Pages - Menu

Friday, 28 October 2016

திருப்பலி விளக்கம் 10. வார்த்தை வழிபாடு -2

திருப்பலி விளக்கம்

10. வார்த்தை வழிபாடு -2

-அருள்பணி. எஸ். அருள்சாமி, 
பெத்தானி இல்லம், கும்பகோணம்


முன்னுரை

திருவழிபாட்டில் கொண்டாடப்படுவது திருப்பலியாக இருந்தாலும் சரி, வேறு அருள் அடையாளங்களாக இருந்தாலும் சரி, முதலில் வார்த்தை வழிபாடு நடைபெற வேண்டும் என்பது இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் அழுத்தமான போதனையாகும். ‘இறைவார்த்தை வழிபாடும்’, ‘அருள் அடையாள வழிபாடும்’ (நற்கருணை வழிபாடும்) இணைபிரியாத வகையில் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன. அதாவது ‘இறைவார்த்தை வழிபாடே’ அருள் அடையாள கொண்டாட்டத்தைப் பொருள் உள்ளதாக மாற்றுகிறது. “திருஅவை நம் ஆண்டவரின் திருவுடலுக்கு வணக்கம் செலுத்துவது போலவே விவிலியத்திற்கும் என்றும் வணக்கம் செலுத்தி வந்துள்ளது. சிறப்பாக, திருவழிபாட்டில் இறைவார்த்தையையும், கிறிஸ்துவின் உடலையும் பரிமாறும் பந்தியிலிருந்து வாழ்வின் அப்பத்தைப் பெற்று கிறிஸ்தவர்களுக்கு அளிக்க  தவறுவதில்லை” என்று இறைவெளிப்பாடு கோட்பாட்டு விளக்கத்தில் (இ.வெ.21) கூறப்பட்டுள்ளது. இறைவார்த்தைக்கும் அருள் அடையாளத்திற்கும் (இங்கு நற்கருணை வழிபாட்டிற்கும்) இடையே உள்ள ஒருங்கிணைப்பை அழகாகச் சித்தரிக்கிறது.
இனி இறைவார்த்தை வழிபாட்டின் அமைப்பு முறையைப் பற்றி விளக்குவோம்.

இறைவார்த்தை வழிபாட்டின் நோக்கம்

இறைமக்கள் அனைவரும் விவிலியத்தை முழுமையாகவும் நன்றாகவும் அறிந்திருக்க வேண்டும் என்பது முதல் நோக்கமாகும். இதற்கு ஏதுவாக திருப்பலியில் பங்கெடுக்க வரும் மக்களுக்கு விவிலியத்தின் முக்கியமான பகுதிகள் எல்லாம் தேர்வு செய்யப்பட்டு பறைசாற்றப்படுகிறது. அதனால் இறைமக்கள் விவிலியத்தை அறியமுடிகிறது.

அடுத்து பறைசாற்றப்பட்ட இறைவார்த்தை மறையுரையில் விளக்கப்படுவதால் அதை புரிந்து கொள்ளவும் அதனால் அவர்களின் விசுவாசம் ஆழப்படுத்தப்படவும் முடிகிறது. இத்தகைய பின்புலத்தில் அவர்கள் நற்கருணை விருந்தில் பங்குபெறத் தகுதியாக்கப்படுகிறார்கள். இது இரண்டாவது நோக்கமாகும்.

இறைவார்த்தை வழிபாட்டின் அமைப்பு

விவிலியத்தின் கருவூலங்கள் திறந்துவிடப்பட்டு அதிகமான வாசகங்கள் வேறுபட்டதாகவும், கொண்டாடப்படும் மறைநிகழ்வு அல்லது விழாவுக்குப் பொருத்தமானதாகவும் இருக்கும்படி இவ்வார்த்தை வழிபாடு அமைக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை கொண்டாட்டங்களுக்கும் வார நாள்களின் கொண்டாட்டத்திற்கும் வேறுபட்ட இருவித கால சக்கரங்கள் அமைக்கப்பட்டு பொருத்தமானதும், கோர்வையானதுமான வாசகங்கள் தேர்வு செய்யப்பட்டு அளிக்கப்படுகின்றன.

1. ஞாயிறு வாசகங்கள்

ஞாயிற்றுக்கிழமை வாசகங்கள் மூன்று ஆண்டு காலவட்டத்தில் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு வழிபாட்டு ஆண்டும் நடப்பு ஆண்டுக்கு முன்வரும் திருவருகைக்காலத்திலிருந்து தொடங்குகிறது. எடுத்துக்காட்டாக நடப்பு ஆண்டாகிய 2016, சென்ற ஆண்டின் இறுதியில் வந்த வருகைக்காலத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையே தொடங்கிவிட்டது. இது இவ்வாண்டின் கிறிஸ்து அரசர் பெருவிழாவுக்குப் பின்வரும் சனிக்கிழமை மாலையோடு முடிந்துவிடும்.

நடப்பு ஆண்டு எந்த கால வட்டத்தைச் சார்ந்தது எனத் தெரிந்து கொள்ள பின்வரும் முறையைக் கையாளலாம். அதாவது நடைபெறும் ஆண்டை (2016) 3ஆல் வகுத்தால் மீதம் 1 வந்தால் அது முதல் ஆண்டு என்றும், மீதம் 2 வந்தால் அது இரண்டாவது ஆண்டு என்றும், மீதம் 0 வந்தால் அது மூன்றாவது ஆண்டு என்றும் புரிந்து கொள்ள வேண்டும். அதன்படி வாசகங்களைத் தேர்வு செய்ய வேண்டும். 2016இல் 3ஆல் வகுக்கும்போது மீதம் 0 வருவதால் இந்த நடப்பு ஆண்டில் மூன்றாவது வழிபாட்டு ஆண்டுக்குரிய வாசகங்கள் வாசிக்கப்படுகின்றன.

ஏன் மூன்று ஆண்டுகால வட்டம் என்று ஒரு கேள்வி எழலாம். பெரும்பாலான மக்கள் ஞாயிற்றுக்கிழமை திருப்பலிக்கு மட்டும் செல்வதால், அவர்களுக்கு முழு விவிலியத்தின் விருந்து அளிக்க மூன்று ஆண்டுகள் தேவைப்படுகின்றன. இவர்கள் தவறாமல் மூன்று ஆண்டுகளும் ஞாயிறு திருப்பலியில் பங்குபெற்று வாசகங்களைக் கேட்டால் முழு விவிலியத்தையும் வாசிக்கக் கேட்டதற்கு சமமாகும்.

ஞாயிற்றுக்கிழமைகளில் மூன்று வாசகங்கள் இடம் பெறுகின்றன. முதல் வாசகம் பழைய ஏற்பாட்டிலிருந்தும், இரண்டாவது வாசகம் புதிய ஏற்பாட்டில் திருத்தூதர்களின், சிறப்பாக புனித பவுலின் மடல்களில் இருந்தும், நற்செய்தி வாசகம் நான்கு நற்செய்திகளிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டிருக்கும். முதல் ஆண்டில் மத்தேயு நற்செய்தியும், இரண்டாவது ஆண்டில் மாற்கு நற்செய்தியும், அதோடு (அது சுருக்கமான நற்செய்தியாக இருப்பதால்) யோவான் நற்செய்தியின் ஒரு பகுதியும், அதாவது யோவான் நற்செய்தியின் 6வது அத்தியாயம் 17, 18, 19, 20, 21 ஆகிய 5 ஞாயிற்றுக்கிழமைகளில் வாசிக்கப்படும். மூன்றாவது ஆண்டு லூக்கா நற்செய்தியும் வாசிக்கப்படும். யோவான் நற்செய்தியில் எஞ்சியிருக்கும் பகுதி தவக்காலத்தின் பிற்பகுதியிலும் பாஸ்காகால ஞாயிற்றுக்கிழமைகளிலும் வாசிக்கப்படுகிறது.

பதிலுரைப் பாடல்:

முதல் வாசகம் முடிந்ததும் பதிலுரையாகத் திருப்பாடல் தொடரும். தொடக்க திருஅவையில் திருவழிபாட்டு கொண்டாட்டங்களில் திருப்பாடல்கள் ஏராளமாகப் பயன்படுத்தியதாக வரலாறு கூறுகிறது. நாளடைவில் அவற்றிலிருந்து ஒரு சில வசனங்கள் மட்டுமே கையாளப்பட்டுள்ளன. இது படிகீதம் என்று அழைக்கப்பட்டு முதல் வாசகத்திற்குப் பின் மிகக் குறுகியிருந்ததை அறிவோம்.

ஆனால் இப்பொழுது பழைய நடைமுறைக்குத் திரும்பியுள்ளோம். முதல் வாசகத்தின் கருபொருளுக்கு ஏற்றவாறு திருப்பாடல் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் பலபத்திகளைத் தொடுத்து, பொருத்தமான பல்லவியுடன் அமைத்துத் தரப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே வாசகத்திற்கு நாம் கொடுக்கும் பதிலுரையாகவும், அவ்வாசகத்தின்மீது நமது சிந்தனையைக் கிளறிவிடும் தியானப் பாடலாகவும் அமைந்திருக்கிறது. “இது இறைவார்த்தை வழிபாட்டின் முழுமையான பகுதியாகும்” என்று உரோமை திருப்பலி நூலின் பொதுப்படிப்பினை கூறுவது கவனிக்கத்தக்கது (றூணூயூனி 61). மேலும் அதே படிப்பினை கூறுவதை நோக்க வேண்டும். “வாசகங்களும், பதிலுரைப்பாடலும் இறைவார்த்தையைக் கொண்டிருப்பதால், அவற்றிற்குப் பதிலாக விவிலியம் அல்லாத வேறு பாடங்களைப் பயன்படுத்தலாகாது” (GIRM 57).

பதிலுரைப் பாடல் ‘இறைவார்த்தை வழிபாட்டின் முழுமையான பகுதி’ என்பதாலும், ‘இறைவார்த்தையைக் கொண்டிருப்பதாலும்’, இதை விட்டுவிட்டு வேறு பாடல்களைப் பாடுவது சரியல்ல என்பதைப் புரிந்துக் கொள்ள  வேண்டும்.

காலம் சென்ற அருள்பணியாளர் வில்லவராயர் சொல்வது எல்லோராலும் சிந்திக்க வேண்டியதொன்றாக உள்ளது. “இத்துணை சிறப்பு வாய்ந்த திருப்பாடல்களைப் பதிலுரைப் பாடலாக பாடுவதில் அல்லது படிப்பதில் ஏற்படும் தளர்வு நம் அறியாமையையே காட்டுகிறது. தரப்பட்ட திருப்பாடல்களைவிட அதிக பொருத்தமானப் பாடல்களைக் காண்பது அரிது. மேலும் இறைவாக்கிற்கு ஈடேது? பதிலுரைப் பாடல்களை நன்கு பயன்படுத்த கருத்துக் கொள்வோம், கற்றுக் கொள்வோம்”.

இரண்டாவது வாசகம் புதிய ஏற்பாட்டின் திருமடல்களில் இருந்து தேர்வுசெய்யப்படுகிறது. இந்த வாசகங்கள் இறைமக்களை ஒழுக்க நெறிகளில் பயிற்றுவிக்கவும், நடைமுறை வாழ்வுக்கு உகந்தனவாகவும் இருக்கும்படி தேர்வு செய்யப்பட்டிருக்கும்.

அல்லேலூயா

இந்த இரண்டாவது வாசகத்திற்குப் பின் பொதுவாக வருவது அல்லேலூயா ஆர்ப்பரிப்பாகும். இதற்கு “ஆண்டவரைப் போற்றுங்கள்” என்பது பொருள். எனவே இது ஓர் ஆர்ப்பரிப்புச் சொல். ஆதலால் இது எப்பொழுதும் பாடப்பட  வேண்டும். பாடாவிட்டால் விட்டுவிடுவது நல்லது. “அல்லேலூயா அல்லது நற்செய்திக்கு முன்வரும் வசனம் பாடப்பெறவில்லையயன்றால் அவற்றை விட்டு விடலாம்” (றூணூயூனி 63/இ) என்று திருப்பலி நூல் பொதுப் படிப்பினையில் கூறப்பட்டுள்ளது. அல்லேலூயாவுக்கு பல்லவி வாசக நூலிலிருந்து அல்லது படிக்கீத நூலிலிருந்து எடுக்கப்பெறும்.

இந்த ஆர்ப்பரிப்பின் வழியாக நம்பிக்கையாளரின் திருக்கூட்டம் நற்செய்தியில் தங்களோடு பேசவிருக்கும் ஆண்டவரை வாழ்த்தி வரவேற்கின்றது. இந்த அல்லேலூயா ஆர்ப்பரிப்பு நற்செய்திக்கு முன்னோடியாக வந்து, நற்செய்தியின் சாராம்சத்தை, மையக்கருத்தை, உட்பொருளை சுருக்கமாக எடுத்துரைப்பதே இதன் நோக்கமாகும். இது தகுந்த முறையில் நற்செய்திக்குச் செவிமடுக்க நம்மைத் தயாரிக்கிறது.

இதற்கு மாறாக நம் விருப்பம்போல் அல்லேலூயா வசனத்தை மாற்றிக்கொள்ளக்கூடாது. அல்லது மனப்பாடமாகத் தெரிந்த “ஆண்டவரே பேசும், உம் அடியான் கேட்கிறேன்” என்று நினைத்தபோதெல்லாம் பாடக்கூடாது. சில நேரங்களில் எந்த வசனமுமின்றி நான்குமுறை தொடர்ந்து “அல்லேலூ, அல்லேலூ, அல்லேலூ, அல்லேலூ” என்று பாடிவிட்டு, அடுத்து “அல்லேலூயா, இயேசுவைப் போற்றுங்கள்” என்று பாடுவதைப் பார்க்கிறோம். இது சரியானதன்று. ஏனெனில் இதில் அன்றைய நற்செய்தியின் சுருக்கம் இல்லை. மேலும் அல்லேலூயா என்பதற்கு “போற்றுங்கள்” என்பதுதான் பொருள் என்பது புரியாமல் பாடுவதாக உள்ளது.

தவக்காலத்தில் அல்லேலூயா பாடுவது விடப்படும். இதற்குப் பதிலாக வாசக நூலில் குறிப்பிட்டுள்ளபடி நற்செய்திக்கு முன் வசனம் பாடப்பெறும்.

தொடர்பாடல்

பாஸ்கா ஞாயிறு, பெந்தகோஸ்து, இயேசுவின் திருவுடல், திருஇரத்தம் ஆகிய மூன்று பெருவிழா நாள்களிலும், கன்னி மரியாவின் துயரங்கள் அதாவது வியாகுல அன்னை நினைவு நாளிலும் (செப்டம்பர் 15) முதல் வாசகம், அதற்குரிய பதிலுரைப் பாடலுக்குப் பின், அல்லேலூயாவுக்கு முன் தொடர்பாடல் பாட அல்லது வாசிக்க வேண்டும். என்று குறிப்பு இருக்கிறது. இந்த தொடர்பாடல் அன்றைய விழாவின் மகிழ்ச்சி அல்லது துயர உணர்வை பிரதிபலிக்கும் விதமாக அமைந்திருக்கிறது.

பாஸ்கா ஞாயிறு அன்றும், பெந்தகோஸ்து நாளன்றும் இரண்டாவது வாசகத்திற்குப் பின் இத்தொடர்பாடல் கட்டாயமாகப் பாடவோ, வாசிக்கவோ வேண்டும். பாஸ்கா ஞாயிறு எண் கிழமைகளிலும் விரும்பினால் தொடர்பாடலைப் பாடலாம் அல்லது வாசிக்கலாம். ஆனால் மற்ற இருநாள்களிலும் தொடர்பாடலை விரும்பினால் பாடலாம் அல்லது வாசிக்கலாம் என்றுள்ளது (GIRM 64).
இயேசுவின் திருவுடல், திருஇரத்த பெருவிழாவன்று முழுமையாக அல்லது சுருக்கமாக இத்தொடர்பாடலை பாடலாம் அல்லது வாசிக்கலாம் என்று கூறுவதோடு, சுருக்கமாக எந்த பத்தியில் (விமிழிஐகுழி) இருந்து எடுக்கலாம் என்றும் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. இத்தொடர் பாடல் புனித அக்குவினா நகர் தோமாவால் அமைக்கப்பட்டது. இது “சீயோனே உன் மீட்பரைப் புகழ்வாய்” என்று தொடங்குகிறப் பாடலாகும். இது நற்கருணையின் மகத்துவத்தைப் பற்றிய பாடலாகும்.

கன்னி மரியாவின் துயரங்கள் நினைவுநாளில் ஒரு வாசகமும், நற்செய்தி வாசகமும் மட்டுமே உண்டு. எனவே முதல் வாசகத்திற்குப் பின் பதிலுரைப் பாடலுக்கு அடுத்து இத்தொடர்பாடல் இடம்பெறுகிறது. இதுவும் முழுமையாகவோ அல்லது அடையாளக் குறியிலிருந்து சுருக்கமாகவோ பாடலாம் அல்லது வாசிக்கலாம் என்றுள்ளது. இப்பாடல் சிலுவையடியில் நின்று துயருற்ற அன்னை மரியாவின் வியாகுலங்களைச் சித்தரிப்பதாக உள்ள ஓர் அழகான பாடலாகும்.

No comments:

Post a Comment

Ads Inside Post