Pages - Menu

Wednesday, 11 November 2015

என் மகனுக்கு ஒரு கல்லறை வேணும்!

    “டேய் டேவிட், இன்னைக்கு இரண்டு பேர்ப்பா, மதியானத்துக்கு மேலத்தான். ரெடி பண்ணிடு. குழி தோண்ட உதவிக்கு ஆள் இருக்கு இல்ல” மதியானம் அடக்கத்துக்கு வரும் உயிரற்ற உடல்களுக்காக உத்திரவு போட்டுக் கொண்டிருந்தார் கல்லறை தோட்டப் பொறுப்பாளர்.
“சரி சார், பெரியவங்களுக்கா? சின்னப் பிள்ளைகளுக்கா?”
“ஒன்னு வயசானவர், ஒன்னு பத்து வயசுப் பையன். டெங்கு சுரத்திலப் போயிட்டானாம்.”
பத்து வயது பையன் என்றபோது டேவிட்டுக்கு மனது திக்கென்றது. அவனை அறியாத சோகம்.
“கவர்மண்ட்ல என்ன என்னமோ செய்யிறாங்க. ஆனாலும் டெங்கு சுரம் சிலரை பழி வாங்கிட்டுத்தான் இருக்கு சார்.”
“ஆமாம் டேவிட், நாம்ப என்ன செய்ய முடியும்? நீ போய் உன் வேலையைப் பாரு. மசமசன்னு நின்னுக்கிட்டு இருக்காதே!”
“சரி சார், நான் போறேன்.”
“டேவிட், ஒன்னத்த நான் மறந்திட்டேன். நாளைக்கு கல்லறைத் திருநாள். குழி தோண்டினதுக்கு அப்புறம் உன் மனைவியோட இன்னும் ரெண்டு பேரை சேர்த்துக்கிட்டு எல்லா இடத்தையும் கிளீன் பண்ணிடு. எல்லாத் தொட்டியிலயும் தண்ணி வருதான்னு செக் பண்ணிக்க. கல்லறையை மொழுகுறவங்களுக்கு கஷ்டம் இருக்கக் கூடாது. மணலை வண்டி வைக்கிற ய­ட்டுல கொட்டி வச்சிக்க. நாளைக்கு கல்லறையை பாக்க சுத்தமா, அழகா இருக்கனும். இல்லன்னா, கமிட்டித் தலைவர் திட்டுவாரு. அதனால எல்லா வேலையையும் சீக்கிரம் முடிக்கப்பாரு” சொல்லிக் கொண்டே கல்லறைத் தோட்டப் பொறுப்பாளர் ஜோசப் அண்ணன் ஆபீஸ் ரூம்ல போய் நாளைக்கு நன்கொடை வாங்குவதற்கு தேவையான பில் புக், நோட்டு எல்லாத்தையும் மேஜையில் ரெடியா எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.
    கல்லறைத் திருநாள் களை கட்டத் துவங்கி விட்டது. பூக்கடைகளும், ஊதுபத்தி, சாம்பிராணி, மெழுகுதிரி விற்பனையும் அமோகமாக நடந்து கொண்டிருந்தது.
    காலை ஐந்து மணிக்கே கல்லறைக்கு வந்து பூமாலை, சாம்பிராணி போட்டவர்களைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருந்தது. இவர்கள் ஆறரை மணி பல்லவன் எக்ஸ்பிரசில் சென்னை செல்ல வேண்டியவர்கள். சென்னை செல்வதற்கு முன் கல்லறை காரியங்களை முடிக்க வேண்டும் என்ற அவர்களது உணர்வு பாராட்டுவதற்கு உரியதுதான்.
    “டேவிட், கல்லறை கமிட்டித் தலைவர் மற்றும் உறுப்பினர்களுடைய குடும்ப கல்லறையை உடனே சுத்தம் செய்து வை. தலைவர் வந்து பார்ப்பதற்கு முன் எல்லாவற்றையும் முடித்து வை” என்று ஆணையிட்டுக் கொண்டே கமிட்டித் தலைவரது வருகையை எதிர்நோக்கி வாசலுக்குப் போனார் ஜோசப் அண்ணன்.
    இந்த கல்லறைத் தோட்டம் தனியாருக்குச் சொந்தமான இடம் என்பதால் அனைவரும் மற்ற நிர்வாகிகளும் இந்த இடத்தை அதிக செலவு செய்து சுத்தப்படுத்தி அழகுபடுத்துகிறார்கள்.
    “இன்னைக்கு நல்ல வருமானம் கிடைக்கும். சேர்த்து வச்சா அடுத்த மாசம் வரும் கிறிஸ்மசுக்கு புதுத் துணி வாங்கிக்கலாம். நிதைக்கும் குழி தோண்டுறதுல கிடைக்கிற வருமானம் சாப்பாட்டுக்கும், மத்த செலவுக்கும் சரியாப் போயிடுது. என்ன செய்ய? எம் மனைவி ஸ்டெல்லாவும் எனக்கு உதவி செய்யிறா. ஆனாலும் பணம் பத்த மாட்டேங்குது. இந்த டாஸ்மாக் தண்ணிய குடிக்கலனா இந்த வேலைய செய்ய மனசு ஒப்பமாட்டங்கிது. எங்க அப்பா எனக்கு விட்டுட்டுப் போன தொழிலு. படிக்காம சுத்தினதால எனக்கு இது நிரந்தரம்ன்னு ஆயிடுச்சி?” தனக்குள்ளேயே டேவிட் பேசிக்கிட்டு இருக்கும்போது, கவுன்சிலர் மார்ட்டின் சத்தம் போட ஆரம்பிச்சிட்டார்.
    “என்னா டேவிட் யோசனை? வெரசா வா. எங்க கல்லறைய வந்து மொழுகி சுத்தம் செய்.”
    “சரிண்ணே, இதோ வர்றேன்.”
    கவுன்சிலர் அண்ணாச்சி மத்தவங்கள விட அதிகமாத் தருவாரு என்ற சந்தேத்தோட ஓடினான் டேவிட்.
    “டேவிட் எங்க? உடனே அவன் கூப்பிடுங்க. பழக்கடை சார்லஸ் அண்ணனோட பையன் இறந்துட்டானாம். எட்டு வயசுதானாம். சாயங்காலம் வருது உடல். குழி வெட்டி ரெடியா இருக்கச் சொல்லு” கமிட்டித் தலைவர், ஜோசப்கிட்ட சொல்லிட்டு அவுங்க குடும்ப கல்லறைக்கு செபம் சொல்லப் போயிட்டார்.
    “ஜோசப் அண்ணே, என் வீட்டுக்கார் எங்கண்ணே?” டேவிட் பெண்டாட்டி கேட்க,
    “அங்க கவுன்சிலர் அண்ணன் கல்லறைக்கிட்ட நிப்பான், சீக்கிரம் கூட்டிக்கிட்டு வா. சாயங்காலம் பாடி வருது. எட்டு வயது சின்ன பையன். குழி வெட்டனும். நீயும் சேர்ந்து விரசா முடியுங்க.”
“சரிண்ணே, இதோ கூட்டிக்கிட்டு வரறேன்.” சொல்லிக் கொண்டே ஸ்டெல்லா டேவிட்டை கூட்டிக்கிட்டு வந்து குழி வெட்ட ஆரம்பிச்சாங்க.
    “ஏங்க நம்ப பையன் கெவினுக்கு இப்ப இருந்தா எட்டு வயசு ஆகாது?”
    “ஸ்டெல்லா, நேத்திலேயிருந்து எம்மனசு சரியில்ல. நீ வேற இப்ப அத ஞாபகப்படுத்தாதே.”
“எப்படிங்க, என்னால மறக்க முடியும்? ஆறு மாசத்துக்கு முன்னால உய்யங்கொண்டான் ஆத்துல பசங்களோட குளிக்கப்போன என் பையன் செவின் ஆத்தோட போனதை மறக்கச் சொல்றியா? என் கண்ணால பாக்கமயே தண்ணியில கரைஞ்சிபோன என் பையனை மறக்கச் சொல்றியா? காசில்லாததால ஆள் வெச்சி புள்ள பாடிய கண்டுபிடிக்க முடியாம நொந்துபோன எம் மனச மாத்திக்கச் சொல்றியா?”
    “ஸ்டெல்லா நிறுத்து. காலையிலேயிருந்து எம் மனசு நான் சொல்றதை கேட்க மாட்டேங்குது. என்ன குழிய வெட்ட விடு.”
    “செத்தவங்க எல்லாருக்கும் குழி வெட்டுனமே. நம்ப புள்ளைக்கு என்ன செஞ்சோம்? எல்லா கல்லறையிலயும் பூவும், சாம்பிராணியும் போடுறாங்களே. ஏம் புள்ளைக்கு ஒரு கல்லறை இல்லையே! எம் புள்ள எங்க இருக்கான்னு பூ வைக்க? எம் மனசு புண்ணா இருக்கே, அந்த ஆண்டவனுக்குத் தெரியாதா?”
    “சும்மா இரு ஸ்டெல்லா. நான் ரொம்ப டென்ஸன் ஆயிடுவேன். அப்புறம் நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது!”
    “செத்து மிதந்த ஏம்புள்ளய தூக்க ஆளில்லாம எங்கயோ அநாதைப் பொணமா புதைஞ்சிருக்கே. ஊர் பொணத்தை எல்லாம் புதைச்சியே, எம் புள்ளைக்கு என்ன செஞ்ச? இந்த கையால தூக்கி வைக்கிற பாக்கியும் எனக்கு கிடைக்கலயே? நான் என்ன செய்வேன்?”
    ஸ்டெல்லா அழுது புரண்டு மண்ணை நாலா பக்கமும் விசிறி அடிக்க மருள் கொண்டவளாக டேவிட் குழியிலேயிருந்து மேல வந்து கமிட்டி தலைவரை தேடிப் போனான்.
    “ஐயா, தலைவரே! எம் பையனுக்கு ஒரு கல்லறை வேனும். குடுப்பீங்களா? ..... குடுப்பீங்களா?” என்று பைத்தியம் பிடித்தவன்போல அழுது கத்திக் கொண்டிருந்த டேவிட்டை ஆச்சரியத்தோடு பார்த்தார்.
    டேவிட் கல்லறையில் உள்ள எல்லோரிடமும் “எம் பையனுக்கு ஒரு கல்லறை வேணும்” என்று கேட்டுக் கொண்டே ஓடிக் கொண்டே இருந்தான்.
    ஸ்டெல்லா ஒன்றும் செய்ய இயலாதவளாக வாயடைத்து நின்றாள்.
    டேவிட் அவன் பையனை ஆற்று வெள்ளத்தில் பறி கொடுத்ததும், அவனது உயிரற்ற உடல் கிடைக்காமல் போனதும், அவனுக்கென்று ஒரு கல்லறை இல்லாமல் போனதும் அங்கு எல்லோருக்கும் தெரியுமா? அல்லது புரியுமா அவனது சோகம்?
- திருமதி. கேத்தரீன் ஆரோக்கியசாமி, திருச்சி

No comments:

Post a Comment

Ads Inside Post