Pages - Menu

Tuesday 4 July 2017

குடும்பத்தின் மகிழ்வே, திருச்சபையின் மகிழ்வு - அருள்பணி. அ. பிரான்சிஸ், பாபநாசம்

குடும்பத்தின் மகிழ்வே, திருச்சபையின் மகிழ்வு
- அருள்பணி. அ. பிரான்சிஸ், பாபநாசம்

மனிதர் ஒரு சமூக உயிரி. மண்ணகத்தில் உதயமானதும் தாய் மடியில் கிடத்தப்படும் குழந்தை, தந்தை, தாத்தா, பாட்டி, மாமா, அத்தை போன்ற உறவு வட்டத்துள் வளர்கின்றது. தான் வளர்ந்து வாழும் சமூக, சுற்றுப்புறச் சூழலின் படைப்பாக ஒரு மனிதர் மாற்றம் பெறுகின்றார். இவரது வளர்ச்சியில் முதலிடம் பெறுவது இவரின் குடும்பமே. இக்குடும்பத்திலிருந்தே சமூகத்தோடு தொடர்பு ஏற்படுகின்றது. தான் வாழும் சமூகத்தில் பலரோடு கொண்டுள்ள உறவின் காரணமாகக் கோபம், மகிழ்ச்சி, வருத்தம், பயம், ஆச்சரியம், சந்தேகம், சோகம் போன்ற உணர்ச்சிகளுக்கு ஆளாகின்றார். இதனையே மனிதர் உணர்ச்சிகளால் ஆளப்படுகிறார் என்று உளவியலாளர் கூறுகின்றனர்.
  
அனைவரும் விரும்பும் உணர்வு:

பல்வேறு உணர்ச்சிகளுக்கு நாம் உட்படுத்தப்பட்டாலும் அனைவராலும் விரும்பப்படுவது மகிழ்ச்சி என்ற உணர்வே. அனைவரும் தேடுவது மகிழ்ச்சியையே. நமது வாழ்வின் துக்கம் நிறைந்த அல்லது வருத்தம் தரும் நிகழ்வுகளை மறக்கத் துடிக்கும் நாம் மகிழ்ச்சியான அல்லது சந்தோ­மான தருணங்களையே நமது நினைவில் அசைப் போடத் துடிக்கின்றோம்.

தோச மில்லா சந்தோ­ம்:

தோ­ம் என்பது நமது மரபில் தீண்டத்தகாத வார்த்தையாக வாழ்வின் தீமைகளை நிறைந்திருக்கும் கருத்தியலைக் கொண்டுள்ளது. ஆனால் சந்தோ­ம் என்னும் மகிழ்ச்சியினை அனைவருமே  விரும்புகின்றனர். எங்கே மகிழ்ச்சி? எங்கே நிம்மதி? அங்கே எனக்கோர் இடம் வேண்டும் என்று மனித மனம் அலை மோதிக் கொண்டிருக்கின்றது. 
ஆக, மகிழ்ச்சி என்பது என்ன?

மனித உள்ளத்திலிருந்து  எழும் ஆழமான ஓர் இனிய உணர்வே மகிழ்ச்சியாம்.  இயற்கையில் கொட்டிக் கிடக்கும் கொள்ளை அழகில் லயித்து வரும்போது கிடைக்கும் மகிழ்ச்சி. மனம் விரும்பும் நண்பர்களோடு நட்பினைப் பகிர்ந்து கொள்ளும் போது கிடைக்கும் மகிழ்ச்சி. தன்னை ஆளாக்கிய பெற்றோர், ஆசான்களோடு செலவழிக்கும் நேரம் தருகின்ற மகிழ்ச்சி. ஆன்மிக ஈடுபாட்டோடு கண்களை மூடி ஏகப்பொருளோடு தியானத்தில் அமர்ந்து செபிக்கும் போது நாம் பெறும் மகிழ்ச்சி. இவையயல்லாம் நீதிமிக்க, நியாயமான, மனதுக்கு திருப்தி தரக்கூடிய மகிழ்ச்சியாகும்.

ஆனால் இன்னொரு வக்கிரமான மகிழ்ச்சியும் உண்டு. அதுதான் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலின வன்கொடுமை போன்ற அநீதி செயல்களின் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சி. இறையாசீர் பெற்றுத் தருவது முந்தையது. மனிதரின் கோபத்தையும், இறை சாபத்தையும் பெற்றுத் தருவது பிந்தையது. மனமகிழ்வும், மனசாட்சியின் குடைச்சலும் ஒத்துப் போகுமா?

விவிலியம் காட்டும் மகிழ்ச்சி:

* உம் கட்டளைகள் காட்டும்  நெறியில் என்னை நடத்தும்; ஏனெனில் அதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். திபா 119:35.
* தீங்கிழைப்பது மதி கெட்டோருக்கு மகிழ்ச்சி தரும் விளையாட்டு; ஞானமே மெய்யறிவுள்ளோருக்கு மகிழ்ச்சி தரும்           நீமொ 10:23
* ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே மாட்சியும் பெருமையுமாகும்; அதுவே மகிழ்ச்சியும் அக்களிப்பின்   மணி                முடியுமாகும்.  - சீஞா 1:11

* உங்கள் மகிழ்ச்சியை யாரும் உங்களிடமிருந்து நீக்கி விட        முடியாது. - யோவா 16:22
* சீடர்களோ தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு மகிழ்ச்சியில்          திளைத்திருந்தார்கள். - திப 13:52
* ஓர் உறுப்பு துன்புற்றால் அதனுடன் மற்ற எல்லா உறுப்புகளும்         சேர்ந்து துன்புறும். ஓர் உறுப்பு பெருமை பெற்றால் அதனுடன்                  எல்லா உறுப்புகளும் சேர்ந்து மகிழ்ச்சியுறும். - 1 கொரி 12: 26


* தூய ஆவியின் கனியோ அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை. ‡கலா 5:22

மத்தேயு நற்செய்தியாளர் காட்டும் மகிழ்ச்சி 

வாழ்வு நெறி முறைகள்:

புனித மத்தேயு நற்செய்தியாளர் நமது வழிபாட்டுக்கும், வாழ்வின் மகிழ்ச்சிக்கும் இறுதியாக, விண்ணக வீடு பேற்றினை அடைவதற்கான வாழ்வியல் நெறிமுறைகளை 5,6,7 ஆகிய அதிகாரங்களில் சுட்டிக் காட்டுகின்றார்.
1. நாம் பேறுபெற்றவர்களாக வாழ்வதற்கான எட்டு அழைப்புகள் (மத் 5:3‡16)
2. கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கும் ஆறு விதமான நன்மைத்            தனங்கள் (மத் 5:17-48)

3. கடவுள் விரும்பும் மூவகை பக்திநெறிகள் (மத் 6:1‡18)
4. கடவுள் விரும்பும் பணி (மத் 6:19-29)
5. கடவுள் எதிர்பார்க்கும் நம்பிக்கை (மத் 6:25-34)
6. நமக்கு அடுத்திருப்பவரை நடத்தும் முறை (மத் 7: 1-12)
7. நமது அழைப்புக்கேற்ற வாழ்வு (மத் 7:13-27)
       
 நாம் வாழும் முறை நம் உள்ளத்திலும், மனித உறவிலும் சமூகத்திலும் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். அதுவே கிறிஸ்து வழங்கும் மகிழ்ச்சியாக அமையும். 

பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள் இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசுகின்றார் (எபி 1:1,2). திருப்பலி, அருள் அடையாளக் கொண்டாட்டங்கள், திருப்புகழ்மாலை ஆகிய அனைத்தும் நிறை மகிழ்வினை நமக்குக் கொணரும் என்பது திண்ணம்.

 திருத்தந்தை பிரான்சிஸ் : 

‘சன்னல்களைத் திறந்து விடுங்கள், புதிய காற்று உள்ளே வரட்டும்’ என்றுரைத்து திருத்தந்தை 23 ஆம் யோவான் இரண்டாம் வத்திக்கான் பேரவையினைத் தொடங்கி வைத்தார். இதன் பின்னரே திரு அவை பற்றிய சரியான புரிதல் உலக அரங்கில் ஏற்பட்டது. மனம் இறங்குபவரே உண்மையான நேர்மையாளர் (திபா 37:21) என்னும் தொனியோடு 2013 ஆம் ஆண்டு நேர்மையாளர் புனித யோசேப்பு விழாவன்று திரு அவையின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார் பிரான்சிஸ். இவர் மானுடம் தனது இதயங்களைத் திறக்க வேண்டும் என்பதனை தனது முழக்கமாக்கி வருகின்றார். மேற்காணும் சிந்தனைதான் இவரின் சுற்று மடல்களிலும், திருத்தூது  ஊக்க உரைகளிலும் மையமாக உள்ளது. இரக்கமுள்ள அன்பில் நம்பிக்கை வைத்துச் செயல்பட நம்பிக்கையின் ஒளி  என்னும் சுற்று மடல். இயற்கை இறைவனின் கொடை. அதை அன்பு செய்து பராமரிப்பது நமது கடமை என்பதனைச் சுட்டிக் காட்டும் இறைவா உமக்கே புகழ்  என்ற சுற்று மடல். நற்செய்தியின் மகிழ்ச்சி  என்னும் திருத்தூது  ஊக்க உரை. இரக்கம் உள்ளவராய் வாழ்வதே உண்மையான நற்செய்திப் பணி என்னும் கருத்தியலை வலியுறுத்துகிறது.

இரக்கத்தின் முகம் என்ற ஆணை மடல். இதன் மூலம் இரக்கம் என்பது தந்தையின் செயல்பாடு மட்டுமன்று. அவருடைய உண்மைப் பிள்ளைகள்  யார் என்பதை உறுதிப்படுத்தும் அளவுகோலாகவும் அது உள்ளது. (எண்:9) போன்ற செயல்பாட்டுச் சிந்தனைப் பெட்டகம். குடும்ப வாழ்வு எங்கெல்லாம் நிறைவுற்று, மகிழ்ச்சியிலும், அமைதியிலும் குறைவுற்று உள்ளதோ அங்கெல்லாம் பரிவிறக்கம், உறவு நெருக்கம் ஆகியவற்றின் மூலம் இறையன்பினைச் சுவைத்து  அந்த அன்பினை இயற்கையிலும், மானுடம் முழுமையிலும் குறிப்பாகக் குடும்ப வாழ்விலும் வெளிப்படுத்திடல் வேண்டும். இந்தக் கருத்து திருத்தந்தையின்  அன்பின் மகிழ்ச்சி  என்னும் திருத்தூது ஊக்க உரையின் வழியாகத் தெளிவாக்கப்படுகின்றது.

 பொது நிலையினரின் ஈடுபாடு:

பொது, பொதுமை - சமத்துவத் தன்மை. நில் என்ற வார்த்தையிலிருந்து எழும் நிலை. நிலைத்த என்னும் பொருள். ஆக பொது நிலையினர் என்ற சொல்லுக்கு சமத்துவத்தில் நிலையாயிருப்போர் என்று அர்த்தமாகும். இதன் பின்னணியில்தான் பொது நிலையினர் என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது.  நமது மறை மாவட்டத்தில் பங்குப் பேரவை, நிதிக்குழு போன்றவையும் பொது நிலையினரின் ஈடுபாட்டினை அதிகரிக்கும் விதமாக அன்பியங்கள் பக்த சபைகள் போன்ற அமைப்புகளும் அதிகம் உருவாக்கப்பட வேண்டும். ஏனெனில் இறைமக்களே திருச்சபை. மக்களைக் கொண்டு, மக்களாலே, மக்களுக்காகச் செயல்படும் திருச்சபையாக நமது திருச்சபை மாற்றம் காண வேண்டும்.

அருள் வாழ்வு ஊற்றெடுக்கும் குடும்பம்:

மனிதர், தான் உணரும் தனிமையைப் போக்கக் கூடிய தனக்குத் தகுந்த துணையைத் தேடியதாக
விவிலியம் கூறுகிறது (தொநூ 2:18 ‡20). அவன் பெறும் உயர்ந்த கொடையாக அவனுடைய ஏற்ற துணை கருதப்படுகின்றார் (சீஞா 36:24).  இருவரும் இணைந்து உருவாக்கும் குடும்பத்தில் அவர்கள் உடலும், உள்ளமும் நெருக்கமாய் இருப்பது போன்று இணக்கத்துடன் இருப்பார்கள். இவ்வாறு அவர்கள் ஓருடலாய் மாறுகின்றனர். குடும்பத்தில் பெற்றோர் அடித்தளம் என்றால் குழந்தைகள் அக்குடும்பத்தின் உயிருள்ள கற்கள் போன்றவர்கள். இவர்கள்தான் குடும்பத்தின் தொடர்ச்சியான அடையாளமாக உள்ளார்கள்.

திருமணத்தைப் பிள்ளை பேற்றுடன் மட்டுமே இணைத்துப் பார்ப்பது தவறு. திருமணத்தின் முறிவுபடாத் தன்மையை தங்கள் மீது சுமத்தப்பட்ட நுகத்தடியாகத் தம்பதியர் கருதலாகாது. உண்மையான அழகு என்பது உடல் சார்ந்த அல்லது மனம் சார்ந்த கவர்ச்சியிலிருந்து வேறுபட்டது. அது அடுத்தவரின் புனிதத்தைப் போற்றச் செய்வது. அதனால் இல்லறத்தில் மகிழ்ச்சி ததும்பிட நன்றி - தயவு செய்து  - வருந்துகின்றேன் ஆகிய வார்த்தைகள் அவசியம் தேவை.
குடும்பம்தான் சமுதாயம் சார்ந்த செயல்பாடு களுக்கான முதன்மைக் களம். தொழில் நுட்ப வளர்ச்சியின் வேகத்தால் ஆதிக்கம் செய்யப்படுகின்ற நமது காலச் சூழலில் விமர்சனப் பார்வையோடு விழுமியச் சிதைவுகள் இன்றி பிள்ளைகள் வளர்க்கப்பட வேண்டும். மேலும் இல்லம் என்பது இறை நம்பிக்கையின் பொருளையும், அழகையும் பாராட்டவும், இறைவேண்டல் செய்திடவும், அடுத்தவர் களுக்குத் தொண்டாற்றிடவும் கற்றுக் கொடுக்கும் இடமாக அமைய வேண்டும்.

மகிழ்ச்சி நிறை குடும்பமே, மகிழ்ச்சி நிறை சமுதாயம் படைக்கும். அதனைப் போன்றே மகிழ்ச்சி நிறை குடும்பமே. திருச்சபையின் மகிழ்வு.

No comments:

Post a Comment

Ads Inside Post