Pages - Menu

Wednesday, 11 November 2015

இயற்கை மூலிகை மருத்துவம்

மருத்துவ தாலாட்டு

சடையப்பன் மகளான உனக்கு -  கண்ணே
சடை போட முடியில்லையா?
முடக்கத்தான் கீரையுடன் தேங்காய் பால் விட்டரைத்து
தலைமுழுக முடி முளைத்து விடும் -  கண்ணே

என்றும் இளமையோடு வாழ -  கண்ணே
முதுமை அடையாமல் இருக்க
முறையா யோகாப் பயிற்சி அளிக்கட்டுமா?
முதுமையிலும் நீ இளமையோடு இருப்பாய் -  கண்ணே

கையால் கண்ணைக் கசக்குகிறாயா -  கண்ணே
கண்வலி வந்துவிட்டதா?
ஒற்றை நந்தியாவட்டை பூவை நான்கு எடுத்து கசக்கி
ஒரு சொட்டு விட்டால் போதும் -  கண்ணே

உள்நாக்கு வளர்ந்திருக்கிறதா -  கண்ணே
உணவு உண்ண முடியலையா?
உப்பும், புளியும் வைத்து தேய்க்கட்டுமா?
ஒரே நாளில் குணம் அடைவாய் -  கண்ணே

காதில் சீழ் வடிந்து கொண்டே இருக்கிறதா -  கண்ணே
கலங்காதே கல்லாட்டம் பாட்டி நான் இருக்கேன்
திருநீற்றுப் பச்சிலை கசாயம் பத்து தினங்கள்
இருவேளை சாப்பிட்டால் போதும் -  கண்ணே

நெருப்பைத் தொட்டு விட்டாயா -  கண்ணே
எரிச்சல் தாங்க முடியவில்லையா
தேனைத் தடவட்டுமா? வலி குறையும்
தீக்கொப்பளங்கள் வராது -  கண்ணே

தலையை அரிக்கிறதா -  கண்ணே
எடுக்கமுடியாத அளவுக்கு ஈறும், பேனும் இருக்கிறதா?
சீத்தா இலையைப் பொடியாக்கி (அல்லது) சப்போட்டா விதையை
தலையில் தேய்த்து குளித்தால் போதும் -  கண்ணே

சொட்டு சொட்டாக சிறுநீர் கழிக்கிறாயா? -  கண்ணே
கொட்டைப் பாக்களவு துளசியுடன் தேங்காய் பால் வைத்து
மூன்று நாள் கொடுத்தால் போதும்
முகம் மலர்ந்து சிரித்திடுவாய் -  கண்ணே

ஆணா? பெண்ணா? என்று ஆய்வு செய்யாதே -  கண்ணே
ஆணாக இருந்தால் என்ன? பெண்ணாக இருந்தால் என்ன?
அனைவரும் சமம் தானே -  கண்ணே
வீட்டிற்கு விளக்கேற்ற பெண் வேண்டும்

பாலூட்ட பெண் வேண்டும், சீராட்ட பெண் வேண்டும்
சோறு சமைக்க பெண் வேண்டும் ஆனால்
பெண் குழந்தை மட்டும் வேண்டாமா?
என்ன வினோதம் பார் -  கண்ணே

பெண் குழந்தை பிறந்தால் -  கண்ணே
அதற்கு உணவு கள்ளிப்பாலும் நெல்லுமா?
கொடுத்துக் கொல்லனுமா? வேண்டாம்
பாவச் செயலைச் செய்யாதே - கண்ணே

சிரிக்கத் தெரிந்தவன் மனிதன் தானே -  கண்ணே
வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்
சிரித்து பேசினால் ஜீரண உறுப்புகள் சுறுசுறுப்பாக இயங்கும்
ஆயுட்காலம் அதிகமாகும் - கண்ணே
 - ம.இராசரெத்தினம்.ஆடுதுறை.
இயற்கை மருத்துவ சங்கம்.

No comments:

Post a Comment

Ads Inside Post