பாடங்களின் இமயம், இறப்பு
குடந்தை பங்கின் கல்லறை, மறைமாவட்ட மேய்ப்பு பணி அலுவலகம் அருகே உள்ளது. நான் அடிக்கடி காணும் காட்சி, மக்கள், அடிக்கடி இறந்தவரின் கல்லறைகளுக்குச் சென்று, இறந்தவர்களை நன்றியுடன் நினைவுக் கூர்ந்து அவர்களுக்காக செபிக்கிறார்கள். நம்முடன் இணைந்து வாழ்ந்து பிரிந்தவர்களை நினைக்கும்போது வாழ்வின் வெறுமை வெளிச்சத்திற்கு வருகிறது.
கவிஞர் வைரமுத்து, “உங்களால் தாங்கமுடியாதது எது?” என்ற கேள்விக்கு இவ்வாறு பதில் தருகிறார். “தாங்க முடியாதது, பழகியவர்களின் மரணம். தத்துவாகும் போது மரணம் எளிது. சம்பவமாகும்போது கொடிது. துடித்து போகிறேன். நினைவுகள் என்னும் ஆணிகளால் மாற்றி மாற்றி அறையப்படுகிறேன்” என்கிறார். ஜெயந்தி பாலகிருஷ்ணன் என்பவர், மூடர், முட்டாள் என்ற வார்த்தைகளுக்கு வேறுபாடு காட்டி விளக்குகிறார். “மூடர் என்றால், எதைப் பற்றியும் தெரியாமல் இருப்பவர், அறிவு வேண்டாம் என்று இருப்பவர். ஆனால் முட்டாள் என்பவர் தப்பு, தப்பா புரிஞ்சிக்கறவங்க. உண்மையான பதில் எது? என்று தெரியாமல் குழம்பிகிட்டு இருக்கிறவங்க” என்ற விளக்கமளித்து, இதற்கு ஒரு கதையைக் கூறுகிறார். பணம் சேர்ப்பதிலேயே வெறியாக இருந்த கஞ்ச வியாபாரியிடம் மரணம் வருகிறது. “உடனே உன்னை எடுத்துக் கொள்ள போகிறேன்” என்கிறது. “ஐயோ இவ்வளவு சேர்த்து வைத்திருக்கிறேனே. அனுபவிக்க சில காலம் கொடு” என்றான். “அதற்கு வாய்ப்பில்லை, உடனே புறப்படு” என்கிறது மரணம். “இரண்டு வினாடிகளாவது கொடு, என் கருத்தை எழுதிவைத்துவிட்டு வருகிறேன்” என்கிறான். இப்பொழுது எழுதுகிறான், “ஓடி ஓடி உழைத்து சேர்த்ததை ஒருமுறை கூட பார்க்க முடியாமல் என்னை மரணம் அழைத்து சென்றுவிட்டது” என்று எழுதி முடிக்கிறான். மரணம் அவனை கவ்விக் கொண்டது.
ஒரு முனிவரிடம் ஒருவர் சீடராக விரும்பினார். முனிவரிடம் அதற்காக கேட்டபோது, “ஒரு பத்து அடங்க சடங்கில் பங்கெடுத்து விட்டு பிறகு இங்கு வா” என்றாராம். என்னை பொறுத்தவரை மரணம், நம் குறைவான நிலையை கொத்திக் காட்டும் பறவை. மனிதர், அந்த முட்டாள் வியாபாரியைப் போல. மனிதரின் நிலையாமையை உணர்வதில்லை.
டிக் ஷார்ப்பிஸ் என்ற அறிஞர் கூறுகிறார், “இறப்பு, மனிதா, நீ நிதானத்தை கடைபிடி என்று எடுத்துக்கூறும் இயற்கையின் ஆசிரியர்” என்கிறார்.
இயேசு, “மனிதரின் வாழ்வு நிலைத்தது. எனவே களைக்க வேண்டாம். மனிதருக்கு உயிர்த்த வாழ்வு உண்டு” என்கிறார். புதுமையான கருத்து இது “என்னில் நம்பிக்கைக் கொள்பவர் இறப்பினும் வாழ்வார்” என்கிறார் (யோவா 11 ; 25). ஆனால், “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே” என்றும் கூறுகிறார். எனவே இயேசுவில் இணைந்தவர்தான், இறப்பினும் வாழ்வு பெறுகிறார். இறந்தபின்னும் வருகின்ற வாழ்விற்கு. இவ்வுலக வாழ்வு முதல்பாகம். “இறையாட்சி கண்ணுக்கு புலப்படும் முறையில் வாரது. இதோ இங்கே, அல்லது அதோ அங்கே! என சொல்லமுடியாது. ஏனெனில் இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகிறது” என்கிறார் இயேசு (லூக் 17 ; 20 - 21).
எனவே தான், பவுல் அடிகளார், மரணம் தருகின்ற வீண் பயத்தை விரட்டியடிக்கிறார். “சாவே உன் வெற்றி எங்கே? சாவே உன் கொடுக்கு எங்கே?” என்கிறார்.
நம்மில் ஒவ்வொருவரிடமும் புதைந்திருக்கும் இறப்பு, எளிமையையும், பணிவையும் பிறப்பிக்க வேண்டும். மன்னிப்பையும், இனிமை பண்பையும் அழைத்து வரவேண்டும்.
நம்மை விட்டு பிரிந்த நம் உறவுகள் நமக்கு பாடமான முன்னோடி. அவர்களை இம்மாதத்தில் சிறப்பாக நினைப்போம். அவர்களின் நினைவில் நனைவதோடு, வாழ்வின் பெருமையை உணர்வோம். நற்செய்கைகளால் நிலைவாழ்வோடு இணைவோம்.
No comments:
Post a Comment