Pages - Menu

Sunday, 30 October 2016

இரட்சணிய யாத்திரிகம், இறைவனின் பண்புகள்

இரட்சணிய யாத்திரிகம்

இறைவனின் பண்புகள்

- எம்.சி.குமார், எம்.ஏ., எம்.பில்., பி.எட்.,
விரகாலூர்

இறைவன் நீதி, கருணை, தூய்மை, அன்பு, தானாயிருத்தல், வல்லமை, அறிவு முதலிய பண்புகள் நிறைந்தவர். மேலும் அவர் குற்றமற்றவர், காமம், வெகுளி, மயக்கம் என்னும் முக்குற்றங்களையும் அழிக்கின்றவர்; பாவத்தை எரிக்கின்றவர், ஆதியும், அந்தமுமானவர் என இறைவனது பண்புகளை இரட்சணிய யாத்திரிகம் விரித்துரைக்கின்றது. அடுத்து இறைவன் பண்புகளை கலியாண குணத்து இறை என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்தி,

“நித்தியமாய்ப் பூரணமாய் நின்மலமாய் ஆனந்த நிலையமாகிச்
சத்திய ஞானந்தர்மம் தயை சாந்தம் பரிசுத்தஞ் சர்வசக்தி
இத்தகைய அனந்த கலியாண குணத்து இறை”

எனக் கூறியுள்ளது. இப்பாடலால் இறைவன், என்றும் அழியாமை, முழுமை, களங்கமின்மை, பேரானந்தம், சத்தியம், ஞானம், தர்மம், தயவு, சாந்தம், தூய்மை, சர்வசக்தி முதலான அளவற்ற கலியாண குணங்களுக்குரியவன் என்ற இறைநிலையை அறிய முடிகின்றது. இறைவனின் தன்மையைத் திரியேகத் தன்மையாகக் கருதுவது சமய உலகப் பொதுச் சிந்தனை. பல்வேறு சமயங்களிலும் திரியேகம் பற்றிய சிந்தனை உண்டு. ஆனால் வேறுபாடுடையது. கிறித்தவ சமயத்தில் இறைவன் பிதாவாகவும், குமாரனாகவும், பரிசுத்த ஆவியாகவும் உள்ளார் என்ற கணிப்பு பிற சமயங்களில் காணப்படாத தனிநிலை எனக் கூறலாம். சைவ, வைணவ சமயங்கள், இலக்கியங்கள் கூறும் திரியேகத்தைக் கிறத்தவமோ, தமிழ்க் கிறித்தவ இலக்கியங்களோ கூறவில்லை. எனினும் கிறித்தவத்தில் சொல்லப்படும் திரித்துவத்தை. திரயேகநிலையைச் சுட்ட சைவ, வைணவ இலக்கியங்கள் பயன்படுத்திய சொற்களை எடுத்தாண்டுள்ளது. இரட்சணிய யாத்திரிகம், சச்சிதானந்தம்; என்று இறைமையைக் கித்தவ சமய திரித்துவத்தோடு இணைத்துக் கூறியுள்ளது. மேலும், திரியேகதேவன், திரியேகன், திரியேகபரமன், மூவரிலொருவராம் முதல்வன் என்பன திரித்துவம் குறிக்க அவர் பயன்படுத்திய சொற்களாகும். இரட்சணிய யாத்திரிகப் பாடலொன்றில்,

“சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமியமு மிலதாய்ச்
சித்தாய் ஆனந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமே”

என வந்துள்ளமை சிறப்பாகச் சுட்டுதற்குரியது.

பிதாவாகிய இறைவன் அழிவில்லாதவராகவும், நிலைபெற்றவராகவும், உலகங்கள் யாவையும் சொல்லொன்றால் படைத்து, தமது படைப்பு நன்றென மகிழ்ந்து உலகிற்கு மீட்பை அருளுகின்ற சத்தியமும், ஞானமும், ஆனந்தமுமாக விளங்குகின்றார். அவரே எல்லாவற்றுக்கும் மூலகாரணமாகிய முதற்பொருள். இறப்பு, நிகழ்வு, எதிர்ப்பு என்னும் முப்பாகுபாடுகளையும் கடந்துநிற்பவர். வேதங்களால் அளவிட முடியாத அருட்பெருங்குணங்களும் செயல்களும் அடைந்த நல்ல தலைவன். அவர் தொடக்க காலமுதல் மெய்யான திருவாக்காகவும், ஒளியாகவும், விளங்கி இவ்வுலகத்திற்கு வந்தவரான கிறிஸ்து என்னும் தம் காதல் மைந்தனைக் கருணையால் தந்து இவ்வுலகிற்கு மீட்பை, இரட்சிப்பை புதுப்பித்து உண்டாக்கிய தந்தை எனப் பிதாவின் தன்மை சுட்டப்பட்டுள்ளது.

இறைவனாகிய குமாரன்,, கிறிஸ்து என்னும் மனித குமாரனாகப் பிறந்து, தமது திருநோக்கால், திருவாக்கால், திருவருளால், திருச்செயலால் மக்களுக்குப் பல நன்மைகள் செய்து, பாடுபட்டுச் சிலுவையில் அறையுண்டு, மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து, பிதாவின் வலப் பக்கத்தில் வீற்றிருக்கிறார் என்பது கிறித்தவ சமய நம்பிக்கை. மனித குல மீட்பானது, அவர் மனித குமாரனாக வந்ததால் கிடைத்தது. கிறிஸ்துவின் பிறப்புச் செய்தியை இரட்சணிய யாத்திரிகம்.

வானோ மகிதலமோ சுடர்மதியோ வயங்கொளிவர்வான்
மினோ விரிகடலோ மழைமுகிலோ வொருவதியில்
ஆனா நெறியமைந்தாக்கிய அகிலாண்ட அச்சுதனோர்
ஊனாடிய திருமேனி கொண்டுதிதார் உலகுவப்ப

எனக் கூறியுள்ளது.

இரட்சணிய யாத்திரிகத்தில் இடம் பெற்றுள்ள இரட்சணிய யாத்திரிகப்பாடலும் இறைமையைப் பெரிதும் வெளிப்படுத்தும் பகுதி எனலாம்.  இரட்சணிய யாத்திரிகம் கூறும் இறைமை, மனிதகுல மீட்புச் செயலில் அடங்கியுள்ளது. கிறித்தவ சமயம் மீட்பின் சமயம் என்பது இரட்சணிய யாத்திரிகத்தின் முடிந்த முடிவு. மனித குமாரனின், கிறிஸ்துவின் மனித குல மீட்பு செய்தியை,

தன்னரிய திருமேனி சதைப்புண்டு தவிப்பெய்தி
பன்னரிய பலபாடு படும்போதும் பரிந்தெந்தாய்
இன்னதென வறிகிலார் தாம் செய்த திவர் பிழையை
மன்னியுமென் றெழிற் கனிவாய் மலர்ந்தார் நம்மருள் வள்ளல்
என்றும்,

கீண்டிருப்பு முறையுடலைக் கிழித்துருவி வதைப்புண்டு
மாண்டுபடும் போதிவர்க்கு மன்னியும் என்றுரைத்த மொழி
ஈண்டிவரே உலகினுக்கோர் ரட்கசகர் என்றெடுத்துரைக்கும்
வேண்டுமாயினிச் சான்று இதை விடுத்து வேறொன்றே
என்றும் பாடியுள்ளது. 

கிறிஸ்து மரணத்தை வென்று உயிர்த்தெழுந்ததை,

இன்னதோர் அமையந்தன்னில் இருநில உலகிற்கெல்லாம்
பன்னரு நலத்த தாய் பரகதிப் பயனை ஈட்டித்
துன்னிய ஐடவியோகத் துயிலுணர் சூழ்ச்சிபோல்
உன்னத தேவமைந்தன் உயிர்தெழுந்த தருவிப் போந்தார்
எனக் கூறியுள்ளது.

பரிசுத்த ஆவியாகிய கடவுள், திருமறையின் ஒளியை மனத்தில் ஒளிவிடச் செய்து, அஞ்ஞானமாகிய இருள் விலகும்படி நீக்கி, எக்காலத்தும் ஒப்பற்ற மீட்பிற்குத் துணையாக நின்று, அடியார்களை வழிநடத்துவதே குறிக்கோளாகக் கொண்டு, எண்ணுகின்ற நற்செயல்களெல்லாம் கைகூட தம் அருட்பெருங்கருணையைத் தருபவர் எனப் பரிசுத்த ஆவியாகிய கடவுளின் தன்மையை வெளிப்படுத்தியுள்ளது. மேலும் பரிசுத்த ஆவியாகிய இறைவன் ஆற்றும் செயல்களாக ஏழு செயல்களைக் குறிப்பிட்டுள்ளது. அவை, உள்ளத்தில் உள்ள கோணலைத் திருத்துவது, மெய்பக்தி என்னும் விதையை மனத்தில் விதைப்பது, விதைத்தது முளைத்துள்ளதா எனப் பார்த்து அதற்கு அருள்நீர் பாய்ச்சுவது, துன்பங்கள் என்னும் களைகளை அகற்றுவது, வளரும் பக்தியாகிய பயிர் வாடாமல் காப்பது, பரிசுத்த ஆவியின் கனிகளை விளையச் செய்வது, தம் அடியார்களின் கூட்டத்தை வாழச் செய்வது என்பனவாம்.
“பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என இறைமையைக் கூறிய இரட்சணிய யாத்திரிகம்,

ஒன்றிலே மூன்றாய் மூன்று மொன்றதா யுலப்பிலாததாய்
நின்றுல கனைத்தும் தூயநினைவுமாத் திரையிற்தந்த
நன்றென வுவந்திரஷை நல்கு மெய்ஞ்ஞானத்தைக்
குன்றினை அகத்துத் தாங்கிச் சிந்தனை கூடி வாழ்வாம்”
என்றும், 

“தந்தையாகி உலகனைத்தும் தந்து மனுக்குள் தமைப்புரக்க
மைந்தனாகிப் புனிதாவி வடிவாய் ஞானவரமருளிப்
பந்தமற நின் றிலங்கு திரியேக பரமன் பதாம்புஜத்தைச்
சிந்தையாரத் தொழுதேத்திச் சேரவாரும் ஜெகத்தீரே”
எனவும் அழைப்பு விடுக்கின்றது.                                             தொடரும்.

No comments:

Post a Comment

Ads Inside Post