தப்புத்தாளங்கள்- சிறுகதை :
கேத்தரின் ஆசா,திருச்சி
ஞாயிற்றுக்கிழமை பூசை, கோவில் நிரம்பி வழிந்தது. பைபிள் ரீடிங் முடிந்து சாமியார் பிரசங்கத்தை ஆரம்பித்திருந்தார். அன்றைய பைபிள் வாசகத்தின் கருத்தைத்தான் பிரசங்கத்தில் விபரமாக சொல்வார்கள். ஆனால், சாமியார் முற்போக்குவாதி. தடம்புரண்டு சம்மந்தம் இல்லாத கருத்துக்களை விளக்கமாக சொல்லிக் கொண்டிருந்தார். இடையிடையே அரசியல் தாக்கம் வேறு. கிறிஸ்துவர்கள் அமைதியானவர்கள். அகிம்சைவாதிகள், கொடூரம் நிகழ்ந்தாலும் மெளனமாக மெழுகுவர்த்தி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் அன்புள்ளம் கொண்டவர்கள். கிறிஸ்துவ நெறிமுறை தவறாதவர்கள். ‘இந்த சாமியார் ஏன் சமூக எழுச்சி, அரசியல் விழிப்புணர்வு பற்றி பேசுகிறார்’ என்று விசுவாசிகள் அவரை வினோதமாக பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார்கள்.
பழமைவாதி உத்திரியம் தாத்தா பிரசங்கத்தி லிருந்து லேசான உறக்கத்திற்கு சென்று விட்டார். ஸ்டெல்லா அக்கா எத்தனை முறைதான் தன் முக்காட்டை சரி செய்வதுபோல் புதிதாக அணிந்திருக்கும் மி´ன் கட்டிங் வளையல்களை எல்லோரும் பார்க்கும்படி தம்பட்டம் அடித்துக் கொண்டிருப்பார். கையே வலித்துவிட்டது. பிரசங்கம் ஓய்ந்தபாடில்லை.
அன்னமேரி பாட்டிக்கு உட்கார சேர் கிடைக்காத தால் கீழே சம்மணம் போட்டு உட்கார முடியாமல் சேரில் அமர்ந்திருக்கும் இளம் பெண்ணை மனதில் திட்டிக்கொண்டே அமர்ந்திருந்தார். இளம் பெண்கள் கீழே உட்காரக் கூடாதா? தங்கள் சுடிதார் அழுக்காகிவிடக்கூடாது என்று கவனமாக இருந்தார்கள்.
அழகான கலகங்தா அணிந்து கொண்டு வந்திருந்த யஹலன் அடிக்கடி தன் கவனத்தை இறக்கையில் அமர்ந்திருக்கும் ஸ்டீபன் தன்னை பார்க்கிறானா என்ற ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள். பூசை நேரத்திலும் ஜெபமாலை உருட்டி கொண்டிருக்கும் சகாயமேரி அத்தை, இன்றைக்கு சொல்லும் தேவ ரகசியம் சரிதானா? என்று நினைவுபடுத்தி பார்த்துக்கொண்டே ஜெபமாலை உருட்டுவதில் கவனமாக இருந்தார். இவர் பூசையிலும் கவனம் செலுத்தவில்லை. தன்னை மற்றவர்கள்
பக்திவான் என்று நினைக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருந்தார்.
சினிமா ஹீரோ போல் உடை அணிந்து கொண்டு வெடுக்கான் வெடுக்கானாக எலும்புகூடு போல் (நினைப்பு தனக்கு பிடித்த ஹீரோ போல் இருப்பதாக நினைப்பு) பியானோ வாசித்துக் கொண்டிருக்கும் பெலிக்சின் கவனம் சர்ச்சில் நடுப்பகுதியில் அமர்ந்திருக்கும் ஜுலி மேலேயே இருந்தது. தன்னை ஒரு பெரிய இசைக்கலைஞனாக கற்பனை செய்துக் கொண்டு சாமியார் இன்னும் அதிக நேரம் பிரசங்கம் செய்வதால்தான் அதிக நேரம் ஜுலியை பார்க்கலாம் என்று பிரசங்கத்தை சூப்பர் என்ற மனோபாவத்தை முகத்தில் வெளிப்படுத்திக் கொண்டிருந்தான்.
தான் இரண்டு நாளாக தயாரித்த இலக்கிய, அரசியல், சமூக சம்மந்தமான பிரசங்கத்தை மக்கள் ஏன் ஆவலோடு கேட்கவில்லை? முடித்துவிடலாமா? அல்லது தயாரித்த முழு உரையையும் படித்து முடிப்போமா என்ற எண்ண ஓட்டத்தில் நின்றிருந்தார் சாமியார்.
திடீரென்று ஒரு பெண்மனி எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கும் விதமாக சர்ச்சின் உள்ளே நடுபாதையில் விடுவிடுவென்று நடந்து பீடத்துக்கு எதிரே முழந்தாளிட்டு இரண்டு கைகளையும் விரித்து உரத்த குரலெடுத்து அழுது கொண்டிருந்தாள்.
ஜெபமாலை ஸ்பெஸலிஸ்ட் சகாயமேரி எழுந்து, அந்தப்பெண் அருகே சென்று“ஏப்புள்ள இப்படி நைட்டி போட்டுக்கிட்டு சர்ச்சுக்கு வரக்கூடாது தெரியுமா, இப்படி பீடத்துக்கிட்ட கத்தி அழுவவும் கூடாது, எந்திருச்சி வெளியே போ” என்று அதட்ட அந்தப் பெண் எதையும் சட்டை செய்யாமல் சகாயமேரியை பார்த்து ஒரு புன்னகை செய்து விட்டு நல்லா சம்மணம் போட்டு அமர்ந்து கொண்டது.
எனக்கு எப்போதும் ஒரு சந்தேகம் உண்டு. பெண்களில் சிலர் நைட்டுக்கு போடும் நைட்டியை போட்டுக் கொண்டு தெருவில் அலைகிறார்களே... நைட்டிக்கு ம்ழிதீ ழிஐd ஹிஷ்ஆஜுமி என்று பெயர் வைக்கலாமா என்ற எண்ணம் உண்டு.
சம்மணம் போட்டு அமர்ந்த பெண் அழகாக இருந்தார். வணப்பு மிகுந்த உடல்வாகு. சரியா படிக்காமல் வீட்டிற்கும் அடங்காமல் திரிந்தவராக இருக்க வேண்டும் என்று தோன்றியது.
இளவட்டங்களின் கழுகு பார்வை அவளை மொய்த்துக் கொண்டிருந்தது. ஓரக்கண்ணால் அந்த பெண்ணை அளவெடுத்து விட்டு நல்லவன் போல் பெலிக்ஸ் ஜுலியைப் பார்க்க, அவள் அவனை முறைக்க இருவருக்கும் இடையே ஒரு சிறு ஊடல் ஓடிக்கொண்டிருந்தது. நிறைமாத கர்ப்பிணிப் போல தோற்றம் உள்ள அந்தப் பெண்ணைப் பார்த்து, இதற்கு யார் காரணமாக இருப்பார்? இவளுக்கு கல்யாணம் நடந்துவிட்டதா? நடக்கிலியா? தவறிப்போனவளா? யாருக்கும் அதுப் பற்றி அவளை தெரியவில்லை.
சம்மணமிட்டு உட்கார்ந்திருந்த பெண் மீண்டும் எழுந்து நின்று கத்த ஆரம்பித்தது, அவளின் சிரிப்பும், அழுகையும் வித்தியாசமாக இருந்தது. மனநிலை பாதிக்கப்பட்டவள் போல அவளது நடவடிக்கை இருந்தது.
கடைசி பெஞச் ஆரோக்கியம் அண்ணன், எங்கிருந்தோ ஒரு குச்சியை எடுத்துக் கொண்டு ஓடி வந்து,
“இந்தாம்மா ஏந்திரி... கண்டது கடையதும் வீணாப்போனதும் கோவிலுக்குள் நுழைஞ்சி அழிச்சாட்டியம் பண்ணுது, ஓடு... வெளியே போ”... என்று சொல்லிக் கொண்டே குச்சியால் நெட்டித்தள்ளினார்.
குச்சியால் நெட்டி தள்ளிவிட்டதும் அவள் கெட்ட வார்த்தைகளால் வசை பாட ஆரம்பித்தாள்.
“ஒழுக்கம் கெட்டவ வார்த்தையை பார்... வெளியே ஓடு நாயே” என்று ஆரோக்கியம் அண்ணன் அவளை விரட்டிக் கொண்டு ஓட பூசை பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஒவ்வொருவரும் அவர் அவர் பார்வையில் விமர்சித்துக் கொண்டிருந்தார்கள். எல்லோருடைய முடிவும் அவள் கெட்டுப்போனவள் என்பது தான். மனநிலை பாதிக்கப்பட்டவள், கெட்டுப்போனவளா? எதையும் முழுவதும் தெரிந்து கொள்ளாமல் தீர்ப்பளிப்பதுக்கு இவர்கள் யார்? இப்போது பைபிள் சம்பவம் ஒன்றுதான் நினைவுக்கு வந்தது. பாவம் செய்த பெண்ணை கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்று சொல்லும்போது இயேசு கிறிஸ்துவின் சிந்தçனையும் தீர்ப்பும் எப்படி இருந்தது என்று நினைத்தேன். இந்த தீர்ப்புத்தான் இவர்களுக்கும் பொருந்தும் என்பது எனது முடிவு.
மனநிலை பாதிக்கப்பட்டவள் ஏதோ ஒரு நிலையில் தெளிவாக இருக்கிறார்களே அது எப்படி? மனநல மருத்துவரைத்தான் கேட்க வேண்டும். கெட்ட வார்த்தைகள் பேசுவது என்பது ஒரு மனிதனின் ஒழுக்கம் தொடர்பானதா? அது எப்படி ஒழுக்கத்துக்கான அளவுகோளாக மாறும்? அப்படி பேசாதவர்கள் உத்தமர்களா? சக மனிதரை மனத்தளவில் உணர்வுகளில் நோகடிக்கிற, அவரை சரிநிகராக நடத்தாத எப்படிப்பட்ட வார்த்தையும் கெட்ட வார்த்தைதான்.
எந்த சொல் நம்மை காயப்படுத்துகிறதோ, நம்மை இழிவுபடுத்துகிறதோ, கோப்படுத்துகிறதோ அந்த சொல்லை மற்றவர்கள் மீது நாம் பிரயோகிக்கும் முன் யோசிக்கிறோமா? தயங்குகிறோமா? அந்த சூழ்நிலையில் நாம் எல்லோரும் தவறு செய்கிறோம் என்பதுதானே பொருள்.
குச்சியால் நெட்டித் தள்ளியதால் கீழே விழுந்த அந்தப் பெண் ரோட்டிலே பிரசவித்துவிட்டாள். சுற்றி நின்று கூட்டம் நல்ல கிறிஸ்துவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
சக மனிதர்களின் பச்சாதாபம் அவள்மேல் விழவில்லையா?. தாயின் பெருமையை வாய்கிழிய பேசும் நாம், வாட்ஸ் அப்பில் நூறு கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் நாம், பேஸ்புக்கில் லைக்குக்காக தாயின் புகழ்பாடும் நாம், இந்த தாயை எப்படி ஏற்றுக் கொள்ளாமல் போகிறோம். அந்த குழந்தை இந்த தாயை போற்றுமா? தூற்றுமா?.
தாய்மை புனிதமானது... அவளின் இந்த நிலைக்கு காரணம் யார்? என்று தெரியாது. அவளின் உணர்வில்லாமல் பெற்ற இந்த குழந்தை என்ன பாவம் செய்தது? சமுதாயத்தில் எதிர் கொள்ளப்போகும் பிரச்சினை எவ்வளவோ? அவளது அழகுதான் அதற்கு காரணம் என்றால் அவள் குற்றமற்றவர், இந்த சமுதாயம் தான் மாற வேண்டும்.
No comments:
Post a Comment