Pages - Menu

Wednesday, 11 November 2015

தேம்பாவணித் தேன்துளிகள் - இருபத்தேழாவது ஞாபகப்படலம்

               இத்தகைய வினையும் அதன் பயனும் அல்லாமல் தலையயழுத்தென்றும் ஊழ்வினையயன்றும் வேறு எதுவும் இல்லை. இத்தகைய பிறப்பின் வழியாக மனித இனம் பெருகி வருவதே அல்லாமல், இறந்து உறங்கிக் கிடந்து மீண்டும் பிறப்பு எடுத்து வருவாரும் இல்லை என்று சூசை விளக்கி முடித்தார்.
               இவற்றையயல்லாம் கேட்டு கதிரவன் அழகிய கதிர் விரித்து அமைந்த விடியற்காலை போல் மனம் தெளிந்த சிவாசிவன் சூசையைப் போற்றி சொல்வான். ஒளிபொருந்திய தவத்தோடு கற்றுப்புலமை பொருந்துதலின்றி இயல்பாகக் கலைநயம் பொருந்திய நல்லவனே உன் சொல்லாகிய வாளினால் என் துன்பமெல்லாம் அறுத்தெறிந்தாய். மனத்தின் மயக்கமெல்லாம் பச்சை மண்ணுக்குப் பகைவனாகிய குயவன்; தன் கையாகிய கயிற்றால் புறத்துத் தோன்றாது அரிவது போல அரிந்தாய். அமுதத்தையும், உயிரையும் எனக்கு அருள் புரிந்தாய், நீயே என்னைக் காத்தாய்.
               விலக்கப்பட்ட கனியை உண்டதால் வந்த பாவ வினையைக் கருதி கற்றோர் எழுதிய நூற்பொருளை நன்கு உணராமல் நல்லநீர் உப்புக்கடலுள் கலந்ததுபோல் பொய்யோடு கலந்து துன்பமே வளருமாறு தலைவிதிக் கொள்கையும் நீங்காத மறுபிறப்புக் கொள்கையும் புகுந்தனவோ. இதோ பார், இனி அவ்வாறு வந்து சேர்ந்த பழவினையை அறுத்தெறியும் தன்மை ஒன்றுமே இல்லையோ என்று சிவாசிவன் வினவத் தொடங்கினான்.
               சூசை சிவாசிவனை விருப்புடன் நோக்கி, “அது நம் போன்ற மனிதரால் முடியாது. ஆனால் உலக மக்களின் பாவங்களைத் தானேற்று உலக மக்களை மோட்சம் சேர்க்க இறைவன் மனிதனாகப் பிறப்பார் என்று வேதம் சொல்கிறதுஎன்றார்.
               இறைவன் எந்த நாட்டில்? எந்த நாளில்? எந்த குலத்தில் பிறப்பார்? என்று சிவாசிவன் வினவினான். இறைவனின் பிறப்பும், அதற்கு தந்தை தானென்றும் எகிப்து நாட்டிலே மன்னனுக்குப் பயந்து ஒளிந்துள்ளமையை சூசை அறிந்திருந்தும் அதை காட்டிக் கொள்ளாமல் வேத நூலோர் முன்னாளில் சொல்லியுள்ள நிலையை ஆராய்ந்து பார்த்தால் என் நாட்டில் என் குலத்தில் இந்நாளில் கடவுள் மனிதராய் அவதரித்துள்ளார் என்று கொள்வதே உரிய தன்மை என்று கூறினார்.
எந்நாட்டு, எந்நாள், எக்குலத்தே இறையோன்
               பிறப்பான்? என அன்னான்
அந்நாட்டு ஒளிப்புத் திருவுளம் என்று அறிந்த சூசை
               மறை நூலோர்
முன்நாள் சொன்ன நிலைநோக்கின், முகைத்த
               என்நாட்டு, என்குலத்தே
               இந்நாள் கடவுள் மகன் ஆனான் என்பது உரிய
               இயல்புஎன்றான்.
பாடல் -  126
படலம் -  27
காண்டம் -  3

- புலவர். அந்தோணி, குலமாணிக்கம்,

சி..மே.நி.பள்ளி, குடந்தை (ஓய்வு)

No comments:

Post a Comment

Ads Inside Post