Pages - Menu

Wednesday, 5 October 2016

தூய்மை வாழ்க்கையால் துன்பத்தை துரத்துவோம்

தூய்மை வாழ்க்கையால் துன்பத்தை துரத்துவோம்

- பேராசிரியர். ச. சாமிமுத்து, திருச்சி

உலகில் எல்லோருடைய வாழ்க்கையிலும் இன்ப, துன்பங்கள், வெற்றி தோல்விகள் இருக்கத்தான் செய்கின்றன. இரவும், பகலும் போல இவை மாறி மாறி வந்து கொண்டுதான் இருக்கும். இது மனித வாழ்க்கையில் உள்ள எதார்த்தம். இப்படி அமைந்துள்ள நம் வாழ்க்கையில், மனிதர் வாழவேண்டிய முறை அறிந்து, அப்படித்தான் வாழவேண்டும்.

மனிதனுடைய மனம் ஒரு குரங்கு போன்றது என்று கூறுவர். குரங்கு ஒரு நிலையில் இல்லாமல் கிளைக்குக் கிளை தாவித் திரிவதைப் போல் மனமும் நல்லது, கெட்டது, என்பவற்றிலே, நேரத்திற்கும், விருப்பத்திற்கும் ஏற்ப, தாவித்தான் பார்க்கும். ஆனால், மனிதனுடைய மனம் குரங்கினுடைய ஐந்தறிவினைப் போன்றது அன்று. மனிதனுடைய மனம் என்பது அவனுக்கே உரிய ஆறாவது அறிவாகும். “மாவும், மாக்களும் ஐயறிவினவே மக்கள் தாமே ஆறறிவுயிரே”, என்பது தொல்காப்பியம், ஆய்ந்து கூறும் உண்மையாகும்.

“ஆறறி வதுவே அவற்றொடு மனனே”, என்பது தொல்காப்பிய நூற்பா. மனிதனுக்கே உரிய மனம், அவனுக்கே உரிய ஆறாவது அறிவாகும். அதைத்தான் நாம் பகுத்தறிவு என்று சொல்லுகின்றோம். நல்லதன் நலனும் தீயதன் தீதும் பகுத்தறிகின்ற அறிவுதான் பகுத்தறிவு.

மனிதன், தன் மனத்தைப் போகின்ற போக்கில் போகவிடுவது அவன் பெற்றிருக்கும் பகுத்தறிவுக்கு இழுக்காகும். எனவே, நம் எண்ணம், சொல், செயலை நன்றியின்பால் உய்ப்பதுதான் செலுத்துவதுதான், நல்லறிவின் - பகுத்தறிவின் தன்மை.
“சென்ற விடத்தால் செலவிடாத தீதொரீஇ 
நன்றின்பால் உய்ப்பது அறிவு”
என்பது, மனித வாழ்வு மேம்படத் திருவள்ளுவர் வகுத்துக் கூறும் வழியாகும்.

மனம் தூய்மையாய் இருப்பின், அது தீமைக்கு இடமளிக்காது. வெளிச்சம் இருக்கும் இடத்தில் இருட்டுக்கு வேலை இல்லை. எனவே, நாம் எண்ணத்தால், சொல்லால், செயலால் தூய்மை உடையவர்களாக இருப்பின், நம் மனமும் தூய்மை உடையதாக இருக்கும். அந்தத் தூய மனத்தில்தான் ‡ உள்ளத்தில்தான் இறைவன் குடிகொள்ளுகின்றான்.

இறைவன் விரும்புவது நாம் அள்ளிக் கொடுக்கும் பொன்னையும், பொருளையும் அல்ல. அள்ளித் தூவும் வெள்ளை நிற மலரையோ அல்லது வேறு எந்த நிற மலரையோ அல்ல. அவன் விரும்புவது நம் தூய உள்ளத்தைத்தான். உள்ளமாகிய தாமரை மலரைத்தான். அதில்தான் அவன் விரும்பி வந்து தங்குகின்றான்.
வெள்ளை மலருமல்ல வேறு எந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது
என்பதுதான் ஆன்றோர் அறிந்துரைக்கும் உண்மை.

இறைவன் உண்மை வடிவினன்; நன்மை வடிவினன். அவ்வடிவினன் நம் உள்ளத்தில் குடிகொண்டு இருக்கும்போது அந்த உள்ளத்தினின்று வெளிப்படுவது அனைத்தும், உண்மையானவையாக, நன்மையானவையாகதான் இருக்க முடியும். ஒளியாக இறைவன் இருக்கின்றான். வள்ளலாரும், இறைவனை “அருட்பெரும் சோதி, தனிப்பெருங் கருணை என்கின்றார். பாரதியாரும், உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினில் ஒளி உண்டாகும்” என்கின்றார்.

மனிதனின் தூய மனம், உண்மை ஒளி தங்கும் இடம். மனத்தின் இயல்பான இப்பண்பைக் குழந்தை இடத்தில் காண்கின்றோம். குழந்தை மனத்தில், கள்ளம் துள்ளுவது இல்லை. வஞ்சம் கொஞ்சுவதில்லை!
‘அறம், மனத்தின் மாசற்ற தன்மையே’ என்பது வள்ளுவரின் சித்தாந்தம். அதனால்தான் “மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்து அறன்” என்றார்.
தூய்மை என்பது நம் மனத்தை - உள்ளத்தைப் பொறுத்தது. நம் உள்ளம் தூய்மையாய் இருந்தால் நம் சொல்லும், செயலும் தூய்மையாய் இருக்கும். இதற்கு ஒரு சான்று என் வாழ்க்கையிலிருந்தே இவண் குறிப்பிட விரும்புகிறேன்.

நான் 1990இல் திருச்சித் தூய வளனார் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றேன். அதன்பிறகு 1992இல் திருச்சியில் உள்ள தில்லை நகருக்கும் அண்ணாமலை நகருக்கும் இடையில் ஒரு வயல் பகுதியில் இடம் வாங்கி எங்கள் குடும்பத்திற்கு  சொந்தமான வீடுகட்ட ஆரம்பித்தேன். என் வீட்டு இடத்திற்கு அருகில் திரு.பாலசுப்பிரமணியம் என்னும் ஒரு நண்பரும் இடம் வாங்கி வீடு கட்ட ஆரம்பித்தார். நாங்கள் வீடு கட்டி முடித்த பிறகு, எதிர்காலத்தில் அப்பகுதியில் மற்றும் சிலர் வீடு கட்டுவார்கள் என்று எண்ணியதால், அப்பகுதிக்கு ஒரு பெயர் வைத்துப் பெயர்ப் பலகை வைக்கலாம் என்று முடிவு செய்து நான் நண்பர் பாலசுப்பிரமணியத்திடம் நல்ல ஒரு பெயர் சொல்லும்படி கேட்டேன். இவர் இலட்சுமி நகர் என்று வைக்கலாம் என்றார். இந்தப் பெயரை இங்கு வீடுகட்டும் பலரும் விரும்புவார்கள் என்றார். நான் அதற்கு மறுப்புக் கூறாமல் எந்தச் சமயச்சார்பும் இல்லாத ஒரு பொதுப் பெயராக இருப்பது நல்லது என்றேன். மேலும், நாம் வீடுகள் கட்டும் தெற்கில் உள்ள தில்லை நகர் என்பது தில்லை நடராசரை நினைவுபடுத்துவதாகவும், வடக்கில் உள்ள அண்ணாமலை நகர், திருவண்ணாமலையாரை நினைவுபடுத்துவதாகவும் உள்ளனவே என்றேன். அவர் என்னிடம் ஒரு பெயர் சொல்லச் சொன்னார். நான் காவிரி நகர் என்று வைக்கலாம் என்றேன். அப்பெயரை வரவேற்ற அவர், அதில் ஒரு சிறு மாற்றம் செய்து காவிரிக்குப் பதிலாகக் காவேரி என்று வைக்கலாம் என்றார்.

நான் இதற்கு மறுப்புக் கூறாமல் சரி சிந்தித்துப் பார்ப்போமே என்றேன். உடனே அவர் இரண்டும் ஒரு பெயர்தானே, இதில் என்ன தயக்கம் உங்களுக்கு? என்று கேட்டார். தயக்கம் ஒன்றும் இல்லை. ஆனால், காவேரி என்பது ஒரு சமயச் சார்புடையதாக இருக்கிறது. அதனால்தான் இந்து சமயத்தார் பெண்களுக்குக் காவேரி  என்று பெயர் சூட்டுகின்றார்கள் என்றேன். அவரும் அதைப் புரிந்து கொண்டு அப்படி என்றால் காவிரி என்றே வைப்போம் என்றார். அதன் பிறகு அவர் காவிரி என்றால் ... என்று இழுத்தார். அவருடைய நல்ல உள்ளத்தைப் புரிந்துக் கொண்ட நான் ஐயா, கா+விரி என்றால் சோலை விரிந்த இடம் என்பது பொருள். இதில் எந்தச் சமயச் சாயலும் இல்லை. காவிரி என்பது ஆற்றை மட்டும் அதன் இயற்கைச் சிறப்பை மட்டும் குறிக்கும் சொல் என்றேன்.

அப்போது எங்களுடைய உள்ளங்களில் எந்த ஒரு தன்னலத் தன்மையும் இல்லாமல் தூய, பொதுமை நோக்கத்தின் தன்மையே பளிச்சிட்டது. எதிர்காலத்தில் இப்பகுதியில் வீடு கட்டிக் குடியேறும் இந்துக்களும், கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் பெயரை முன்னிட்டு மனக்கசப்புப் கொள்ள இடமே இல்லை என்பதை நாங்கள் இருவரும் உணர்ந்தோம்.

எந்த மன அப்பழுக்கும் இல்லாதவாறு அன்று அந்தப் பெயரை நாங்கள் வைத்ததால், இந்தக் காவிரி நகரில் வீடுகட்டிக் குடியேறிய அனைவரும் ‘மனித நேயமே இறைநேயம்’ என்பதை உணர்ந்து உறவு பாராட்டி வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். தூய மனப்பாங்கின் பாற்பட்ட வாழ்க்கையால், சமயக் காழ்ப்புணர்ச்சியால் வரும் துன்பத்தைத் துரத்தி வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.

உலகில் வாழும் நாம், நம் மனத்தைத் தூயதாக வைத்திருந்தால், மன அழுத்தம் இருக்காது. மன மயக்கம், சஞ்சலம் இருக்கமாட்டா. ஆகவே, நம் மனத்தூய்மையைக் கெடுக்கும், பொறாமையையும், ஆசையையும், கோபத்தையும், கடுஞ்சொற்களையும் விட்டுவிட்டால், நம் மனம் - உள்ளம் தூய்மை வாழும் கோவிலாக இருக்கும்.

நாம் வாழும் வாழ்வு, நீதி, நேர்மை உடையதாக, அன்பு, அறமுடையதாக, பழித்துப் பேசாத பண்பு உடையதாக இருக்கும். பிறரிடம், குற்றங் கண்டு, குத்திப் பேசும், இழிகுணங்கள், அற்றதாக இருக்கும்.

எல்லா உயிர்களிடத்தும், நாம் அன்புடையவர்களாகவும், நடுநிலைமை தவறாதவர்களாகவும், அடக்கமும், ஒழுக்கமும் கொண்ட, உள்ளம் படைத்தவர்களாகவும் இருக்கும்போதுதான், நம் வாழ்வு செம்மையானதாக இருக்கும். நாமும் பிறரும் இன்புற்றிருப்போம்.
வாய்மையே வெல்லும்!
தூய்மையை பேரின்பம் நல்கும்!

No comments:

Post a Comment

Ads Inside Post