Pages - Menu

Wednesday, 5 October 2016

நான் எழுத்தாளன் ஆனேன்

நான் எழுத்தாளன் ஆனேன்

- லெயோ ஜோசப்
12. பெயர் மாற்றம் பொன்விழா

நாடகம் எழுத ஆரம்பித்தேன். சகோதரர் யஹன்றி மாலை நாலு மணியளவில் அறைக்கே காபி கொண்டு வந்துவிடுவார். இரவு சாப்பாட்டுக்கு என்னை அழைத்துப் போய்விடுவார். சகோதரர்களுடன் சாப்பாடு, எனக்கு மட்டும் பால்.

ரெக்டர் அவ்வப்போது நாடகத்தைப் படித்துப் பார்ப்பார். திருத்தங்கள் சொல்வார். அவர் சொல்லும் திருத்ததங்கள் அத்துணை பொருத்தமாக இருக்கும். மூன்று நாட்களில் நாடகத்தை எழுதி முடித்து விட்டேன். நாடகத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கிராண்ட் ரிகர்சல், என்னையும் அழைத்திருந்தார்கள். ஒரு பேடும், பேப்பர்களும் கொடுத்து விட்டார்கள். நான் குறைகளை சொல்ல வேண்டும். நடிகர்கள் திருத்திக் கொள்வார்கள்.

நாடகம் முழு வெற்றி பெற்றது. சகோதரர் யஹன்றி எனக்கு 50 ரூபாய் கொடுத்தார். நாடகத்துக்காக 100 ரூபாய் கொடுப்பதாக முடிவு செய்திருந்தார்களாம். நாடக ஆசிரியரையும், என்னையும் மேடையில் ஏற்றி கெளரவிப்பதாக இருந்தார்களாம். முழு நாடகத்தையும் சைக்ளோஸ்டைல் செய்து விற்பனைக்கு வைத்திருந்தார்களாம். அவர் அதை ஆட்சேபித்திருக்கிறார். இதனால் இருவரையும் மேடையேற்றவில்லை.

நான் புனித சின்னப்பர் குருத்துவக் கல்லூரியின் ஆஸ்தான நாடக ஆசிரியர் ஆகிவிட்டேன். அதன்பிறகு நாலைந்து ஆண்டுகளுக்கு நான்தான் நாடகம் எழுதிக் கொடுத்தேன்.

பிலோமினாள் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சிஸ்டர் பெல்லா போனில் அழைத்தார்கள். போனேன் ‘எங்க சபை ஆரம்பத்துல ‘வியாகுல மாதா சபை’ என்ற பெயரில்தான் தொடங்கியது. திருச்சி, எடத் தெருவைச் சேர்ந்த 5 பெண்களால் ஆரம்பிக்கப்பட்டது. நாளடைவில் ‘மரியின் ஊழியர் சபை’ எனப் பெயர் மாற்றம் அடைந்தது. இப்போது பெயர் மாற்றப் பொன்விழா கொண்டாடப் போகிறோம்’.

‘அதுக்கு ஒரு நாடகம் வேணும். நீங்கதான் நல்லா நாடகம் எழுதுவீங்களே! இங்க சிஸ்டர் கொரோனா, சபை வரலாறு ஒன்று எழுதியிருக்காங்க. அது புத்தகமா எங்ககிட்ட இருக்கு. அத உங்ககிட்ட தரோம். நீங்க அத நாடகமாக எழுதித் தரணும்’ என்றார்.

‘ஆமா, நான் நாடகம் எழுதுவேன்னு யாரு உங்ககிட்ட சொன்னது?’ என்று கேட்டேன்.
‘நாங்கதான் செமினரி நாடகத்துக்கு வந்தோம்ல!’ என்று சிரித்தார்.
‘சரி சிஸ்டர், யாரு நடிக்கப் போறாங்க?’
‘எங்க நாவிஸ்ங்கதான். நீங்கதான் பயிற்சியளிக்கணும். எங்க நோவி´யேட் காஜா பேட்டையில இருக்கு. தினமும் போய் பயிற்சி குடுக்கணும். முடியுமா?’ என்று கேட்டார்.

‘சரி!’ என்றேன். தினசரி வேலை முடிந்ததும் நோவி´யேட்டுக்குப் போவேன். எந்தெந்த கேரக்டர்களில், யார் யாரைப் போடுவது என்று அவர்களே முடிவு செய்து வைத்திருந்தார்கள். அதனால், என் வேலை சுலபமாகி விட்டது. பயிற்சியளிப்பேன். இரவு சாப்பாடு அங்கு தான். வீட்டுக்கு வந்து விடுவேன்.

ஒரு மாதம் ஓடிவிட்டது. எல்லோரும் நன்றாகப் பயிற்சியடைந்து விட்டார்கள். செமினரியன்களுக்காக ஒரு நாளும், பொது மக்களுக்காக ஒருநாளும் ஆக இரண்டு நாட்கள் நாடகம் நடைபெற்றது. நாடகத்தில் சில புதிய முயற்சிகளைக் கையாண்டிருந்தோம்.

மாடியில் சில பேர் பேசுவதாக ஒரு காட்சி. மாடிக்குப் படிகள் ஏதும் கிடையாது. கைப்பிடிச் சுவர் மாதிரி ஒரு செட்டப் செய்திருந்தோம். சிலர் பேசிக் கொண்டிருப்பார்கள்; கதாநாயகி வந்து பேச்சில் கலந்து கொள்வார். நான் ஏற்கனவே கதாநாயகியாக நடிக்கும் பெண்ணிடம் சொல்லியிருந்தேன். உட்கார்ந்து, கொஞ்சங் கொஞ்சமாக எழுந்து வரவேண்டும் என்று. அவரும் அப்படியே செய்தார்.

வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு, மாடிப் படியில் ஏறி வருவது போன்றே இருந்தது.                              
 (இன்னும் சொல்வேன்

No comments:

Post a Comment

Ads Inside Post