நவம்பர் மாதத்தின் புனிதர்கள்
- அருட்சகோ. G. பவுலின்மேரி FSAG,
கும்பகோணம்
நவம்பர் 3 புனித மார்ட்டின் தெ போரஸ்
இவர் பெரு நாட்டில் லீமா நகரில் கி.பி. 1579‡இல் ஸ்பெயினிய தந்தைக்கும், கருப்பின தாய்க்கும் பிறந்தவர். இவர் பிறந்ததும், இவரின் தந்தை தன் மனைவியையும் மகனையும் கைவிட்டுவிட்டுச் சென்றார். எனவே மார்ட்டின் ஏழைகள், துன்புற்றோர் ஆகியோரின் துயர அனுபவங்களை தன்னில் தாங்கி அதனால் ஏழைகள்மீது எல்லையற்ற அன்பு கொண்டு வளர்ந்தார். சிறுவயதில் மருந்து தயாரிக்கும் கலைபயின்றார். பின்பு தோமினிக் சபைத் துணைச் சகோதரருள் ஒருவராகி, இம்மருத்துவக் கலையை ஏழை, எளியவர்களுக்கு பெரிதும் பயன்படுத்தினார். தவமும் தாழ்ச்சியும் நிறைந்த வாழ்வு நடத்தினார். நற்கருணைமீது மிகுந்த பக்திகொண்டு விளங்கினார். இவர் லீமா நகரில் 1639இல் இறந்தார்.
நவம்பர் 4 புனித சார்லஸ் பொரோமியோ
இவர் இத்தாலியில் லம்பார்டிப் பகுதியில் அரோனா என்னுமிடத்தில் கிபி 1538இல் பிறந்தார். உரோமைய சட்டமும், திருச்சபைச் சட்டமும் படித்து பட்டம் பெற்றார். தன் தாய்மாமனான திருத்தந்தை 4ஆம் பயஸால் கர்தினாலாகவும், மிலான் நகர ஆயராகவும் நியமிக்கப்பட்டார். மந்தைக்கு ஓர் உண்மையான ஆயராகி, தம் மறைமாவட்டம் முழுவதற்கும் பலமுறை பயணம் செய்தார். குருக்களைப் பன்முறை கூட்டி ஆய்வு மன்றங்கள் நடத்தினார். மக்களின் மேய்ப்புப் பணி சார்ந்த நடைமுறைகளை முழுமையாக ஊக்குவித்து வளர்த்து 1584‡இல் இறந்தார்.
நவம்பர்9 இலாத்தரைன் பேராலய நேர்ந்தளிப்பு
மாமன்னர் கொன்ஸ்தாந்தீன் கட்டியயழுப்பிய இலாத்தரைன் பேராலய நேர்ந்தளிப்பு ஆண்டுவிழாவை கிபி 12ஆம் நூற்றாண்டிலிருந்து இந்நாளில் கொண்டாடி வந்ததாகப் பாரம்பரியம் உள்ளது. இவ்விழா முதலில் உரோமை நகர்த் திருவிழாவாக இருந்தது. பின்பு இந்தப் பேராலயம் உரோமை நகரிலும், அனைத்து உலகிலும் உள்ள ஆலயங்களுக்கெல்லாம் தாயும், தலைமையுமாகும் என அழைக்கப்பட்டது. உரோமை திருவழிபாட்டு முறையைச் சார்ந்த அனைவருக்கும் இவ்விழா பொதுவானது. புனித அந்தியோக்கிய இஞ்ஞாசியார் எழுதியுள்ளபடி பேதுருவின் அரியணை பரம அன்பு திருக்கூட்டமனைத்திற்கும் தலைமை தாங்குகிறது.
நவம்பர் 15 புனித பெரிய ஆல்பர்ட் : ஆயர் மறைவல்லுநர்
இவர் ஜெர்மனியில் தானியூப் நதிப் பகுதியில் உள்ள லாவிங்கனில் ஏறத்தாழ கிபி 1206இல் பிறந்தார். பதுவாவிலும், பாரீஸ் நகரிலும் கல்வி பயின்றார். தோமினிக்கன் சபையில் சேர்ந்து, பல்வேறு இடங்களில் கற்றுக்கொடுக்கும் பணியைச் சிறப்புற ஆற்றினார். ரேகன்ஸ்புர்க் நகர் ஆயராகத் திருநிலைப்படுத்தப்பெற்று, மக்களின் நடுவிலும், நகரங்களுக்கு இடையிலும் அமைதியை நிலைநாட்ட அயராது உழைத்தார்.அறிவு, வளர்ச்சிக்கான பல அரிய நூல்களைப் படைத்தார். இப்புனிதர் 1280இல் காலமானார்.
நவம்பர் 16 புனித மர்கரீத் (1045 - 1093) :
இவர் இங்கிலாந்து நாட்டின் அரச குடும்பத்தில் பிறந்தார். அப்பொழுது அவர் தந்தை அங்கு நாடு கடத்தப்பட்டவராய் வாழ்ந்து வந்தார். ஸ்காட்லாந்து அரசரான மால்கோம் என்பவரைத் திருமணம் புரிந்து, எட்டு குழ்தைகளுக்கு அன்னையானார். மிகச் சிறந்த மாதிரியான தாயாகவும், அரசியாகவும் விளங்கினார். கோவில்கள், துறவற மடங்களையும் இவரே கட்டினார். “அகதிகளின் அன்னை”, “ஏழைகளுக்கு வாரி வழங்குபவர்” என்றும் அழைக்கப்பெற்றாள். இவருடைய கணவர் போரில் இறந்தார். இவர் எடின்பரோவில் 1093இல் இறந்தார்.
நவம்பர் 30 புனித அந்திரேயா - திருத்தூதர்
இவர் பாலஸ்தீனாவில் பெத்சாயிதா ஊரில் பிறந்தவர். முதலில் திருமுழுக்கு யோவானின் சீடராயிருந்தவர். பின்பு கிறிஸ்துவைப் பின்பற்றினார். கிறிஸ்துவிடம் தம் சகோதரர் பேதுருவையும் அழைத்து வந்தார். (யோவா 1 : 40 ‡ 42). பிலிப்புவோடு சேர்ந்து சில கிரேக்கரைக் கிறிஸ்துவிடம் கூட்டிவந்தார் (யோவா 12 : 21 ‡ 22). தவிர, மீனும் அப்பமும் வைத்திருந்த சிறுவனை இயேசுவிடம் இப்புனிதர் சுட்டிக் காட்டினார். பெந்தகோஸ்து நிகழ்விற்குப் பின் இவர் உலகின் பல பகுதிகளிலும் நற்செய்தியைப் போதித்ததாகவும், இறுதியில் அக்கேயாப் பகுதியில் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டதாகவும் பாரம்பரியம் கூறுகின்றது.
No comments:
Post a Comment