33வது வாரம் 13 : 11 : 2016
துன்பத்தில் துணை நிற்கும் இறை நம்பிக்கை
மலா 4 : 1 - 2: 2 தெச 3 : 7 - 12: லூக் 21 : 5 - 19
ஒரு சிறுமி பள்ளி ஆசிரியரிடம் தனது தாத்தாவின் வீரதீர செயல்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தாள். “என் தாத்தா பெரிய வேட்டைக்காரர். ஏகப்பட்ட புலிகளை வேட்டையாடியிருக்கிறார். ஒருதடவை காட்டுக்குப் போனபோது கூட்டமாக வந்த புலிகள் அவரைக் கடித்து கொன்றுவிட்டன” என்றாள். இதைக் கேட்ட ஆசிரியர், “நான் நம்பமாட்டேன். இதெல்லாம் ரீல்” என்றார். கோபமடைந்த சிறுமி, “அப்படின்னா நான் சொர்க்கத்திற்குப் போகும்போது, அதுபத்தி என் தாத்தாகிட்ட கேட்பேன்” என்றாள். சாமார்த்தியமான அந்த வாத்தியார், “உன் தாத்தா நரகத்திற்கு போயிருந்தா?” என்று கேட்டார். ஒரு நிமிடம் யோசித்த சிறுமி, “அப்ப நீங்க கேளுங்க” என்றாள்.
உடல் உள்ள கஷ்டம், துன்பம், வேதனைகள், சிலுவைகள் என்று, மனிதர் தாங்கள் சந்திப்பதை அவர்கள் விரும்புவதில்லை. இவைகளுக்கு மாற்று வழி உண்டா? என்று உட்கார்ந்து ஆராயும் மனிதர்கள்தான் இன்று அதிகம். அதிகபடியான துன்ப நேரங்களில்கூட, இறைநம்பிக்கை நமக்கு கைக்கொடுத்து உதவும் என்பதைத்தான் இன்றைய வழிபாடு நமக்கு சொல்கிறது.
இன்றைய நற்செய்தியில், உலக முடிவிற்குமுன் மனிதர்கள் சந்திக்கும் அச்சமூட்டும் நிகழ்வுகளை இயேசு பட்டியலிடுகிறார்.
‡ நானே அவர் எனது பெயரை பயன்படுத்துபவர் பின்னே போகாதீர்கள்.
‡ போர் முழக்கங்களும், குழப்பங்களும் ஏற்படத்தான் செய்யும்.
‡ நாட்டை எதிர்த்து நாடும், அரசை எதிர்த்து அரசும் எழும்.
‡ நில நடுக்கம், பஞ்சம், கொள்ளை நோய் ஆகியவை ஏற்படும்.
‡ அச்சுறுத்தும் பெரிய அடையாளங்கள் வானில் தோன்றும்.
‡ உங்களை துன்புறுத்துவார்கள், சிறையில்அடைப்பார்கள், கொல்வார்கள்.
‡ உடன்பிறந்தவர்கள், நண்பர்கள் உங்களை வெறுப்பார்கள், காட்டிக் கொடுப்பார்கள்.
என்றெல்லாம் சொல்லும் இயேசு இந்த துன்ப நெருக்கடியில் நமது இறைநம்பிக்கையை பலப்படுத்தும் வகையிலான வார்த்தைகளையும் கூறுகிறார்.
- உங்களுக்கு நாவன்மையையும், ஞானத்தையும் கொடுப்பேன்.
- எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும், எதிர்த்து பேசவும் முடியாது.
- மன உறுதியுடன் இருந்து உங்கள் வாழ்வை காத்துக் கொள்ளுங்கள் என்கிறார்.
லூக் 12 : 11 - 12லும், துன்பத்திற்கு உள்ளாக்கப்படும் சீடர்களுக்கு இறைவனின் தனி பாதுகாப்பு அளிக்கப்படும் என்று குறிப்பிடுகிறார். ஸ்தேவானும் (தி ப 7), பவுல் அடிகளாரும் (தி ப 21 ‡ 26) தாங்கள் கொடுமைப்படுத்தப்பட்ட நேரங்களில் மனஉறுதியுடன் தலைவர்களுக்கு பதில் மொழி தந்தனர்.
துன்ப நேரங்களில் நாம் துவண்டுவிடக்கூடாது. இறை மனித உறவுகளில் பல பிளவுகளை ஏற்படுத்தக்கூடிய மனிதர்களும், சூழ்நிலையும் மாறிமாறி நம் வாழ்வில் குறிக்கிடும்போது உடல், உள்ள பாதிப்புகளும், மன உளைச்சலும், மனத்தளர்வும் நம்மை கொடுமையாக சந்திக்கின்றன. இந்த சூழ்நிலையிலும்கூட இறைவன் நம் பக்கமிருந்து வல்லமையுடையவர்களாக நம்மை மாற்றுகிறார்.
இறைதிட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று, மனமுவந்து இவ்வுலகில் உதித்தவர் இயேசுகிறிஸ்து. அன்பையும், இரக்கத்தையும், மன்னிப்பையும், மனித நேய பண்புகளையும் உள்ளடக்கிய இறை மதிப்பீடுகளை தானே வாழ்ந்து காட்டினார். இதனால், சமூகத்தில் பல புரட்சிப் பணிகளை செய்தார் இயேசு. அவருக்கு கிடைத்த பரிசு கொடூர சிலுவை சாவு. ஆனால் இதிலும் முழுமையான பங்கெடுத்து இயேசு வெற்றி பெறுகிறார்.
துன்ப நிலைகளை சந்தித்த இயேசு, நாம் இதுபோன்ற சூழ்நிலைகளில் மனஉறுதியோடு வாழ 4 படிகளைக் கூறுகிறார்.
1. இயேசுவைப் போல நாமும் காலத்தின் அறிகுறிகளை கணிக்க கற்றுக் கொள்வோம்.
2. நமது வாழ்வைக் காத்துக் கொள்ள துன்பங்களை எதிர்கொள்ளத்தான் வேண்டும். (நீதிமன்றங்கள், சிறைகள்).
3. காலத்தின் நிறைவில், நாம் எதிர்கொள்ளும் துன்பங்களில் நாம் தனியாக இல்லை. இறைவன் நம்மோடு இருந்து, நமக்கு துணிவு அளித்து, ஞானத்தையும், நாவன்மையையும் அளிக்கிறார்.
4. வாழ்வை காத்துக் கொள்ள உலகத்தை நாம் இழக்க முன்வர வேண்டும்.
சிலுவைகளை சிம்மாசனமாக மாற்றுவது நமது கையில்தான் உள்ளது.
No comments:
Post a Comment