பொதுக்காலம் 32ஆம் வாரம்
06-11-2016
2 மக்க 7 : 1 - 2, 9 - 14; 2 தெச 2 : 16 : 3 : 5; லூக் 20 : 27 - 38
கொலம்பியா - மாநில கால்பந்தாட்ட போட்டி, போட்டிக்கு முதல்நாள் குழுவின் தலைசிறந்த ஆட்டக்காரரின் தந்தை இறந்துவிட்டார். அடக்கத்திற்கு சென்றுவிட்டு போட்டிக்கு சற்று முன்னதாகவே அந்த முன்னனி வீரர் வந்துவிடுகிறார்.
குழுவின் பயிற்சியாளர் : உன் மனநிலை சரியாக இருக்காது. எனவே நீ இன்று விளையாட வேண்டாம்
.
வீரர் : உங்களுக்கு என்னைப் பற்றித்தான் தெரியும். என் தந்தையைப் பற்றி தெரியாது. என் தந்தை ஒரு பிறவிக் குருடர். நான் விளையாட்டு வீரராக உயர அவர்தான் காரணம். ஆனால் அவர் ஒரு நாள்கூட என் ஆட்டத்தைப் பார்த்ததில்லை. நேற்று அவர் இறந்தார். மிகவும் நல்லவர். அவர் நிச்சயமாக விண்ணகம் சென்றிருப்பார்.
விண்ணகத்தில் குருடர்கள் கிடையாது. அங்கிருந்து என் தந்தை பார்க்கும் முதல் கால்பந்தாட்டம் இது. தயவுசெய்து என் தந்தையை மகிழ்விக்க ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள். போட்டியில் அபார வெற்றி பெறுகிறது அவரது அணி.
மனிதன் இவ்வுலக வாழ்வில் அடைய முடியாத, இயலாத நிலையை, இவ்வுலக வாழ்விற்குப் பின் அடைய முடியும். அதைத்தான் இயேசு திட்டவட்டமாக போதிக்கிறார்.
முதல் வாசகம்
அரசனுக்கு அடிபணியாமல், திருச்சட்டத்தை மீறாமல், வீரமரணம் எய்திய 7 சகோதரர்கள் நமது நம்பிக்கைக்கு ஒப்பற்ற சான்று. அவர்களது நம்பிக்கை, இவ்வுலகில் எப்படியாவது தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள வேண்டும் என்பதில் அல்ல. மாறாக பாவம் செய்வதைவிட உயிருள்ள கடவுளை நம்பி உயிரை இழந்தாலும், உயிர்த்தெழுதலில் தங்களுக்கு வெகுமதியாக கிடைக்கும் என்று நம்பினர்.
நற்செய்தி
மோயிசனின் சட்டப்படி, ஒருவன் வாரிசின்றி இறந்துபோனால் அவனுடைய மனைவியை கொழுந்தனே மணந்துகொண்டு உடன்பிறந்தவன் செய்ய வேண்டிய கடமையை அவளுக்குச் செய்ய வேண்டும். ஆனால் சதுசேயர்கள் இயேசுவை கேள்வி கேட்டு வீழ்த்தாட்ட சதிசெய்கிறார்கள். உண்மையில் அந்தப் பெண் விண்ணகத்தில் யாருக்கு மனைவியாக இருப்பாள்? என்பதுதான் அவர்களது கேள்வி. இயேசுவை, அவர் வாயாலேயே உயிர்த்தெழுதல் இல்லை என்று சொல்ல வைக்க வேண்டும் என்பதுதான் இந்த சதுசேயர்களின் எதிர்பார்ப்பு. இயேசு இவர்களது கேள்விக்கு சாதுர்யமாக பதில் தருகிறார். சதுசேயர்களுக்கு மோசேதான் முக்கியம் என்று இயேசுவுக்கு தெரியும். ஆகவே, மோசே வழியாக பதில் தருகிறார்.
விடுதலைப் பயணம் 3 : 1 - 6இல் யாக்கோபின் கடவுள் என அறிமுகப்படுத்துகிறார்.
யாக்கோபின் கடவுள், ஆபிரகாமின் கடவுள் என்றால் அவர் வாழ்வோரின் கடவுள்; செத்துப் போனவர்களின் கடவுள் அல்ல என்ற அடிப்படையான உண்மையை தருகிறார்.
யாக்கோபு, ஆபிரகாம் இவர்கள் இறந்த பின்னும் வாழ்வதால்தான் இவர்களை இவ்வாறு இறைவன் அழைக்கின்றார்.
ஆகவேதான் - விண்ணக வாழ்வில் மணம் புரிதலைப் பற்றியும் இறப்பு பற்றியும் கவலைப்பட தேவையில்லை என்கிறார். ஏனெனில் கடவுள் வாழ்வையே விரும்புகிறார்.
இறந்தவர் மீண்டும் வந்து விண்ணக வாழ்வைப் பற்றி விளக்கியது இல்லை. ஆனால் இயேசு விண்ணக வாழ்வைப்பற்றி உறுதியாகக் கூறுகிறார். இயேசுவின் வார்த்தைகள்தான் நமக்கு சான்று. இவ்வுலக வாழ்வுடன் தொடர்பு கொண்டதுதான் மறுவுலக வாழ்வு என்னும் போது, இவ்வுலகின் அறவாழ்வு பொருள்மிக்கதாக விளங்குகிறது.
ஒரு தாலாட்டுப் பாடலோடு தொடங்குகின்ற மனித வாழ்க்கை பலரின் ஒப்பாரிப் பாடலோடு நிறைவடைகிறது.
ஒருவருக்கு சுமையாக மலர்கின்ற வாழ்க்கை நான்கு பேருக்கு சுமையாக மாறி முடிவடைகிறது.
பிறப்பு - இறப்பு இரண்டிற்கும் இடைப்பட்ட காலத்தை எப்படி வாழ்கின்றோமோ அதனைப் பொருத்துத்தான் இறப்பிற்கு பிந்தைய வாழ்க்கை அமைகிறது.
“இறையாட்சி உங்கள் நடுவே செயல்படுகிறது” (லூக் 17 - 21). இவ்வுலக வாழ்வு மறுவுலக வாழ்வின் கண்ணாடி.
இவ்வுலகில் மரணம் எப்படி நிலையானதோ அப்படியே நமது மரணத்திற்குப் பிந்தைய விண்ணக வாழ்வும் நிலையானது. விண்ணக மகிழ்வினை இங்கேயே முன்கூட்டி அனுபவிக்க முடியும். உயிர்த்தபின் வாழ்வு உண்டு என்ற நம்பிக்கையில்தான் மக்கள் தங்கள் உயிரையும் பலியாக்க தயங்கவில்லை என்று முதல் வாசகத்தில் படிக்கிறோம்.
இறையாட்சி வாழ்வு தருவது என்ற
நம்பிக்கை வாழும் பலத்தைத் தரும்.
பிறக்கின்ற மனிதனுக்கு இறப்பு நிச்சயம்.
இறக்கின்ற மனிதனுக்கு வாழ்வு நிச்சயம்
ஆனால் இருக்கின்ற நாள்களில்
தெய்வீகத்தில் மூழ்கவைக்கும் உறவு
No comments:
Post a Comment