பொதுக் காலம் - 12 வது வாரம்
25-06-2017
எரே 20:10-13; உரோ 5:12-15; மத் 10:26-33
அருட்பணி. இ, அந்தோனிதாஸ்
படைத்த கடவுளை 3 நிமிடம் பிராதிக்க ஒதுக்க முடியாத பலர் எதுவுமே புரியாத படம் பார்க்க 3 மணி நேரம் ஒதுக்க முற்படுகின்றனர். உள்ளத்தளவில் கடவுளை உணர்ந்து, உலகளவில் அதை வாழ்ந்து காட்ட இன்றைய வாசகங்கள் நம்மை அழைக்கின்றன.
எத்துணை இடர் வந்தாலும் உண்மையை உணர்ந்தால், அதனை வாழ்ந்தால் இறை நம்பிக்கை என்ற இறைகரம் நம்மை மீட்கும் என்பதை இன்றைய முதல் வாசகம் எடுத்துரைக்கிறது. ஏன் சொந்த மக்களே எரேமியாவை எதிர்கிறார்கள்? அவர் வாழ்ந்த காலத்தில் இஸ்ராயேல் பாபிலோனுக்கு அடிமை நாடாக இருந்த காரணத்தினால் கப்பம் கட்ட வேண்டிய நிலையில் இஸ்ராயேலர் இருந்தனர். இதை எதிர்ப்பதற்காக எகிப்துடன் இணைக்கின்றனர். ஆகவே எரேமியா எகிப்துடன் அவர்கள் இணைவதையும், அதன் வழியாக அடையபோகும் அழிவை எடுத்துரைப்பதனால்தான் அவர்கள் அவரை கொல்ல முடிவெடுக்கிறார்கள். எகிப்துடன் சேர்வதால் யயருசலேம் நகரம் அழிக்கப்பட்டு“பரதேச வாழ்வு” வாழ்வீர் என்று எச்சரிக்கிறார் ஏரேமியா. பரதேச வாழ்வு என்பது அனாதை வாழ்வு. ஆலயம் இல்லா வாழ்வு, அரசன் இல்லா வாழ்வு, சொந்த இடம் இல்லா வாழ்வு. அவர்கள் வாழ்வில் நடைபெற போகிற தீமைகளை எடுத்துரைத்தபோது அதை ஏற்க அவர்கள் தயாராக இல்லை. உண்மை கசப்பாக இருக்கிறது. ஆகவே அவரை சிறையில் அடைத்து, துன்புறுத்துகின்றனர். விவிலிய வரலாற்றிலேயே இறைவாக்கினர் எரேமியாதான் அதிகமாக துன்புறுத்தப்படுகிறார். இன்று பலர் சொல்வதை நாம் கேள்விபடுகிறோம். ‘என்னுடைய சொந்த பந்தங்கள், நான் நேசித்தவர்கள், என்னை ஏமாற்றிவிட்டார்கள். என் வளர்ச்சியை தடுக்கிறார்கள் என்று புலம்புவதை நாம் கேட்கிறோம்’. இறைவனால் தேர்ந்து கொள்ளப்பட்ட, அழைக்கப்பட்ட, எரேமியா இறைவாக்கினரையே அவரின் சொந்த மக்களே அவரை கொல்லும் போது, நம்முடைய இனம், நம்முடைய மக்கள் நம்மை எதிர்ப்பதோ, நம் வளர்ச்சியை தடுப்பதோ புதிதல்ல என்பதை நாம் உணர வேண்டு. இறை நம்பிக்கையை நாம் கொண்டிருக்கும் போது இறைவனின் துணை நம்மை வழிநடத்தும், நம்மை காப்பாற்றும் என்பதை எரேமியாவின் வாழ்வின் வழியே நாம் கற்றுக் கொள்கிறோம் (எரே 20:13). பாவத்தையும் அதன் விளைவு யாவையும் கொண்டு வந்தான் ஆதாம். புதிய ஆதாயமாகிய கிறிஸ்து மீட்பையும் அதன் வழியாய் வாழ்வையும் கொண்டு வந்தார்.
“ஆதாமா” என்றால் மண் என்பது பொருள். ஆகவே மண்ணிலிருந்து வந்ததால் அவன் ஆதாம் என்றழைக்கப்பட்டான். “கிறிஸ்து” என்றாலே அபிஷேகம் செய்யப்பட்டவர் என்பது பொருள். ஆகவே அந்த கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் மீட்பு பெறுவர். இறைவனோடு நெருங்கி தொடர்பு கொண்டு பகிர்ந்து வாழ அழைக்கப்பட்ட மனிதர், இறை தொடர்பை பாவத்தின் பலனால் துண்டித்துக் கொள்கிறார். இதுதான் உண்மையான சாவு. ஆனால் இறை உறவு இல்லாத வாழ்வு செத்த வாழ்வு. ஆகவே பாவம் செய்தாலும் இறை உறவை விட்டு விலகாத போது, இயேசு சொன்ன மீட்பு எல்லாருக்கும் உண்டு என்று பவுலடியார் இன்றைய 2 ஆம் வாசகம் வழியாக அழைக்கிறார்.
‘உண்மைக்கு சான்று பகிரவே வந்தேன்’ என்ற ஆண்டவர், அதன் விளைவாக , தன் உயிரையே தந்தார். உண்மையை எடுத்துரைத்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை வெறும் வார்த்தைகளால் அல்லாத வாழ்வால் காட்டுகிறார். இன்றைய நற்செய்தி பகுதியில் துணிவிற்கு எதிரான அச்சத்தைக் குறியிட்டு காட்டுகிறார் இயேசு.
“அஞ்சவேண்டாம்” என்று மூன்று முறை இன்றைய நற்செய்திபகுதியில் கூறப்படுகிறது. பயம் என்பது தீமை வரப்போகிறது என்ற பதற்ற உணர்வு. உடலைக் கொல்லக் கூடியவர்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம். அனைவருக்கும் அனைத்தையும் தரும் இறைவன் அருகில் இருக்கிறார். எனவே தீமைகள் நம்மை தாக்காது. பய உணர்வு, உடல் நலத்தையும் தாக்கும். தென் அமெரிக்காவில் 1946 ஆம் ஆண்டு ஒரு வதந்தி பரவியது. அந்த ஆண்டு, பெரிய பஞ்சம் வரப் போகிறது என்பது வதந்தி. ஆனால் பயிர்கள் நன்றாக வளர்ந்து வந்தன. இந்த வதந்தியை நம்பி 20000 விவசாயிகள் தங்களின் கிராமங்களை விட்டு நகரங்களுக்கு சென்றார்கள். அதனால் பயிர்கள் காய்ந்து, உண்மையாகவே பஞ்சம் ஏற்பட்டது.
“வாழ்வைப் பற்றிய பயம்தான் சாவை பற்றிய பயத்திற்கு அழைத்து செல்கிறது. நிறைவாழ்வு வாழ்பவர்கள், சாவைப் பற்றி பயம் கொள்ளமாட்டார்கள்” - மார்க் டுவைன்
“புயலைப் பற்றி பயமில்லை. ஏனென்றால் என் படகை எந்நிலையிலும் சரியாக ஓட்ட கற்றிருக்கிறேன்.” - லூயிசா மே அல் கோப்.
2 மக் 7 ஆம் அதிகாரத்தில் விசுவாசத்தை காக்க 7 பிள்ளைகளோடு தானும் வாளுக்கிறையான வீர பெண்மணியன் விசுவாசமும், சொந்த மக்களின் எதிர்ப்புகிடையே உண்மையை உரைத்த எரேமியாவுடன் துணிவும், எந்நிலையில் இருந்தாலும் என்னை மீட்கும் இயேசுவின் அருள் எனக்குண்டு என்ற பவுலடியாரின் நம்பிக்கையும் நாமும் பெறுவோம்.
No comments:
Post a Comment