அனைத்து புனிதர்களின் திருவிழா
01 - 11 - 2016
திவெ 7 : 2 - 4, 9 - 14; 1 யோவா 3 : 1 - 3; மத் 5 : 1 - 12
விண்ணகத்திலுள்ள பெயர் தெரியாத அனைத்து புனிதர்களுக்கும் இன்று திருச்சபை விழா எடுத்து சிறப்பிக்கின்றது. எல்லா நாட்டையும், குலத்தையும், மொழியையும் சார்ந்த இப்புனிதர்கள் யார்? என்பதை அறிந்துகொள்ள இன்றைய நாளை திருச்சபை நமக்கு வழங்கியுள்ளது.
இறைவனுக்கும், மனிதருக்கும் உள்ள ஆழமான அன்புறவை ஏற்படுத்தும் இப்புனிதர்களின் உறவை ஞான உறவு என்று கூறும் திருச்சபை, புனிதர்களின் உறவை விசுவசிக்கின்றேன் என்ற விசுவாச படிப்பினையையும் நமக்கு கொடுத்து, இவர்களை ஜெப பரிந்துரையாளர்களாக கொடுத்திருக்கின்றது.
இன்றைய நற்செய்திப் பகுதி மலைப்பொழிவில் கூறப்படுவதைப் போல இறைவனது விருப்பத்திற்கு பணிந்து, இறையருளில் எல்லா சூழ்நிலையிலும் நிலைத்து நின்று, முற்றிலும் மன தூய்மையுள்ளவர்களாக வாழ்ந்து, இறந்த இப்புனிதர்கள் என்றென்றும் விண்ணக மகிழ்ச்சியை அனுபவிக்கும் பேறுபெறுகிறார்கள்.
ஒவ்வொரு புனிதருடைய முன்மாதிரிகையையும் நாம் பின்பற்ற அழைக்கப்படுகின்றோம். இவர்களது வாழ்வில் ஏதாவது ஒரு நற்செய்தி மதிப்பீடு இடம் பெற்றிருக்கும்.
புனிதர்களின் வாழ்வு நமக்கு ஒரு முன்னோட்டம்.
இவர்களோடு உள்ள ஒன்றிப்பு தோழமையை உருவாக்குகிறது.
இவர்களது பரிந்துரை இறை உதவியைப் பெற்றுத் தருகிறது.
தனக்காக அல்லாமல், பிறருக்காகவும், கடவுளுக்காகவும் வாழும் மனிதர்கள்தான் இந்த புனிதர்கள். இவர்கள் அனைவருமே இறைவனுக்கு சமமானவர்கள் அல்ல. புனிதர்களை நாம் வழிபடுவதில்லை, ஆராதிப்பதுமில்லை. மாறாக, அவர்களுக்கு வணக்கம் செலுத்துகின்றோம்.
திருத்தந்தை 23ஆம் யோவான் கூற்றின்படி, கத்தோலிக்க மரபின்படி புனிதர்களுக்குக் காட்டும் வணக்கம் வெறும் மரியாதை மட்டுமன்று அல்லது மன்றாட்டு மட்டுமன்று. ஆழ்ந்த அடிப்படையில் அமைந்த ஞான உறவாகும். அவர்கள் நமக்குத் தந்துள்ள விலைமதிக்கப்பெறாத முன்மாதிரிகையும், பாடமும், நமக்கு மகிழ்ச்சியூட்டும் உதவிகளாகும். எனவே, இப்புனிதர்களின் விழாவைக் கொண்டாடும் நாமும் இவர்களைப் போல புனித நிலைக்கு உயர்த்தப்படவும், இவர்களைப் போல வாழவும் திருச்சபை நமக்கு அழைப்பு விடுக்கின்றது. விண்ணகப் பயணிகளாக வாழும் நாம், இப்புனிதர்களின் அருள்துணையினாலும், பரிந்துரையாலும் நமது ஆன்மாக்களை புனிதப்படுத்தி இறைவனது புனிதர்களாக வலம்வருவோம்.
இறையடியார் லூர்து சேவியர், புனிதராக உயர்த்தப்பட திருச்சபை அவருடைய வாழ்வை முறைப்படி பரிசோதிக்கிறது. புனிதர் என்பவர் முதலில் நல்ல மனிதராக, தனது பலகீனத்தோடு போராடியவராக இருந்திருக்க வேண்டும் என்பதை சோதித்துப் பார்க்கிறது. புனிதையாக அறிவிக்கப்பட்ட அன்னை தெரசா, தன் ஆன்மீக அனுபவத்தை கூறுகையில், தொழுநோயாளருக்கு, மருத்துவம் செய்யும்போது அருவருப்பும், பயமும் இருந்தது. ஆனால் அதனை பலிவாழ்வின் ஒரு பகுதியாக நினைத்து துணிந்து மருத்துவம் செய்தேன் என்கிறார்.
மனிதத்தில் மலர்வதுதான் புனிதம்.
புனிதத்தை யாவரும் அணிந்து கொள்ளலாம்.
மனிதத்தில் மலர்வதுதான் புனிதம்.
புனிதத்தை யாவரும் அணிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment