கிறிஸ்து அரசர் திருவிழா 20 11 2016
2 சாமு 5 : 1 - 3; கொலோ 1 : 12 - 20; லூக் 23 : 35 -45
மாவீரன் அலெக்ஸாண்டர் இந்தியப் பெருங்கடலின் கடற்கரை மணலில் நடந்து சென்ற போது துறவி ஒருவர் தமது நாயோடு ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். மாவீரன் தம்மோடு இருந்தவர்களைப் பார்த்து இந்தியாவை வெல்வேன், பின் உலகத்தையே வெல்வேன். உலகம் முழுவதையும் வென்றப் பிறகு, நிம்மதியாக ஓய்வெடுப்பேன் என்றார்.இதைக் கேட்ட துறவி மாவீரனிடம், நானும் எனது நாயும் ஒரு சின்ன இடத்தைக் கூட வெல்லாமல் நிம்மதியாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறோம். ஓய்வுதான் உன் கடைசி இலச்சியம் என்றால், இப்போது இந்த அழகான ஆற்றங்கரையில் எங்களுடன் சேர்ந்து கொள். இறுதி காலத்தில் ஓய்வு எடுப்பதற்காக ஏன் உலக மக்களை இப்போது துன்பத்தில் ஆழ்த்த வேண்டும்? என்று கேட்டார்.
அன்பு என்றால் என்ன? பகிர்தல் என்றால் என்ன? என்பதை அறியாமலேயே அலெக்ஸாண்டர் மரித்துப் போனார். அவர் புதைக்கப்பட்டார்.
அவரின் வீரம் சில காலமே பேசப்பட்டது. நாட்டை ஆளவேண்டும், உலகை ஆளவேண்டும் என்று எண்ணி, அன்பை ஆயுதமாகவும், கொடுப்பதை கொள்கையாகவும் கொண்டு எல்லோராலும் போற்றப்படும் அரசராக அவர் வாழவில்லை.
இந்த உலகத்தில் எத்தனையோ அரசர்கள் தோன்றி, சரித்திரத்தில் பல சாதனைகள் புரிந்து மறைந்தார்கள்.
செல்வத்திற்காக நாடுகளை வென்றவர்கள் ... மற்றவர்கள் தன்னை போற்ற ... புகழ ... என்று நாடுகளை வென்றவர்கள் உலகில் தலைசிறந்த மன்னன் என்று தன்னை வாழ்த்த, புகழ வேண்டும் என நினைத்தவர்கள். எல்லோருமே இன்று இல்லை. இப்படி பல அரசர்கள் தோன்றி மறைந்தாலும், நேற்றும், இன்றும், என்றும் அகில உலக மக்களின் இதயங்களில் நிரந்தரமான இடத்தைப் பிடித்த ஒரு அரசர் உண்டு. அவர்தான் கிறிஸ்து அரசர்.
இன்றைய நற்செய்தியில் நல்ல கள்வன் இயேசுவை சரியாக அடையாளம் கண்டுகொண்டான். இயேசுவின் ஆட்சி உரிமையில் பங்குபெற்றான். இயேசுவின் கருணை மழையில் நனைந்தான். நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்.
இயேசுவுக்கு பணபலம் இல்லை, படை பலம் இல்லை. மற்றவர்கள் போற்ற, புகழ வேண்டும் என்ற எண்ணமும் இல்லை. மாறாக அன்பு என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி, மக்களின் இதயங்களில் குடிகொண்டார்.
ஆகவேதான் உலக வரலாற்றில் மட்டுமல்ல, மக்களின் இதயங்களிலும் வாழ்கிறார். இவரது அரசாட்சி, காலத்தையும், இடத்தையும் கடந்தது. “தாவீது வம்சத்தில் ஓர் அரசர் தோன்றுவார், அவரது ஆட்சிக்கு முடிவே இராது” (2 சாமு 7 : 16) என்று படிக்கின்றோம். இயேசுவின் வாழ்வில்,
-ஏழ்மையும், எளிமையும் அணிகலன்கள்.
-முள்முடி அவரது கிரீடம்.
- ஆடு மேய்ப்பவர் கையில் வைத்திருக்கும் கைத்தடியே அவரது செங்கோல்.
- சிலுவையே அவரது அரியணை.
- அன்பே அவருடைய ஆயுதம்.
- மக்களுடைய இதயமே அவரது அரண்மனை.
- இவ்வுலக அரசர்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவர் கிறிஸ்து அரசர்.
இன்று, இயேசு, நம்மில் விரும்பும் அரசு எது?
இரணடாம் வாசகத்தில் பவுல் அடிகளார், இறைமக்களுக்கான ‘ஒளிமயமான உரிமைப் பேற்றில் பங்குபெற உங்களை தகுதியுள்ளவர்கள் ஆக்கியுள்ளார்’ என்று கூறுகிறார். எனவே நாம் பங்குபெறும் அரசு
‡ சுயநலமில்லாத அரசு
‡ வேற்றுமையில் ஒற்றுமை காணும்அரசு
‡ பெறுவதைவிட கொடுப்பதை விரும்பும் அரசு
‡ சகோதர பாசத்தை தேடும் அரசு
‡ தேவைப்பட்டால் உயிரையே கொடுக்கும் அரசு
புனித பவுல் அடிகளார் கூறுவது போல,
- நமது உள்ளத்தில் அமைதி ஏற்படும்போது, கிறிஸ்து அரசரின் அரசாட்சியை நமது உள்ளத்தில் உணரமுடியும்.
- ஒருவர் ஒருவரை ஏற்று, மன்னித்து அன்பு செய்யும் போதும்,
- ஒற்றுமையுடனும், சமாதானத்துடனும் வாழும் போதும்,
- நீதிக்கு குரல் கொடுக்கும்போதும், கிறிஸ்து நம்மில் நிலைநாட்ட விரும்பும் இறையாட்சியை வலுப்படுத்த முடியும்.
No comments:
Post a Comment