Pages - Menu

Sunday, 30 October 2016

திருவருகைக்கால முதல் ஞாயிறு 27 - 11 - 2016

திருவருகைக்கால முதல் ஞாயிறு

  27 - 11 - 2016
எசா 2 : 1 - 5;  உரோ 13 : 11 - 14;     மத் 24 : 37 - 44

விழிப்பாய் இருங்கள், எச்சரிக்கையாய் இருங்கள்

பேய்களின் தலைவனான லூசிபரும், மூன்று குட்டி பிசாசுகளும் சேர்ந்து சதிதிட்டம் தீட்டின. “கடவுள், கடவுள் என்று கடவுள் பின்னாலே சென்று கொண்டிருக்கும் மக்களை கடவுளிடமிருந்து பிரிக்க வேண்டும். அதற்கு நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும். என்ன செய்யப் போகின்றீர்கள்?” என்று லூசிபர் ஒவ்வொரு குட்டி பிசாசையும் அழைத்துக்கேட்டது. 

முதல் பிசாசு : “கடவுளே இல்லை என்று மக்களிடம் நம்பும்படி சொல்லுவேன்” என்றது.

லூசிபர் : “அது செல்லுபடியாகாது. ஏனெனில் கடவுள் இருக்கிறார் என்பதை மக்கள் உணர்ந்து இருக்கின்றனர்” என்றது.

இரண்டாவது பிசாசு : “நரகமே இல்லை என்று சொல்லுவேன்” என்றது.

லூசிபர் : “இதுவும் பயன்தராது. ஏனென்றால், நரகத்தை பாவத்திற்கு தண்டனை தரும் இடமாக, மக்கள் தங்கள் மனசாட்சியில் அறிந்திருக்கிறார்கள்” என்றது.

மூன்றாவது பிசாசு : “நன்மை செய்ய அவசரப்படாதீர்கள். அதற்கு எதிர்காலத்தில் ஏராளமான நேரம் இருக்கிறது என்று காலம் தாழ்த்தச் சொல்லுவேன்” என்றது.

லூசிபர் : “ஓ ... பிரமாதம். நீ ஒருவன்தான் இலட்சக்கணக்கான மக்களை எனக்குப் பெற்றுத் தருவாய்” என்று சொல்லி மனதார பாராட்டியதாம்.

தீயவைகள், தீமைகள் மற்றும் இவைகளுக்கு காரணமான தீய ஆவி முதலில் நேரடியாக நமது  உடலை தாக்குவது இல்லை. மாறாக நமது உள்ளத்தையும், எண்ணத்தையும் சீர்குலையச் செய்கிறது. மனிதனை அவன் வாழ்விலிருந்து திசை திருப்புகிறது. திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறு விழாவைக் கொண்டாடும் நாம், இயேசுவின் இறையனுபவம் பெற்று வாழவும், மனிதன் உள்ள அளவில் தடுமாறாமலும், தடம் மாறாமலும், இறைவனோடு ஒன்றித்து வாழ்ந்து விழிப்புடன் வாழவும், எச்சரிக்கையுடன் செயல்படவும் இன்றைய வழிபாடு நம்மை அழைக்கிறது.

ஆண்டவரின் வருகை எதற்காக? பாவ நிலையில் சிக்கித் தவிக்கும் மனிதரை மீட்க வேண்டும். அவனுக்கு புதிய வாழ்வை ஏற்படுத்தி இறைவனிடம் கொண்டுவர வேண்டும் என்பதற்காகத்தான். ஆண்டவரது வருகையினால் நாம் பெறப்போகும் மாற்றங்கள், புதுவாழ்வு என்ன என்பதை இன்றைய இறைவாக்கு நமக்கு தெளிவுபடுத்துகிறது.

திவெ 22 : 12 “இதோ நான் விரைவில் வருகிறேன், அவரவர் செயலுக்கு ஏற்ப, அவர்களுக்கு நான் அளிக்கும் கைம்மாறு என்னிடம் உள்ளது”.
பிலிப் 3 : 20 - 21 “விண்ணகத்திலிருந்து மீட்பராய் ஆண்டவர் இயேசுகிறிஸ்து வருவார் எனக் காத்திருக்கிறோம். அவர் நமது ஆற்றலால் தாழ்வுக்குரிய நம் உடலை மாட்சிக்குரிய தமது  உடலின் சாயலாக உருமாற்றுவார்”.

எனவே இயேசு கிறிஸ்துவின் வருகை மனிதனுடைய வாழ்வில் புத்துணர்வை பாய்ச்சி அவரை புதிய படைப்பாக் மாற்றுவதுதான் என்பது தெரிகிறது.

இறைவன் நம்முடைய பாவ இருளை உணரவைத்து, புண்ணிய வாழ்வில் மனிதனை சேர்க்க வைப்பதற்காக எடுக்கும் பெறும் முயற்சிதான் இயேசுகிறிஸ்துவின் வருகை.

1 கொரி 4 : 5 “ஆண்டவரின் வருகையின் போது அவரே இருளில் மறைந்திருப்பவற்றை வெட்ட வெளிச்சமாக்குவார்”.

இன்றைய நற்செய்தியில், “விழிப்பாயிருங்கள், உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது” என்கிறார் இயேசு.

விழிப்பாய் இருப்பது என்பது அர்த்தமுள்ள, பயனுள்ள வாழ்வை வாழ்வது.

எதிர்காலத்தில் அல்லாமல் நிகழ்காலத்தில் கவனம் செலத்தி விழிப்புடன் வாழ்வது.

தீமைகளிலிருந்தும், பாவத்திலிருந்தும் நம்மையே காத்து ஒளியின் மக்களாக வாழ முயற்சிப்பது.

முதல் வாசகத்தில், ‘ஆண்டவருடைய நாள்களில் வன்முறைகள், எதிர்மறைகள் நீங்கி உடன்பாடான வாழ்வு உண்டாகும்’ என்று எசாயா கூறுகிறார். இரண்டாம் வாசகத்தில், ‘இறுதி இக்காலத்தில் தீய இச்சைகளைத் தூண்டும் ஊனியல்பின் நாட்டங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம்’ என்கிறார் பவுல் அடிகளார்.

இறைவாழ்வில் விழிப்புடன் கவனம் செலுத்தி, மனித வாழ்வில் எச்சரிக்கையாக இருப்போம்

No comments:

Post a Comment

Ads Inside Post