பிரிந்தவர்களால் புரியும் வாழ்வு
இறப்பு என்பது என்ன? அது பிறப்பின் முடிவு என்று ஓரிடத்தில் படித்தேன்.
அப்துல் ரகுமான் கூறுகிறார், கொஞ்சம் கொஞ்சமாய் இறப்பதற்கு பெயர்தான் வாழ்க்கை.
பூமிக்கடியில் செல்வதற்கு முன் பூமிக்கு மேல் நடக்கும் போராட்டம்தான் வாழ்க்கை என்று மற்றொரு இடத்தில் படித்தேன்.
உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கைக் கொள்பவர் இறப்பினும் வாழ்வார் என்கிறார் இயேசு
(யோனா 11 : 25). வழியும், உண்மையும், வாழ்வும் நானே என்கிறார் மீண்டும் இயேசு (யோவா 14 : 6).
வாழ்வு ஒரு பயணம் - காலத்தில் நாம் நடக்கிறோம்.
வாழ்வு ஒரு போராட்டம், போராட்டங்கள், தடங்கள், எதிர்ப்புகள் ஆகியவைகளைச் சந்தித்து வாழ வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
வாழ்வு ஒரு தேடல், உள்ள நிறைவையும், மகிழ்வையும் வாழ்வின் பொருளையும் கண்டடைய விரும்புகிறோம்.
நவம்பர் மாதத்தில் நம்மை விட்டு நிரந்தரமாகப் பிரிந்தவர்களை சிறப்பாக நினைத்துப் பார்க்கிறோம்.
நெருநல் உளன்ஒருவன் இன்றுஇல்லை என்னும்
பெருமை உடைத்து இவ்வுலகு (குறள் 336)
நேற்று இருந்தவன் இன்று இல்லை என்ற உண்மையை பெற்றது இவ்வுலகு என்கிறார் வள்ளுவர்.
ஒரு ஞானியிடம் ஒருவர் சீடராக விரும்பி அவரை அனுகினார். ஞானி, பத்து அடக்கச் சடங்குகளில் பங்கெடுத்து விட்டு பிறகு இங்கு வா என்றார்.
எனக்கு இப்போது 67 வயதாகிறது. வயதானவர் என்று சொல்லிக் கொள்ள பலர் விரும்புவதில்லை. இளமையானர் ;என்றே காட்டிக் கொள்ள விரும்புகின்றனர். ஆனால் இப்போது அதிகமாக என் இறப்பைப் பற்றி சிந்தித்துப் பார்க்கிறேன். நாம் இறந்த பிறகு என்ன நடக்கும் என்றும் கற்பனை செய்து பார்க்கிறேன். நாம் இறந்த பிறகு இப்படி அடக்கம் செய்ய வேண்டும். இந்த இடத்தில் அடக்கம் ;செய்ய வேண்டும் என்று உயில் எழுதுவர். நம் வாழ்வின் நிகழ்ச்சிகளில் எடைபோட்டு பார்க்க முடியாத நிகழ்வு நம் மரணம். நடந்த நிகழ்ச்சியில் இப்படி நடந்திருக்கலாம், அப்படி செய்திருக்கலாம் என்று நினைத்துப் பார்ப்போம். அந்த முறையில் எடைபோட்டு பார்க்க முடியாத நிகழ்வு இறப்பு. 67 ஆண்டுள் மிக விரைவாக ஓடிவிட்டதாக உணர்கிறேன். இந்த குறுகிய காலத்தில் எத்தனை ஏக்கங்கள் பெருமை தேடல்கள். ஒருவர் கூறுகிறார் பசி, பட்டினி இல்லாமல் வாழ்ந்தால் போதும் என்பார். வீட்டுக்கு மேல் வீடு, நிலத்துக்கு மேல் நிலம், வாகனங்களுக்கு மேல் வாகனம், நகைக்கு மேல் நகை, ஆடைகளுக்கு மேல் ஆடை ஆக மேலுக்கு மேல் குவிக்க விரும்புகிறவர்கள் மேல், கடைசியில் மண் குவிக்கப்படுகிறது. இதனிடையே எவ்வளவு பேராசை, கனவுகள். வள்ளுவர் அழகாகக் கூறுவார்,
நாச்செற்று விக்குள் மேல்வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும் (குறள் 335)
நல்வினை என்பது பகிர்வு
பகிர்வு தருவது உறவு
உறவில் மலர்வது மகிழ்வு
மகிழ்வில் உதிப்பது தெய்வீகம்
நம்மோடு வாழ்ந்தவர்களின் நற்பண்புகளை நினைத்து பார்ப்போம். அவைகள் நம் அக ஒளியாக ஆகட்டும். இறந்தவர்களுக்காக அழும்போது இப்போது இருக்கும் வாழ்வின் அழகை உணர்ந்து பார்க்கலாம். மனிதரின் வாழ்வு முடிவில்லா வாழ்வு, மனிதர் இறந்தபின் இறைவனின் பிரசன்னத்தில் நுழைகின்றனர். அன்பு உணர்வற்ற வாழ்வு, இறைவனின் பிரசன்னத்தை அனுபவமாக பெறுவதில்லை என்று இயேசு தெளிவாக்கியிருக்கின்றார். மொகலாய அம்மாவாசைக்கு ஏராளமான மக்கள் இறந்தவர்களுக்கு காவிரி கரையில் திவசம் அளிப்பதை பார்க்கிறோம். கல்லறை திருவிழவிற்கு நம் மக்கள் தவறாமல் கல்லறைகளை சந்திக்கிறார்கள். நம்மைவிட்டு பிரிந்தவர்களை மனம் பிரியாமல் நினைக்கிறோம். வாழ்வின் திசையை, சுவையை உணர்ந்து வாழவே அனைத்து மரித்தவர் நினைவு தினம் நம்மை அழைத்து செய்தி தருகிறது.
- அருட்பணி. S.I. அருள்சாமி
No comments:
Post a Comment