Pages - Menu

Wednesday, 11 November 2015

29-11-2015 திருவருகைக் காலம் முதல் ஞாயிறு

I. எரே 33 : 14 -  16 ; II. 1 தெச 3 : 12 -  14 : 2
நற்செய்தி : லூக் 21 : 25 -  28 -  34 -  36
அருட்தந்தை. சி. குழந்தை, காணியிருப்பு.
மண்ணிடை இயேசு மறுபடியும் வருவார் என்பது சத்தியமாம்” -  இயேசு காவியம்.
               புதிய தம்பதிகள் அவர்கள். கணவன் வேலையைத் தேடி வெளிநாடு சென்றுவிட்டார். மனைவி வீட்டிலேயே தன் பாட்டியுடன் இருந்தாள். கடிதம் ஒன்று கணவரிடமிருந்து வந்தது. வேலை பளுவில்லை. எதிர்ப்பார்த்த சம்பளம் கிடைக்கிறது. விரைவில் காரில் வந்து இறங்குவேன். மகிழ்ச்சியாய் பாட்டியுடன் இரு. இவைதான் கடிதத்தின் வைர வரிகள்.
               அன்று முதல் அவள் சாலைப்புறம் பார்த்துக் கொண்டிருந்தாள். கார் சத்தம் கேட்ட பொழுதெல்லாம் அவள் விருட்டென்று வெளியே ஓடிப்போய் பார்ப்பாள். இதைக் கவனித்தப் பாட்டி, “ஏம்மா கார்ல போறவங்களை எல்லாம் ஓடி, ஓடிப்போய் பார்க்கிற?” என்று கேட்டாள். “உங்கள் பேரன் கார்ல வர்றேன்னு கடிதம் எழுதியிருந்தார்ல. அதுதான் பாட்டி ஒவ்வொரு காரையும் ஓடிப்போய் உற்றுப்பார்க்கிறேன்என்றாள். பாட்டி தொடர்ந்தாள், “இப்படியே பார்த்தின்னா பார்ப்பவர் உன்னை பைத்தியம் என உன் கணவருக்கு எழுதிவிடுவர். எனவே, அவன் வரும்போது வரட்டும், நீ உன் வேலையை செய்து கொண்டிரு. அப்போது என் பேரன் உன்னை காண நேரிட்டால் அவனுடைய மகிழ்ச்சி இரட்டிப்பாகும்என்று அறிவுரை கூறினார்கள்.
               அன்று முதல் அவள் கனவில் கூட கார்சத்தம் கேட்கவில்லை. வீட்டு வேலையில் மூழ்கினாள். பேரனும் ஒருநாள் காரில் வந்து இறங்கினான். கார் நிறைய மகிழ்ச்சியும் சேர்ந்து வந்தது.
               கார்கள் சென்றன. சென்ற கார்கள் அனைத்தும் பேரனின் வருகையை அறிவிக்கவில்லை. அவனுடைய வருகைக்கு சென்ற அனைத்துக் கார்களும் அடிப்படையோ, ஆதாரமோ அல்ல.
               இன்றைய நற்செய்தியில் இயேசு மீண்டும் வரும்போது வான்வெளிக்கோள்கள் அதிரும் என்றார். ஒருவேளை நிலா தன் கண்களை மூடும். கதிரவன் தீப்பொறிகளைக் கக்குவான். கடலில் அலைகள் மலைகளாக மாறும். இவை நிகழும் பொழுதெல்லாம் இயேசு வருவார் என்பது ஏற்புடையதல்ல. இயற்கையான சீற்றங்களைக் கண்டு உடைமைகளை இழக்கவோ, உடலை வருத்தவோ, உயிரை மாய்த்துக் கொள்ளவோ தேவையில்லை. அப்படி செய்தால் பாட்டி சொன்ன பட்டியலில் நாமும் இடம்பெறுவோம். ஆண்டவர் வரும்போது நாம் குற்றமின்றி, குறையின்றித் தூயவராக வாழ்ந்துக் கொண்டிருக்க வேண்டும். இதுவே இயேசுவை வரவேற்க நல்ல வழி என்று பவுலடியார் முதல் வாசகத்தில் குறிப்பிடுகிறார். ஆண்டவர் இயேசு விழிப்பாயிருந்து மன்றாடுங்கள் என நற்செய்தியில் முடிக்கிறார். விழித்திருத்தல் என்பது ஏக்கத்தோடு எதிர்பார்த்திருப்பது, ஈடுபாட்டோடு கடமைகளைச் செய்து கொண்டிருப்பதைக் குறிக்கும்.
               முதல் வாசகத்தில், எரேமியா தாவீதிலிருந்து நீதியின் தளிர் ஒன்று முளைக்கச் செய்வேன் (எரே 33 : 15) என்று கூறியது மீட்பரைப் பற்றித்தான் என்று நம்ப முடிகிறது. இந்த மீட்பரை எதிர்பார்ப்பது என்பது, ஈடுபாட்டோடு மண்ணிடை இயேசு மறுபடி வருவார் என்ற நம்பிக்கையோடு பக்தியிலும், பணியிலும் மூழ்கியிருக்க வேண்டும் என்பதை தெளிவுப்படுத்துகிறது.
               இத்திருவருகைக் காலத்தில் கடமைகளை பொறுப்புடன் செய்வோம். இதுவே சிறந்த காத்திருப்பு. ஓர் அம்மையார் அலுவலகத்தில், அதிகாரி இருக்கிறாரோ இல்லையோ, யாருடைய பாராட்டுதல்களையும், பழிசொற்களையும் பாராது பணிசெய்தார்கள். கடைசியில் அவரையே அதிகாரியாக உயர்த்தினார்கள்.    

No comments:

Post a Comment

Ads Inside Post