ஆலோசனை நேரம் - வேதியரிடம் கேளுங்கள்
திரு. அருள்சாமி, காரைக்குடி
அன்புள்ள மகனே, எனக்கு 65 வயதாகின்றது. வருகின்ற 2025 ஆண்டிற்குள் இறந்தவர்களை உயிர்பெற்று எழச்செய்யக்கூடிய ஊசி மருந்து மாத்திரைகளை உலகம் கண்டுபிடித்துவிடுமா? ஏனெனில் எனக்கு மரணத்தை நினைத்தாலே பயமாக இருக்கிறது. மரணம் எதனால் ஏற்படுகிறது? இறப்பிற்கு பின் என்ன நடக்கும்? மரணபயம் விலக என்ன வழி? இறக்காமல் இருக்க நான் என்ன செய்யவேண்டும் என்பதைத் தயவுசெய்து விளக்குவாயா?
பதில் :
அன்புள்ள அருள்சாமியப்பா, வயதிலும், அனுபவத்திலும் முதிர்ச்சியடைந்த நீங்கள் தாழ்ச்சியோடு என்னிடம் கேள்வி கேட்டதற்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். நவம்பர் மாதத்தில் இது ஒரு பொருத்தமான கேள்வி. இறக்காமல் இருக்க ஒரே ஒரு வழி உண்டு. அதுதான் பிறக்காமல் இருக்கவேண்டும். உலகில் பிறந்த அனைத்திற்கும் முடிவு உண்டு. பிறந்த அனைத்துமே கட்டாயம் இறந்து ஆக வேண்டும். இது மாற்ற முடியாதது மட்டுமல்ல, யாரும் மறுக்கவும் முடியாது.
உடலின் இயக்கம் நிற்பதால் உயிர் பிரிகிறது. உயிர் பிரிந்தவுடன் உடல் அழிகின்றது. மரணத்திற்குப் பின் உறவுகள் கூடுவார்கள். ஒப்பாரி வைப்பார்கள். ஊர்வலம் நடத்துவார்கள். மரித்த உடலைப் புதைப்பார்கள். இது வழக்கமாக நடப்பதுதான் என்றாலும் ஒரு ஆலோசனை உங்களுக்குச் சொல்ல விழைகிறேன்.
உலகில் உள்ள உறவுகளில் ஒரு சிலர் சுத்த சுய நலவாதிகள். அவர்களது அழுகையிலே அதை உணர்த்துவார்கள். என்னைத் தவிக்கவிட்டுப் போக உங்களுக்கு எப்படி மனது வந்தது? இனி நான் என்ன செய்வேன்? இனி யார் எங்களுக்கு ஆதரவு? பிள்ளைகளை நான் எப்படி வளர்ப்பேன்? யார் என்னை மதிப்பார்கள்? யார் எங்களை வழிநடத்துவார்கள்? என்ற அழுகைக்குரல்களில், தங்களது வாழ்விற்காக, மதிப்பிற்காக, வழிகாட்டுதலுக்காக, ஆதரவிற்காக, தங்களுக்கு இதுவரை கிடைத்த அனைத்தும் துண்டிக்கப்படுகிறதே என்ற கவலையில், அதிர்ச்சியில், கோபத்தில், ஆதங்கத்தில்தான் அவர்கள் அழுது புலம்பார்கள். மரணத்தைப் பற்றி, மரணமடைந்தவரைப் பற்றிக் கவலைப்படாமல், தங்கள் இழப்பைக் குறித்தே அவர்கள் கவலைப்பட்டு அழுவார்கள். எரியும் விளக்கில் எண்ணெய் வார்க்காத இந்த சுத்த சுயநலவாதிகள் இறந்தபின் ஆயிரக்கணக்கில் செலவு செய்து ஆடம்பரமாகப் புதைப்பார்கள். அதில் வீண்பொருமையும் அடைந்து கொள்வார்கள். அன்புள்ள அப்பா, உறவுகளின்மேல், உயிரின்மேல் அளவற்ற பற்று வைக்காதீர்கள். பணம், புகழ், பதவி, அதிகாரம், பேரன், பேத்தி, தோட்டம், துறவு என்ற கட்டுக்களை எல்லாம் அவிழ்த்து எறிந்துவிடுங்கள், சுதந்திரமாகுங்கள்.
இறப்பு பற்றியும், மறுவாழ்வு பற்றியும் பல்வேறு மதங்களில் பல்வேறு கருத்துக்கள் கொண்டுள்ளார்கள். ஆனால் இயேசுவின் கண்ணோட்டத்தை மட்டும் விளக்கிச் சொல்ல ஆசைப்படுகிறேன். யாயீர் மகள் இறந்துபோனாள் என்கிறது உலகம். ஆனால் இயேசுவோ சிறுமி சாகவில்லை, உறங்குகிறாள் என்றார். ஊதாரி மகன் கதையில் அவன் திரும்பி வருகையில் தந்தையின் வார்த்தைகள் உன் தம்பி இறந்து போயிருந்தான். உயிர்பெற்று வந்துள்ளான் என்கிறார். தந்தையின் அன்பிலிருந்து விலகுவதுதான் இறப்பு என்பது இயேசுவின் கருத்து ஆகும்.
வீட்டில் யாயீரின் மகள், வீதியில் நயீம் நகர் கைம்பெண் மகன், கல்லறையில் வைத்து நான்கு நாட்களானபின் இலாசர் இவர்களை உயிர்பெற வைத்த இயேசு, தாம் இறந்த மூன்றாம் நாளில் தாமே உயிர்த்தெழுந்து மரணத்திற்கு பின்பும் வாழ்வு உண்டு என்பதை உலகிற்கு எண்பித்தார். இறந்தபின் தனித்தீர்வை. அதில் இறைவனின் கேள்விகள் அனைத்தும்; அயலாருக்கு என்ன செய்தாய்? என்பதாகும். பசித்தவருக்கு உணவு கொடுப்பது படைத்தவருக்கே கொடுப்பதாகும் என்ற தத்துவத்தைக் கூறிய இயேசு, இலாசர் கதையில் வேறொரு கருத்தை வலியுறுத்துகிறார், இறப்புக்குப்பின் இலாசருக்கு அபிரகாமின்மடி. செல்வருக்கோ அக்கினியின் மடி. பசியால் தவித்த இலாசரைப் பாராமுகமாக இருந்ததால் செல்வருக்குத் தாகத்தால் தவிக்கும் அவலம் நேர்கிறது. மனித நேயத்தை வாழ்ந்து காட்டினால் இறப்புக்குப்பின் இன்பம். சுயநலத்திலே வாழ்வோருக்கு மறுமையிலே துன்பம். எனவே மனித நேயச் செயல்களில் இன்றுமுதல் ஈடுபடுங்கள்.
மரண பயம் விலக ஒரே வழி. உயிர்த்த ஆண்டவரைப் பற்றிக் கொள்வதுதான். சாவை வென்ற இயேசுவிடம் சரணம்; அடையுங்கள். இயேசுவோடு பேசுங்கள் (செபியுங்கள்). இயேசுவைப் பற்றிப் பேசுங்கள் (நற்செய்தி அறிவிப்பு). இயேசுவுடன் பேசாமல் இயேசுவைப் பற்றிப் பேச உங்களால் மட்டுமல்ல எவராலும் இயலாது. பேசினாலும் எடுபடாது.
மருத்துவ உலகத்தில் வாழ்நாளை நீட்டிப்பு மருந்துகள் கண்டுபிடிக்க முயற்சிகள் நடைபெறுகின்றன அப்பா. கருத்தரிக்கும் நொடியிலேயே இறப்பின் காரணிகள் கருவுக்குள் நுழைவதால் முதுமையும் முடிவும் ஏற்படுகிறது. போலியோ தடுப்பூசி போல இறப்பு தடுப்பு ஊசி எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்படலாம். ஆனால்2025க்குள் கண்டிப்பாக வராது என்றுதான் சொல்ல முடிகிறது.
பாலூட்டும் தாய் தனது குழந்தையை இடது மார்பிலிருந்து, வலது பக்கத்துக்கு மாற்றிப் பாலூட்டுவது போலவே இறப்புக்குப் பின்னும் இறைவன் பராமரிப்பு தொடரும். கருவறையில் இருக்கும்போதே பசிக்கும் குழந்தைக்கு தாய்ப் பால் சுரக்க வைத்த இறைவன், இறப்புக்குப்பின் நம்மை கைவிடமாட்டார். மரணம் என்பது தாயின் கைமாற்றும் நிகழ்ச்சிதான்.
நீரில் கரைந்த உப்பு காணாமற் போகவில்லை. நீருக்குள்தான் கரைந்து இருக்கின்றது. உலகின் பார்வைக்கு ஒருவர் இறந்தாலும், கடவுளுக்குள் அவர் இருக்கிறார் என்பதே உண்மை. ஏனெனில் நம் கடவுள் இறப்பின் கடவுள் அல்ல! வாழும் தெய்வம்! அவரில் வாழ்பவர் இறப்பினும் வாழ்வார்! இப்போது பயம் விலகியதா அப்பா?
திருமதி. சுமதி, கோயமுத்தூர் :
நான் எல்லோரையும் அன்பு செய்கிறேன். ஆனால் யாரும் என் அன்பைப் புரிந்துக் கொள்ளவில்லை. நான் ஒரு அனாதை போல உணர்கிறேன். என் அன்பை யாரும் அங்கீகரிக்கவில்லை. இது ஏன்? என் அன்பை மற்றவர்கள் புரிந்து கொள்ள நான் என்ன செய்யவேண்டும்?
பதில் :
சுமதியக்கா, நல்ல கேள்வி கேட்டிருக்கிறீர்கள். பாராட்டுக்கள். 2015 ஆண்டுகளுக்கு முன் இயேசு இவ்வுலகில் பிறந்து அன்பைப் போதித்தார். அன்பாய் வாழ்ந்தார். ஆனால் அவரையே இந்த உலகம் அப்போது புரிந்து கொள்ளவில்லை. அவரது அன்பை அங்கீகரிக்கவில்லை. அவரை அடித்துக் கொலை செய்து போட்டார்கள்.
எவ்வளவு பெரிய பிரச்சனைக்கும் தீர்வு சின்ன விசயத்தில் இருக்கும். நமது வீட்டில் இருக்கும் தலைவாசல் பெரிய கதவுக்கு, அதன் அளவுக்கு சாவி செய்வதில்லை. சின்ன சாவியைக் கொண்டே பெரிய கதவைத் திறந்துவிடலாம். எனவே பழசை நினைத்தே வருந்தவேண்டாம்.
பொதுவாக அன்பின் மொழிகள் ஐந்து என்கிறது உளவியல். 1.மனதாரப் பாராட்டுங்கள், 2.உடனிருப்பு செய்யுங்கள், 3.பணிவிடை புரியுங்கள், 4.பரிசுப் பொருள் கொடுங்கள், 5.அரவணைத்துத் தொடுங்கள்.
தொடுதல் ஓர் அன்பின் மொழி. உங்கள் கணவர் உங்களை தொடும்போது அது பிடிக்கவில்லை என்றால் உங்கள் அன்பின் மொழி அதுவல்ல. பரிசுப் பொருட்கள் கொடுக்கும்போது நீங்கள் மிகவும் மகிழ்ந்தால் அதுதான் உங்கள் அன்பின் மொழி. உடல்நலமற்ற தோழிக்கு பழங்கள் பரிசளிப்பதைவிட ஒருநாள் உடனிருப்பு செய்தால் நெகிழ்ந்து விடுவார்கள். ஏனெனில் அவரது லவ் லாங்வேஜ் பரிசு அல்ல உடனிருப்பே ஆகும்.
எனவே மேற்சொன்ன 5 வழிகளில் எது உங்கள் அயலாருக்குப் பிடிக்கிறதோ அந்த வழியைச் செயல்படுத்தினால் உங்கள் அன்பை அவர்கள் புரிந்து கொள்வார்கள். ஏனெனில் அனைத்திலும் பெரியதும், சக்திவாய்ந்ததும் அன்புதான். அன்பே உயர்ந்தது. தலைசிறந்தது. ஆனால் அதை செயலாக்குவதில் சற்று எச்சரிக்கையாகச் செயல்படவேண்டிய காலம் இது. என்ன புரிந்ததா சுமதியக்கா?
- நல்லை.இ. ஆனந்தன்
No comments:
Post a Comment