ஜுலை மாதப் புனிதர்கள்
அருட்சகோதரி.G. பவுலின்மேரி FSAG
ஜுலை -3 புனித தோமா - திருத்தூதர்
தோமாவின் நம்பிக்கைக் குறைவு உயிர்த்த கிறிஸ்துவின் முன் மறைந்து போனது. ‘என் ஆண்டவரே, என் கடவுளே’ என்று திருச்சபையின் பாஸ்கா நம்பிக்கையை அறிக்கையிட்டார். நற்செய்திகளில் உள்ள சில குறிப்புகளைத் தவிர, இவரின் வாழ்க்கையைப் பற்றி எதுவும் உறுதியாகத் தெரியவில்லை. தோமா இந்திய மக்களுக்கு நற்செய்தியைக் கொண்டு வந்தார் என்ற ஆழ்ந்த பாரம்பரியமுண்டு. ஜுலை 3இல் திருத்தூதரின் சடலம் எடெசாவுக்குக் கொண்டு வரப்பட்டதாக நினைவுகூர்ந்து கி.பி.6 ஆம் நூற்றாண்டு முதல் இவரை நினைத்து விழா கொண்டாடி வருகின்றனர்.
ஜுலை - 6 புனித மரியகொரற்றி - கன்னியர், மறைசாட்சி
இப்புனிதை இத்தாலியில் அன்கோனா என்னுமிடத்தில் கி.பி 1890 இல் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து, தம் இளமைப்பருவத்தை வறுமையில் கழித்தார். வீட்டு வேலைகளில் அன்னைக்கு உதவியாயிருந்தார். இயல்பாகவே இறைபற்றுடையவர். இறைவேண்டலில் விடாமுயற்சி உடையவர். 1902இல் ஜுலை 6 ஆம் நாள் தன்னைக் கெடுக்க வந்தவனிடமிருந்து தம் கன்னிமையைக் காத்துக் கொண்டார். பாவம் செய்வதிலும் சாவது மேல் எனத் துணிந்ததால், கத்தியால் பலமுறை குத்தப்பட்டு இறந்தார்.
ஜுலை - 11 புனித ஆசீர்வாதப்பர் (480-542)
இத்தாலி நாட்டில் உம்பிரியாப் பகுதியில் நோர்சியா என்னும் இடத்தில் கி.பி.480இல் பிறந்தார். உரோமையில் கல்வி கற்றார். உலகத்தை துறந்து சுபியாக்கோ என்னும் மலையில் இருந்த ஒரு குகையில் தவம் செய்வதும், ஜெபித்தும் வாழ்வு நடத்தினார். இதைக்கண்டு பலர் சீடராயினர். அவர்களுக்கு ஒரு மடத்தை துவங்கி சட்டங்களையும் இயற்றித் தந்தார். மோந்தே கஸினோ என்னுமிடத்தில் ஒரு மடம் துவங்கினார். அவர் எழுதிய சட்டங்கள் புகழ் பெற்றன. 24 திருத்தந்தையர்களையும், 5000 க்கும் மேற்பட்ட புனிதர்களையும் இவரது சபை திருச்சபைக்கு தந்திருக்கிறது. இவர் நற்கருணை உட்கொண்டு பீடத்தின் முன்னின்று கரங்களை உயர்த்தி ஜெபித்துக் கொண்டிருந்த வேளையில் உயிர் துறந்தார்.
ஜுலை - 16 புனித கார்மேல் அன்னை
கார்மேல் மலையிலே புனித கன்னிமரியாளின் நினைவாக முதல் ஆலயம் அர்ப்பணிக்கப்பட்டது. 1251இல் கார்மேல் சபையின் பெரிய தலைவரான புனித சீமோன்ஸ்தோக் என்பவருக்கு இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் என்னுமிடத்தில் மரியன்னை காட்சி கொடுத்ததாக பாரம்பரியம். அக்காட்சியில் நம் விண்ணக அன்னை உத்தரியத்தைக் காண்பித்தாள். இதை அணிபவர்களுக்கு விண்ணகக் கொடைகளையும், தனது பாதுகாப்பையும் அளிப்பதாக அன்னை உறுதி கூறினாள். ஒரு குரு உத்தரியத்தை மக்களுக்கு அளிக்க வேண்டும். உத்தரியத்தை வெறுமனே அணிந்தால் போதாது. உண்மையான கிறிஸ்தவ வாழ்வு வாழ வேண்டும். இன்று கார்மேல் சபையினரின் மிக முக்கியமான விழாவாகும்.
ஜுலை - 22 புனித மதலேன் மரியாள்
கலிலேயா நாட்டிலுள்ள மக்தலா என்னும் ஊரைச் சேர்ந்தவள். நற்செய்தி யில் காணும் பாவியான பெண்ணும், இயேசுவின் சிலுவையின் அடியில் நின்றவளும் இவளே. இயேசு தனக்குச் செய்த உதவிகளுக்கு நன்றியாக, சாகும்வரை அவருக்கு சேவை செய்து வந்தாள். உயிர்த்த இயேசுவைக் காணும் வரை அவள் ஓய்வெடுக்க வில்லை. “அவரை எங்கே வைத்திருக்கிறீர்கள்? நான் அவரைத் தூக்கிக் கொண்டு செல்வேன்” என்ற வார்த்தைகள் அவளின் அன்பைக் காட்டுகிறது. இவளை யூதர்கள் நாடு கடத்தினார்கள். இவள் சில சீடர்களுடன் பிரான்ஸ் நாட்டை அடைந்தாள் என்று பாரம்பரியம் கூறுகின்றது.
ஜுலை - 25 புனித யாகப்பர் -திருத்தூதர்
கலிலேயாவிலுள்ள பெத்சாயிதா என்ற ஊரில் செபதேயு, சலோமே இவர்களின் மகனாகப் பிறந்தார். யாகப்பரையும் அவரின் தம்பி யோவான் இருவரையும் இயேசு அழைத்தார். வலைகளையும், தந்தையையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின் சென்றார்கள். பேதுருவுக்கு புதுமையாக ஏராளமான மீன்கள் அகப்பட்ட போதும், திருமுழுக்கு யோவானின் சீடரான போதும், பேதுருவுவின் மாமியாரை குணப்படுத்திய போதும், இன்னும் பல நேரங்களில் இயேசுவின் அருகிலிருந்தார். “இடியின் மக்கள்” என்று ஆண்டவர் இவர்கள் இருவருக்கும் பெயரிட்டிருந்தார். பரிசுத்த ஆவியை பெற்றப்பின் ஸ்பெயின் நாட்டில் நற்செய்தி அறிவித்து எருசலேமுக்குத் திரும்பினார். 44இல் ஏரோது அகிரிப்பாவால் தலை வெட்டப்பட்டு இறந்தார் என்பது பராம்பரியம்.
ஜுலை - 26 புனித சுவக்கின் அன்னம்மாள் - தூய மரியாளின் பெற்றோர்
புனித அன்னம்மாள் பெத்லகேமில் பிறந்து, நாசரேத்தில் வாழ்ந்த சுவக்கின் என்பவரை மணந்தாள். இருவரும் தாவீது அரசரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நெடுங்காலமாக குழந்தை இல்லாமல் பின்பு மரியாள் பிறந்தாள். 3 வயது ஆனதும் தேவலாயத்திற்குச் செல்லும்படி அவளை கடவுள் அழைத்தார். தியாக குணம் படைத்த பெற்றோர் குழந்தையை அர்ப்பணம் செய்தார்கள். தொடக்கத்திலிருந்தே அன்னம்மாளுக்கு ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. 4 ஆம் நூற்றாண்டில் புனித சுவக்கீன் நினைவாக எருசலேமில் ஓர் ஆலயம் அமைக்கப்பட்டது. சுவக்கீன் என்றால் ஆண்டவரின் தயாரிப்பு என்றும், அன்னா என்றால் இறைவனது அருள் என்றும் பொருள்படும்.
ஜுலை - 31 புனித லொயோலா இஞ்ஞாசியார் (மறைப்பணியாளர்)
இப்புனிதர் ஸ்பெயினில் கன்டாபிரியாப் பகுதியில் லொயோலா என்னுமிடத்தில் கி.பி.1491 ஆம் ஆண்டில் பிறந்தார். அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இராணுவத் திலும் பணியாற்றி னார். பின்பு சண்டையில் கால் உடைந்து போன வேளையில் இறைவனிடம் மனந்திரும்பி, பாரீஸ் நகரில் இறையியல் படித்து முடித்தார். தம்முடன் சில தோழர்களையும் கூட்டிச் சேர்த்தார். பின்பு உரோமையில் இவர்களை ஒரு சபையினராக (இயேசு சபை) அமைத்தார். இப்புனிதர், நூல்கள் எழுதியும் சீடர்களைப் பயிற்றுவித்தும் மிக நற்பயனுள்ள திருத்தூதுப்பணி புரிந்தார். திருச்சபையின் சீரமைப்பில் இவரின் சீடர்கள் சிறப்பான பங்கெடுத்தார்கள். 1556 ஆம் ஆண்டு சூலை 31 ஆம் நாள் இப்புனிதர் உரோமையில் உயிர் நீத்தார்.
No comments:
Post a Comment