பொதுக்காலம் 17 ஆம் வாரம்
30-07-2017
1 அரச 3:5,7-12; உரோ 8:28-30; மத் 13:44-32
2007 ஆம் ஆண்டு 1839இல் செய்யப்பட்ட முதல் கேமராவை 4 கோடியே 65 லட்சத்திற்கு ஏலத்திற்கு எடுத்திருக்கிறார்கள். 1963 இல் எனக்கு 12 வயது ஒருமுறை என் தந்தை 100 ஐ கொடுத்து, பக்கத்திலுள்ள பெரிய ஊரில் பொருள்கள் வாங்கி வர அனுப்பினார். அந்த கடையில் புதிதாய் அழகான டைம்பீஸ் வைத்திருந்தார்கள். அதனை விற்பதற்காக அல்ல. தங்களின் கடைக்காக வாங்கியிருந்தார்கள். எனக்கு அந்த டைம்பீஸ் மிகவும் பிடித்து விட்டது. எனவே மற்றப் பொருள்களை வாங்காமல் அந்த கடிகாரத்தை வாங்கி வந்தேன். என் தந்தைக்கும் என் தாய்க்கும் அந்த கடிகாரத்தை மிகவும் பிடித்து விட்டது. மற்ற பொருள்களை வாங்காமல் நான் வாங்கி வந்ததைப் பாராட்டினார்கள். மகிழ்ந்தார்கள். பிறகு அதனை நல்ல விலைக்கு விற்றோம்.
இன்றைய நற்செய்தியில், தான் கண்டுபிடித்த புதையலை ஓடிச் சென்று மகிழ்ச்சியுடன் தமக்குள்ள யாவற்றையும் விற்றுவிட்டு, புதையல் உள்ள நிலத்தை வாங்கிக் கொள்கிறார். அதே போன்று, நல்ல முத்தைக் கண்ட வியாபாரியும், தனக்கு உள்ள யாவற்றையும் விற்றுவிட்டு அந்த முத்தை வாங்கிக் கொள்கிறார். இந்நிகழ்ச்சிகளில் நாம் காண்பது, பெரிய நன்மையைப் பெறுவதற்கு சிறிய நன்மைகளை விட்டுக் கொடுக்கின்றார்கள். இந்நிகழ்ச்சிகளைப் போன்றது விண்ணரசு என்கிறார் இயேசு. விண்ணரசு அனைத்திலும் உயர்ந்தது. அதற்கு முதலிடம் தர வேண்டும் என்கிறார். செல்வந்தரான ஒரு வாலிபர் இயேசுவைப் பின்பற்ற விரும்பியபோது, உனது செல்வங்களையயல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுத்து விட்டு என்னை பின்செல் என்றார் (லுக் 18.22-24).
முதல் வாசகத்தில், சாலமோன் இறைவனிடம் உலக செல்வங்களை விட மக்களுக்கு நீதி வழங்கவும், நன்மை தீமை பகுத்தறியவும் தேவையான ஞானம் நிறைந்த உள்ளத்தைத் தாரும் என்று வேண்டினார். இறைவனும் மகிழ்ந்து அந்த வரத்தை அளித்தார்.
இரண்டாம் வாசகத்தில், பவுல் அடிகளார், கடவுளிடம் அன்பு கூர்பவர்களோடு அதாவது அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு, அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார் என்று விளக்குகிறார். இறைவனிடம் சேர்பவர்கள் உயர்ந்த நிலையினை பெற்றுக் கொள்கிறார்கள். உலகச் செல்வங்கள்தான், நம்மை மிகவும் கவர்ந்திழுக்கின்றன. அதற்குதான் முதலிடம் தருகிறோம். விண்ணரசின் மதிப்பீடுகளை நம்முன் வைத்தால், விண்ணக மகிழ்வை இப்போதே நாம் அனுபவிப்போம்.
அண்ணன், தம்பி இருவர். இவர்கள் வேறுபட்ட பண்புள்ளவர்கள். அண்ணன் பொருள்கள் சேர்ப்பதிலே ஒரே கண்ணும் கருத்துமாயிருந்தார். உறவுகளையயல்லாம் மறந்தார். தம்பி தாராள எண்ணத்துடன் மற்றவர்களுக்கு உதவி செய்து வந்தார். கடைசியில் அண்ணனின் சொத்துக்களைப் பிரித்துக் கொள்வதில் பிள்ளைகள் போட்டி போட்டுக் கொண்டு, அண்ணனை அநீதி செய்து விட்டதாக ஒதுக்கி வைத்தார்கள். யாருடைய உதவியுமின்றி அனாதையைப் போல் இறந்தார். தம்பி, எந்தக் குறையும் இல்லாமல் உறவகளுடன் மகிழ்ந்து, வாழ்ந்து, வாழ்வை நிறைவு செய்தார்.
இறைவனுக்கே முதலிடம் என்று சேக்கிழார் இவ்வாறு பாடுகிறார்.
நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும்
மென்றாலும் துயின்றாலும் விழித்தாலும் இமைத்தாலும்
மன்றாடும் மலர்ப்பாதம் ஒருகாலும் மறவாமை
குன்றாத உணர்வுடையார் தொண்டராம் குணமிக்கார்.
No comments:
Post a Comment