வெற்றி உங்கள் கையில்
அருட்திரு. எஸ். ஜான் கென்னடி
கடந்த ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாடு முழுவதும் ஒலித்த வார்த்தை “TET” (Teachers Eligibility Test) (ஆசிரியர் தகுதித்தேர்வு). ஒருவர் D.TEd மற்றும் B.Ed முடித்திருந்தாலும் TED தேர்வில் குறிப்பிட்ட மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றால்தான் ஆசிரியர் ஆவதற்கான தகுதியை அவர் பெறுகிறார். “தகுதி” என்கிற வார்த்தை ஆசிரியப் பணி செய்வதற்காக மட்டுமல்லாமல் எந்த துறையில் வேலைக்கு சென்றாலும் தகுதி என்பது முக்கியமான ஒன்றாக அமைகிறது. குழந்தைகள் Pre KG, LKG, UKG என்கிற நிலைக்கு படிக்கச் செல்லும்போது தகுதி தேவைப்படுகிறது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிப்பதற்கும் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிப்பதற்கும், தகுதி தேவைப்படுகிறது. கல்லூரி படிப்பை தொடர்வதற்கும், வேலைவாய்ப்பினை பெறுவதற்கும் தகுதி என்பது இன்றியமையாத ஒன்று. பதவி உயர்விலும் தகுதி என்பது தேவையானதாக இருக்கிறது. இப்படி தகுதி என்பது நம் வாழ்வில் எல்லா நிலைகளிலும் தேவைப்படுகிறது. தகுதி என்ற மூன்றெழுத்தில் மூன்று முத்தான வாழ்க்கை தத்துவம் அமைந்துள்ளது.
த’என்பது தன்னம்பிக்கையை குறிக்கிறது.
கு’என்பது குறிக்கோளை குறிக்கிறது.
தி’என்பது திறமையை குறிக்கிறது.
ஒருவர் தன்னம்பிக்கையோடு குறிக்கோளை நோக்கி தேவையான அளவு திறமையோடு பயணித்தால் வெற்றியை பெறலாம். ஆகவே வெற்றியை அடைய தகுதி மிக மிக முக்கியமானதாகும். அமெரிக்கா நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் இந்திய நாட்டிற்கு வருகை தந்தபோது நிருபர்கள் அவரிடம் “பலர் உங்களோடு புகைப்படம் எடுக்க ஆசைப்படுகிறார்கள். நீங்கள் யாருடன் இணைந்து புகைப்படம் எடுக்க விரும்புகிறீர்கள்?” என்று கேட்டபொழுது, “இந்திய நாட்டின் இளைஞர்களை ஒட்டுமொத்தமாக தூக்கி பிடித்து வழிநடத்தும் A.P.J அப்துல்கலாம் அவர்களோடு எடுக்க விரும்புகிறேன்” என்று அவர் கூறினார். பாருங்கள்! இந்திய மக்களின் மனதில் இடம்பிடித்த மறைந்த மாமனிதர் அப்துல்கலாம் அவர்களின் தகுதிதான் பில்கிளிண்டனை இவ்வார்த்தைகளை சொல்லவைத்தது. கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டபொழுது அப்துல்கலாமை பார்த்து ஒரு மாணவன் கேட்ட கேள்வி, “வாழ்வில் வெற்றிபெற என்னசெய்ய வேண்டும்?”. அதற்கு அப்துல்கலாம் சொன்ன பதில் “If you want to be successful, don’t chase success. Chase EXCELLENCE, success will automatically follow you” வெற்றி பெற வேண்டுமென்றால் அதற்கான தகுதியின் உச்சத்தைத் தொட்டால், தானே ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும். ஆம் தகுதியை வளர்த்துக்கொண்டால் வெற்றி தானாக தேடி வரும். மதுரை தமிழ்ச்சங்கம் சிறுவர்களுக்கான கவிதைப்போட்டி ஒன்றை நடத்தியது. அதல் மூன்றாம் பரிசுக்கு கிடைத்த கவிதையின் வரிகள் இதோ,
“செந்தமிழ் நாடென்னும் போதினிலே - இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே”. நீங்கள் கவிஞரை கண்டுபிடித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆம்! மூன்றாம் பரிசை பெற்றவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். முதல் பரிசு, இரண்டாம் பரிசு பெற்றவர்கள் பற்றி இப்போது யாரும் பேசுவது இல்லை. யாருக்கும் தெரியாது. ஆனால் பாரதியார் மூன்றாம் பரிசைப்பெற்றாலும் தனது தகுதியை வளர்த்துக்கொண்டார். நம் உள்ளங்களைக் கொள்ளைக்கொண்டார். வெற்றியையும் தக்கவைத்துக் கொண்டார். சில சமயங்களில் நமக்கு ஒரு சந்தேகம் எழலாம். தகுதி இல்லாதவர்கள் வெற்றி பெறுகிறார்கள், தகுதி உள்ளவர்களால் வெற்றிபெற முடியவில்லையே என்று. ஆனால் உண்மை என்னவென்றால் தகுதியில்லாதவர்கள் வெற்றி பெறலாம். ஆனால் அதை தக்கவைத்துக் கொள்ள முடிவதில்லை. தகுதி உள்ளவர்களால் மட்டுமே வெற்றியை தக்கவைத்துக் கொள்ளமுடியும். அனைத்து வெற்றியாளர்களின் வாழ்வை சீர்தூக்கிப்பார்த்தால் இந்த உண்மை புலப்படும். அன்பு வாசகர்களே! நீங்களும் உங்கள் வாழ்வில் தகுதியை வளர்த்துக்கொண்டு வெற்றியை தக்கவைத்துக்கொள்ள வாழ்த்துகிறேன்!.
No comments:
Post a Comment