I. தி.வெ.7 : 2 - 4, 9 - 14 ; II. 1 யோவா 3 : 1 - 3
நற்செய்தி :மத் 5 : 1 - 12
புனிதர்கள் என்பவர்கள் சாதனையாளர்கள். கடினமானதை செய்ய முடியும் என்று காட்டியவர்கள். நம் வாழ்க்கை போராட்டத்தில், எப்படி வெற்றி பெறுவது என்று திகைத்து நிற்கும் போது, இதோ நான் செய்திருக்கிறேன் பார், வாழ்ந்திருக்கிறேன் பார். நேர்மையாக வாழ்வது ஆகக்கூடியதுதான் என்று நமக்கு முன்பாக நிற்பவர்கள் புனிதர்கள். சுமார் பத்தாயிரத்துக்கும் மேலாக, புனிதர்கள் என திருச்சபை முத்திரையிட்டு இருக்கிறது. புனிதர்கள் என அறிக்கையிடும்முன், திருச்சபை மிகக் கடுமையான விதிமுறைகளுக்கு உட்படுத்தி அவர்களின் வாழ்வை அலசிபார்த்து, பிறகுதான் அவர்களை புனிதர் என்று அறிக்கையிடுகிறது. முதலில் அவர்கள் அருளாளர் என்றும், பிறகுதான் புனிதர் என்றும் அறிவிக்கப்படுவார்கள்.
அவர்களிடம் செபித்து நடந்த புதுமையை மிகவும் கவனமாக சோதித்துபார்ப்பர். குணம் பெற்றவர்களிடமும் சோதனை செய்வர். இவ்வாறு மிக கவனமாகத்தான் புனிதர்களை திருச்சபை அறிவிக்கிறது. தேவசகாயபிள்ளை அருளாளர் என்று அறிவிக்கபட்டுவிட்டார். அடுத்து அவர் புனிதராக அறிவிக்கப்பட வேண்டும். குடந்தை மறைமாவட்டம் பூண்டியில் பணியாற்றிய அருள்பணியாளர் லூர்துசேவியர் அவர்களுக்கு புனிதர் பட்டம் தருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. புனிதர்களுடன் நமக்கு தோழமை உண்டு. நமக்காக இறைவன்முன் அவர்கள் பரிந்து பேசுகின்றனர் என்பது திருச்சபையின் நம்பிக்கைக் கொள்கை. புனிதர்கள் நம் முன்னோடிகள். எனவே நம்பிக்கையுடன் நாம் கிறிஸ்துவின் மதிப்பீடுகளை வாழலாம். நம்மிடையேயும் வாழும் புனிதர்களை பார்க்கிறோம். அப்துல்கலாம் வாழ்ந்தபோது புனிதராக மக்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்.
ஒரு சமையல்காரர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் கிடையாது. அவர் அடிக்கடி கூறுவார், என் மனைவி ஒரு தெய்வம் சாமி என்பார். அறிவிக்கப்படாத எத்தனையோ புனிதர்கள் நம்மிடையே புதைந்துள்ளனர். புனிதராக வாழ்வோர் பேறுபெற்றவர்கள். மகிழ்ச்சியில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அவர்கள். இன்றைய நற்செய்தி பகுதி, மலைப்பொழிவின் பேறுபெற்றவர் பகுதி எளியவர் (ஏழையரின் உள்ளத்தோர் (பணிவு), துயருறுவோVர், நீதியின் மேல் வேட்கைக் கொண்டோர்), பொறுமையுள்ளவர் (கனிவுடையோர் தி.பா. 37 : 11), மன்னிப்பு (இரக்கமுடையோர்), அர்ப்பணம் (தூய உள்ளத்தோர்), தியாகம் (அமைதி ஏற்படுத்துவர்) ஆகிய பண்புகள் இறைவனின் இனிய பண்புகள். புனிதர் விழா, ஏன், நான் அவர்களைப் போல ஆகக்கூடாது, வாழக் கூடாது? என்ற பெரிய கேள்விகளை நம்மில் எழுப்புகிறது. புனித இஞ்ஞாசியார், காலில் அடிப்பட்டு மருத்துவம் பெற்றபோது, புனிதர்களின் வாழ்க்கை வரலாற்றினைப் படித்து, அவர்களை போல வாழ வேண்டுமென்று, பெரிய புனிதரானார். புனிதம் இனிமையானது, மகிழ்வின் ஊற்று. இதனை பலரும் கண்டுக்கொள்வதில்லை. எளிமைக்குப் பதில் ஆடம்பரம், சொகுசு வாழ்வு நம்மை கவ்விக் கொள்கிறது. பொறுமைக்கு பதிலாக மற்றவர்கள்மீது கோபப்பட்டு மற்றவர்களை அழிக்கவிரும்புகிறோம். மன்னிப்புக்குப் பதிலாக பழிவாங்க நினைக்கிறோம். அர்ப்பணத்திற்கு பதிலாக வெளிவேட வாழ்வு வாழ்ந்து மனிதர்தரும் பெருமைக்கு தலைவணங்குகிறோம். தியாகத்திற்கு பதில் மற்றவர்களை நம் கொத்தடிமைகளாக நடத்த விரும்புகிறோம். ‘தன்னை மகிழ்விக்கு தகுதியுள்ளவராக ஆக்கிக் கொள்பவருக்குத்தான் இறைவன் அதிகமாக உதவி செய்கிறார்’ - கிறிஸ் ஜாமி கில்லோசோபி. ‘நாம் கடவுளாக மாற வேண்டும் என்று இறைவன் விரும்பவில்லை. இறைபண்பில் வளர வேண்டும் என்றுதான் விரும்புகிறார்’ - ரிக் வாரன்.
- அருட்பணி. S.I. அருள்சாமி
No comments:
Post a Comment