Pages - Menu

Friday, 28 October 2016

மரணமில்லா பெரு வாழ்வு நோக்கி

மரணமில்லா பெரு வாழ்வு நோக்கி

நவம்பர் மாத சிறப்புக் கட்டுரை

- அருள்பணி. அ. பிரான்சிஸ், பாபநாசம்

மரணம், சாவு ஆகியவை மனிதருக்கு ஆழ்ந்த அச்சத்தினையும், துக்கத்தினையும் உருவாக்கும் சொற்கள். பிறப்பும், இறப்பும் இயற்கையின் எதார்த்தங்கள். மரணமில்லாப் பெருவாழ்வில் திளைத்திடவே மனிதர் படைக்கப்பட்டார். படைத்தவரையே மதியாது ஆணவத்தினால் மனிதரே வருவித்துக் கொண்டவையே இறப்பு. மருத்துவம் மனித வாழ்வின் மரணத்தினை கீழ்க்கண்டவாறு பகுக்கின்றது.

1. 1. NECROBIOSIS: மனித உடலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான செல்கள் அழிகின்றன. புதிய செல்கள் பிறக்கின்றன. இது வாழ்க்கைச் சுழற்சியின் இறப்பு.

2. NECROSIS: ஏதேனும் ஒரு காரணத்தினால் நமது உடலின் ஒரு பகுதியோ அல்லது ஒரு உறுப்போ முற்றிலும் செயலிழந்து விடுதல். உடலின் ஒரு பகுதியிலோ, ஓர்  உறுப்பிலோ இரத்த ஓட்டம் தடைபடுவதனால் இது ஏற்படுகின்றது.

3. CLINICAL DEATH: சுவாசமில்லை, குருதியோட்டமில்லை, மூளைச் செயல்பாடுகள் இல்லை. ஆனால் இதுவே முழு மரணம் அல்ல. மரணத்தின் தொடக்க நிலை. உதாரணத்திற்கு ஹார்ட் அட்டாக்  இதயம் தனது செயல்பாட்டை ஒரு சில நிமிடங்கள் நிறுத்திக் கொள்ளும். இது ஒரு நான்கு நிமிடங்கள் நீடிக்கும். அதற்குள் CARDIO PURMONARY RESUSCITATION CCRPI என்ற முறையில் செயற்கை சுவாசமூட்டியும், செயற்கை முறையில் இதயத்தை செயல்படத் தூண்டியும் செயல்பட வைக்கலாம்.

4. . BRAIN DEATH: உயிர் வளியோட்டம் இல்லாது 3லிருந்து 7 நிமிடங்கள் வரை ஓரளவிற்குத் தாக்குப் பிடிக்கும். மூளைச் சாவு ஏற்பட்டுவிட்டால் மற்ற உறுப்புகளுக்கு செயல்படத் தெரியாது. இதற்குப் பின் எவரையும் மரணத்திலிருந்து மீட்டெடுக்க முடியாது.

5. SOMATIC DEATH : இது நிச்சயமாக இறப்பு நிலையே. மேற்சொல்லப்பட்ட 3‡4 பகுதிகளின் கூட்டுநிலை செயற்கை சுவாசமும், குருதியோட்டமும் அளித்து செயல்பாட்டில் வைக்க முடியும். இந்தச் செயற்கை நிறுத்தப்பட்டால் உறுதியான இறப்பு நிலைதான்.

உடலின் இறப்பிற்கு பின் ...

ஆத்மாவுக்கு பிறப்போ, இறப்போ கிடையாது. ஒரு முறை இருந்து பிறகு அவர் இல்லாமல் போவதுமில்லை. அவர் பிறப்பற்ற, நித்தியமான என்றும் நிலைத்திருக்கும் மரணமற்ற, மிகப் பழமையானவர் ஆவார். உடல் அழிக்கப்பட்டாலும் ஆத்மா அழிக்கப்படுவதில்லை - பகவத் கீதை 2 . 20.

கரந்த பால் மடி புகா
உடைந்த சங்கில் ஓசை புகா
பிரிந்த  உயிர் மீண்டும்
உடல் புகா - ஆத்மபோதா நிர்விப்தா நந்தா.

நெற்றிக்கு நேரே நிறைந்த ஒளிகாணில்
முற்றும் அழியாது உடம்பு
அகம்புறம் பேராப் பொருளை அறியில்
உகம்பவ காட்டும் உடம்பு - ஒளவைக் குறள்

ஊன உடம்பே ஒளி உடம்பாய் ஓங்கி நிற்க
ஞான அமுதெனக்கு நல்கியதே - வானப்
பொருட் பெருஞ்சோதிப் பொதுவாழ்வில் விளங்கும்
அருட் பெருஞ்சோதி அது - வள்ளலார்.

ஒளியாகிய பேரொளியில் உடல் கலப்பதால் ஒளி உடம்படைந்த ஒருவரின் உடலில் மண்பூதமே இருக்காது.

வாழ்வின் நூல் :

திவெ 3 : 4, 5 வாழ்வின் நூல் குறிப்பைத் தருகிறது. இதில் இடம்பெறத் தகுதி பெற்றவர் யார் என்றும் குறிப்பிடுகிறது.

1. கொடிய வேதனையினின்று மீண்டு, தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் தோய்த்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள். திவெ 7 : 14.

2. கற்றதையும், கேட்டதையும் நினைவில் கொண்டு கடைப்பிடித்து வாழ்ந்தவர்கள். திவெ 3 : 3.

3. தீட்டுப்படாது. அருவருப்பானதைச் செய்யாது, பொய்மையின்றித் திகழ்வோர். திவெ 21 : 27.

திருச்சபையின் பாரம்பரியப் படிப்பினையின் அடிப்படையில் திருச்சபை மூன்று வடிவங்களைக் கொண்டது.

1. பயணிக்கும் திருச்சபை (Pilgrim Church):

இது இம்மண்ணக வாழ்வில் பயணிக்கும் மனிதர்களாகிய நம்மைக் குறிக்கிறது.

2. துன்புறும் திருச்சபை (Suffering Church):

இவ்வுலக நாட்களில் பாவம் புரிந்தாலும் அதற்குரிய பாவ அழுக்கினைப் போக்குவதற்குரிய முயற்சி மேற்கொண்டும் கறைகளோடு இறப்போர், பாவப் பரிகாரம் மேற்கொள்ளும் நிலையினை அடைகின்றனர். இதுவே உத்தரிப்புத் தலம் எனப்படுகின்றது.

3. மகிமையின் திருச்சபை (Glorious Church):

பாவப் பரிகாரம் மேற்கொண்டு இறுதியில் மகிமைமிகு முடிசூழ இறைவனோடு என்றென்றும் வாழ்வோரே மகிமையின் திருச்சபையினர். இவர்களே புனிதர்கள்.

ஆக, இந்த மூவகைத் திருச்சபையினரும் இணைந்து சமூக நலன் சார் சமூக உறவினை உருவாக்குகின்றனர். இவர்களே மரணமில்லாப் பெருவாழ்வு நோக்கிப் பயணித்து வெற்றி கண்டவர்கள். நாமும் மரணமில்லாப் பெருவாழ்வு நோக்கிப் பயணித்து இறை ஒளியில் சங்கமிப்போம்.

No comments:

Post a Comment

Ads Inside Post