செய்து அவைகளின் பொருளையும் கற்றிருந்தார். இலக்கண அறிவு தமக்குச் சொற்பம் என்பதை அறிந்த சங்கரநாராயணன் தம்மினும் மிக்க இலக்கண அறிவு வாய்ந்த மாணிக்கவாசகத் தேவர் என்னும் புலவரை அமர்த்தி அவரைக் கொண்டு தம் புத்திரர்களுக்கு இலக்கணம் கற்றுக்கொடுத்தார். கிருட்டிணனுக்கு ஆங்கில மொழி கற்பிக்க வேண்டும் என்ற ஆசை தந்தை சங்கரநாராயணனிடம் இருந்தது. தம்மை விட்டுப் பிரிந்து கிருட்டிணனை தூரத்திலுள்ள ஆங்கிலக் கல்விச் சாலைக்கு அனுப்பப் பிரியமில்லை. ஆயினும் ஆங்கிலத்துக்குப் பதிலாக அவருக்குப் பிலவண ஜோசியர் என்னும் பிராமணரைக் கொண்டு சமஸ்கிருத மொழியைக் கற்றுக் கொடுத்தனர்.
    1842ஆம் ஆண்டு 16ஆம் வயதில் கிருட்டிணனுக்கு திருமணம் நடந்தது. தமது தந்தை மரணமடைந்த பின் தமக்குக் கிடைத்த செல்வத்தைக் கொண்டு தமது கல்வியறிவை அபிவிருத்திச் செய்ய முயன்றார். அக்காலத்தில் தமிழ்நாட்டில் பிரபல புலவராக இருந்த மகாவித்துவான் திருப்பாற்கடனாதக் கவிராயரிடம் கிருட்டிணனும், அவரது தம்பி முத்தையாவும் யாப்பு இலக்கண நூல்களைக் கற்றனர். இஃதன்றி இவ்விரு சகோதரரும் தம்முடன் மாணாக்கராகிய சண்முகநாத கவிராயருமாக மூவரும் ஒருங்கு கூடி தத்தம் முயற்சியால் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேறினர். தன் தந்தையாரைப் போன்று கிருட்டிணப் பிள்ளை வைணவ மதத்தில் அதிக நம்பிக்கையை வைத்திருந்தார். அக்காலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் கிறித்தவ மதப் பிரச்சாரம் அதிக மும்முரமாய் நடந்தேறியது. தென் தமிழகத்தில் கிறிஸ்துவ மதம் தீவிரமாய் அபிவிருத்தி அடைவதைக் கண்ட கிருட்டிணப்பிள்ளை கிறித்தவ மதத்திற்கு விரோதமாய்த் தீங்கிழைத்து வந்த சில கூட்டத்தாரோடு சேர்ந்து கொண்டு தம் உறவினர்களில் சிலரோடும், சில மறவர்களோடும் கூடி நல்லூர் என்னும் கிராமத்திலிருந்த கிறிஸ்தவர்களை அடித்து இம்சைப்படுத்தினர். இவரோடிருந்த மறவர்கள் கிறித்துவர்களுடைய வீட்டைக் கொள்ளையடித்தனர். இச்செய்தி மாவட்ட ஆட்சித்தலைவரின் காதிற்கு எட்டியவுடன் கலகக்காரரைப் பிடித்து வரும்படி வாரண்டு பிறப்பித்தார். கிருட்டிணப்பிள்ளையின் மாமன் முதலிய உறவினர்களும், பல மறவர்களும் கைது செய்யப்பட்டுத் தண்டனையடைந்தனர். கிருட்டிணப்பிள்ளை மட்டும் கைது செய்யப்படவில்லை. இவ்விசயத்தில் இன்று வரைக்கும் நினைவில் ஒரு காரியம் இருக்கிறது. மறவர்கள் கிறித்தவர்களிடையே கொள்ளையடித்து அபகரித்த உப்பு மூட்டைகளை காவல்துறையினர் கண்டுபிடித்து கொள்வார்கள் என்று பயந்து கிருட்டிணப்பிள்ளை இருந்த வீட்டின் முற்றத்தில் இருந்த கிணற்றில் கொட்டிவிட்டனர். இக்காலத்தில் நல்ல தண்ணீராக இருந்தக் இக்கிணறு இப்போது உப்பு தண்ணீராக இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவர், கிருட்டிணப்பிள்ளையின் நெருங்கிய உறவினரான நீதிபதி தேவதாஸ் அவர்கள் தாம் நல்லூருக்கும் சென்று இந்த கிணற்றின் தண்ணீரைச் சோதித்துப் பார்த்த போது அஃது இன்னும் உப்பு கைக்கிறதாகக் கூறியிருக்கின்றார்.
    கிருட்டிணப்பிள்ளையும் அவர் சகோதரர் முத்தையாபிள்ளையும் கிறித்துவ மதத்தின் மீது கண்டனம் நடத்தி, வைணவ வழிபாட்டில் ஊக்கங்காட்டி, கல்வியறிவு ஒழுக்கங்களில் முன்னேற்றமடைந்து வரும் நாளில் சாயர்புரம் மி­ன் கலாசாலைக்கு ஒரு தமிழ்பண்டிதர் தேவையாயிருந்தார். தமிழ்ப் பண்டிதர் பணிக்கு மூவர் கலந்து கொண்டனர். அதில் கிருட்டிணப்பிள்ளையின் திறமையை அறிந்த நிர்வாகம் 1852, மே மாதம் 27ஆம் நாள் தமிழ்பண்டிதர் உத்தியோகத்தில் அவரை அமர்த்தியது.
    இளமைப் பருவத்தில் கிருட்டிணப்பிள்ளை கிறித்தவர்களுக்கு விரோதமாய் சில காரியங்களில்; ஈடுபட்டதால் கிறிஸ்து பெருமானை அறிந்துக்கொள்ள ஆர்வம் காட்டவில்லை. கிறித்தவர்களுடன் பழகினவரும் இல்லை. அநேக ஆண்டுகளுக்கு முன்னே தனது கிராமத்துக்கு மறையுரை ஆற்ற வந்த கிறித்தவ பிரசங்கிகள் கொடுத்த அருள் அவதாரம் என்னும் கைப்பிரதி ஒன்றினால் கிறித்துவ மதத்தை அறிய முடிந்தது. அதை வாசித்து கிறிஸ்து பெருமானின் அருளவதாரத்தின் பரிபூரணத்தை அறிந்தார் இவர். கிருட்டிணப்பிள்ளை சாயர்புரத்துக்கு வந்தது முதல், கிறிஸ்தவ மத செல்வாக்கு அவர்மேல் படிப்படியாய் வளர்ந்தது.
(தொடரும்)
- எம்.சி.குமார், எம்.ஏ., எம்.பில்., பி.எட்., , விரகாலூர்

No comments:

Post a Comment

Ads Inside Post